வாசிங்டன், ஆக.9- காலநிலை மாற்றத்தால் பசிபிக் பெருங்கடலில் உருவாகி வரும் வெப்பம் பல நூற்றாண்டுகளில் மனிதகுலம் சந்தித்திராத மிகக் கடுமையான காலநிலை நிகழ்வாக மாறக்கூடும் என்று அமெரிக்க வானிலைஆய்வாளர் ரியான் மாவி எச்சரித்துள்ளார்.
பசிபிக் பெருங்கடலில் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரு வானிலை மாற்றம் அதிவேகமாக வலுவடைந்து வருகிறது. இது, கோடிக்கணக்கான மக்களின் உயிரிழப்பிற்கு வழிவகுக்கக்கூடிய பேரழிவோடு ஒப்பிடும் வகையில் அமையும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.கடந்த பல ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் கடந்த சில வாரங்களாக மிக அதிகமான வெப்பம் உலக நாடுகளில்பதிவாகி வருகின்ற நிலையில் தான் ரியான் மாவி இத்தகைய எச்சரிக்கையை விடுத்துள்ளார்.1877 ஆம் ஆண்டு ஏற்பட்ட எல் நினோ தாக்கத்தின் காரணமாக உலகளவில் சுமார் 5 கோடி மக்கள் (3-4 சதவிகிதம்) உயிரிழந்தனர்.
தற்போது வரவிருக்கும் ‘எல் நினோ’ வானது “காட்ஜில்லா எல் நினோ” எனவும் குறிப்பிடப்படுகின்றது. இக்காலக்கட்டத்தில் ஏற்படக்கூடிய வெப்ப அலைகள், வறட்சி மற்றும் நோய்கள் காரணமாக ஏற்படும் பாதிப்புகளும் மனிதப்பேரழிவுகளும் 1877 ஆம் ஆண்டு இந்த உலகம் சந்தித்ததை விட அதிகமாக இருக்கும் என கூறப்படுகின்றது. இந்த ‘எல் நினோ’ ஒருவேளை 500 முதல் 1000 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிக வலிமையானதாக இருக்கும்.மேலும் அச்சு இயந்திரம் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு மனிதகுலம் சந்தித்த மிகக் கடுமையான காலநிலைநிகழ்வாக இது இருக்கக்கூடும் என்றும் ரியான் மாவி தனது கட்டுரையில் எழுதியுள்ளார்.
ஆஸ்திரேலியாவின் வானிலை ஆய்வு மய்யம், எல் நினோ இப்போது உறுதியாக உருவெடுத்து தொடர்ந்து வலுவடைந்து வருகிறது என்றும் கூறியுள்ளது. மத்திய வெப்பமண்டல பசிபிக் பெருங்கடலின்வெப்பநிலை சராசரியை விட 1.94 டிகிரி செல்சியஸ் உயர்ந்துள்ளது. இது ஜூலை மாதம் கடைசி இரு வாரங்களில் அரை டிகிரி வரைதிடீரென அதிகரித்துள்ளது. எல் நினோவிற்கான தொடக்க நிலை 0.8 டிகிரிசெல்ஸியஸ் ஆகும். இந்த நிகழ்வு வெப்பநிலையின் அளவானது மிகப் பெரும் உச்சத்தை எட்டலாம் அல்லது அதையும் தாண்டலாம் என்ற அச்சத்தைஉருவாக்கியுள்ளது.
அமெரிக்காவின் தேசிய பெருங்கடல் மற்றும் வளி மண்டல கண்காணிப்பு அமைப்பு, அக்டோபர் மற்றும் டிசம்பர் மாதங்களுக்கு இடையே ஒரு “மிக வலுவான” எல் நினோ உருவாவதற்கான வாய்ப்பு 81 சதவீதம்உள்ளது என கணித்துள்ளது.
1877-1878 ஆம் ஆண்டு உருவான எல் நினோ, வரலாற்றில் பதிவு செய்யப்பட்ட பேரழிவுகரமான காலநிலை நிகழ்வுகளின் போது உருவானது. ‘ஜர்னல் ஆஃப் க்ளைமேட்’ இதழில் வெளியிடப்பட்ட ஆராய்ச்சிக் கட்டுரையில், ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளில் ஒரே காலக்கட்டத்தில்ஏற்பட்ட வறட்சியின் காணமாக உலகம் முழுவதும் பரவலாக விவசாயம் பேரழிவை சந்தித்து பயிர் இழப்பை ஏற்படுத்தியது.இக்காலக்கட்டத்தில் உலகளவில் ஏற்பட்ட பெரும் பஞ்சத்தில் 5 கோடிக்கும் அதிகமான மக்கள் உயிரிழந்தனர்.
பருவமழையை நம்பியிருக்கும் ஆசிய நாடுகள் 800 ஆண்டுகளில் இல்லாத மிகக் கடுமையான வறட்சியை அந்த காலக் கட்டத்தில் சந்தித்தன. இச்சமயத்தில் தான் மெட்ராஸ் பஞ்சமும் ஏற்பட்டது. இதே நேரத்தில் எல் நினோ மட்டும் தான் முழு பேரழிவுக்கும் காரணம் என முடித்து விட முடியாது. காலனித்துவக் கொள்கை, அரசுகளின் போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை இல்லாதது, பணப்பயிர்களை அளவுக்கு மீறி ஊக்குவித்தது வேலையின்மை வறுமை ஆகியவையும் இப்பஞ்சத்தால் ஏற்பட்ட தீவிர விளைவுகளுக்கு முக்கிய காரணமாகவும் கூறப்படுகிறது.
‘சூப்பர் எல் நினோ’வின் தாக்கம் 1000 ஆண்டுகள் இல்லாத அளவிற்கு மிகக் கடுமையாக இருக்கும் : ஆய்வாளர் எச்சரிக்கை
Leave a Comment
