த.வெ.க.-வின் முதல் நிதிநிலை அறிக்கை – புதிய பெயர்களில் வழங்கப்பட்ட பழைய சரக்குகள்!

8 Min Read

சிறப்பு புத்தக சலுகைகள்

கட்டுரை

– முனைவர் சுவாமிநாதன் தேவதாஸ்
முன்னாள் உறுப்பினர்,
சமூகநீதி கண்காணிப்புக் குழு.
தலைவர், தமிழ்நாடு மூதறிஞர் குழு

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் நிதிநிலை அறிக்கையை நிதி அமைச்சர் சட்டமன்றத்தில் தாக்கல் செய்து வாசித்ததை நான் தொலைக்காட்சியில் பார்த்தேன். அதைப் பார்த்தபோது ஒருவகையில் மகிழ்ச்சி ஏற்பட்டது. அதற்குக் காரணம், கடந்த ஆட்சியில், குறிப்பாக 2021 முதல் திமுக அரசு அறிவித்து செயல்படுத்தி வந்த பல்வேறு மக்கள் நலத் திட்டங்களும், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கான பல தொலைநோக்குத் திட்டங்களும் நிறுத்தப்படாமல் தொடர்கின்றன என்பதுதான்.

ஒரு புதிய அரசு புதிய திட்டங்களை அறிவிக்கும்போது, அந்தத் திட்டங்களுக்கு புதிய பெயர்களைச் சூட்டுவது இயல்பான நடைமுறைதான். ஆனால், ஏற்கெனவே திமுக மற்றும் அதிமுக ஆட்சிக் காலங்களில் அறிவிக்கப்பட்டு, நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் பல திட்டங்களின் பெயர்கள் மாற்றப்பட்டிருப்பது கவனிக்கத்தக்கது. குறிப்பாக, கலைஞர் பெயரில் செயல்பட்டு வந்த சில முக்கியத் திட்டங்களின் பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.

திமுக அரசால் தொடங்கப்பட்டு தமிழ்நாடு மட்டுமல்லாது அண்டை மாநிலங்கள் முழுவதும் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற காலை உணவுத் திட்டத்திற்கு பெருந்தலைவர் காமராஜர் பெயர் சூட்டப்பட்டுள்ளது. காமராஜர் பெயர் சூட்டப்பட்டிருப்பதை எதிர்ப்பதற்கு எந்தக் காரணமும் இல்லை; அது வரவேற்கத்தக்கதே. ஆனால், இதுபோல திராவிடக் கட்சிகளின் ஆட்சிக் காலங்களில் தொடங்கப்பட்டு வெற்றிகரமாகச் செயல்பட்டு வரும் பல மக்கள் நலத் திட்டங்களின் பெயர்களும் மாற்றப்பட்டு புதிய பெயர்கள் சூட்டப்பட்டிருப்பதுதான் கவனிக்க வேண்டிய அம்சமாகும்.

இந்தப் பெயர் மாற்றங்களை உற்றுநோக்கினால், குறைந்தது மூன்று அரசியல் செய்திகள் புலப்படுகின்றன.

முதலாவது – திட்டங்களின் அரசியல் அடையாளத்தை மாற்றுதல்

திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டாலும், அவை திமுக அரசின் திட்டங்கள் என்ற அடையாளம் மக்கள் மனதில் நிலைத்துவிடக் கூடாது என்பதற்காகவே புதிய பெயர்கள் சூட்டப்பட்டிருக்கலாம் என்ற எண்ணம் ஏற்படுகிறது.

குறிப்பாக, புதிய தலைமுறை வாக்காளர்கள் ஏற்கெனவே செயல்பாட்டில் உள்ள திட்டங்களையே தவெக அரசு புதிதாக அறிமுகப்படுத்திய திட்டங்களாகப் புரிந்துகொள்ளும் வகையில், திட்டங்களின் பெயர்களை மாற்றும் முயற்சி மேற்கொள்ளப்பட்டிருக்கிறதா என்ற கேள்வி எழுகிறது.

அரசுகள் மாறும்போது திட்டங்களின் பெயர்கள் மாற்றப்படுவது இந்திய அரசியலில் புதிதல்ல. ஆனால், ஒரு திட்டத்தின் பெயரை மாற்றிவிடுவதன் மூலம் அதன் வரலாற்றையும், அதை உருவாக்கிய அரசின் பங்களிப்பையும் அழித்துவிட முடியாது. ஒரு மக்கள் நலத் திட்டத்தின் உண்மையான மதிப்பு அதன் பெயரில் இல்லை; அது மக்களின் வாழ்க்கையில் ஏற்படுத்தும் மாற்றத்தில்தான் இருக்கிறது.

இரண்டாவது – திராவிட இயக்கத்தின் அடையாளங்களை அகற்றுதல்

கலைஞரின் பெயர் பல திட்டங்களிலிருந்து அகற்றப்பட்டிருப்பதோடு, பெரியார், அண்ணா போன்ற திராவிட இயக்கத்தின் முக்கியத் தலைவர்களின் பெயர்களும் புதிய திட்டங்களுக்கு சூட்டப்படவில்லை என்பது கவனிக்கத்தக்கது. இதன் மூலம் தமிழ்நாடு அரசின் நலத்திட்டங்களில் இருந்து திராவிட இயக்கத்தின் வரலாற்று அடையாளங்களைப் படிப்படியாக அகற்றும் முயற்சி நடைபெறுகிறதா என்ற கேள்வி எழுகிறது. ஒரு ஆறுதலான அம்சம் என்னவென்றால், திமுக அரசால் அறிவிக்கப்பட்டு சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டு வரும் அண்ணல் அம்பேத்கர் பெயரிலான திட்டங்களின் பெயர்கள் மாற்றப்படவில்லை.

அதேநேரத்தில், த.வெ.க. தனது கொள்கைத் தலைவர் களாக பெரியார், வேலு நாச்சியார், அஞ்சலை அம்மாள் ஆகியோரின் பெயர்களை அறிவித்துள்ளது. இந்நிலையில், அவர்கள் அரசியல் மற்றும் சமூகப் பங்களிப்பை பிரதிபலிக்கும் வகையில் சில மக்கள் நலத் திட்டங்களுக்கு அவர்களின் பெயர்களைச் சூட்டியிருக்கலாமே என்ற கருத்து சிலரால் முன்வைக்கப்படுகிறது. அதில் நியாயம் இல்லையா? கொள்கைத் தலைவர்கள் வெறும் மேடைகளிலும், சுவரொட்டிகளிலும், படங்களிலும் மட்டுமே இடம்பெற வேண்டுமா? அல்லது அவர்களின் கொள்கைகளும் சமூகப் பங்களிப்புகளும் அரசின் செயல்பாடுகளிலும் பிரதிபலிக்க வேண்டுமா? என்ற கேள்வி எழுகிறது.

தமிழ்நாட்டின் சமூகநீதி அரசியலின் நீண்ட வரலாற்றைத் தவிர்த்துவிட்டு புதிய அரசியல் அடையாளத்தை உருவாக்க முயல்வது நீண்ட காலத்தில் எவ்வளவு பயனளிக்கும் என்பதும் சிந்திக்க வேண்டிய ஒன்றாகும்.

மூன்றாவது – அரசு நலத்திட்டங்களுக்கு உறவுமுறைப் பெயர்கள்

தவெக அரசு அறிவித்துள்ள சில புதிய திட்டங்களுக்கு “அண்ணன்”, “மாமன்” போன்ற உறவுமுறை அடையாளங் களைக் கொண்ட பெயர்கள் சூட்டப்பட்டிருப்பதும் அரசியல் ரீதியாக கவனிக்க வேண்டிய அம்சமாகும்.

அரசின் நலத்திட்டங்களுக்கு இத்தகைய உறவுமுறைப் பெயர்களைச் சூட்டுவது தமிழ்நாடு அரசியல் பண்பாட்டில் ஒரு புதிய முயற்சியாகத் தெரிகிறது. இதன் மூலம் அரசு வழங்கும் நலத்திட்டத்திற்கும் அரசியல் தலைவருக்கும் இடையே ஒரு உணர்வுபூர்வமான (Emotional bond) உறவை உருவாக்கும் முயற்சி மேற்கொள்ளப்படுகிறதா என்ற கேள்வி எழுகிறது. இதன் தாக்கம் குறிப்பாக இளம் தலைமுறை வாக்காளர்களிடம் இருக்கக்கூடும்.

“இந்தத் திட்டங்களுக்கான பணத்தை அரசாங்கம் கொடுக்கவில்லை; விஜய் அண்ணா தனது சொந்தப் பணத்திலிருந்து கொடுக்கிறார்” என்ற பொருளில் ஒரு தவெக தொண்டர் பேசியதாகக் கூறப்படும் கருத்துகளும் சமூக ஊடகங்களில் கவனம் பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இத்தகைய அணுகுமுறை ஆபத்தான அரசியல் புரிதலை உருவாக்கக்கூடும். ஏனெனில், அரசின் நிதி என்பது மக்களின் வரிப்பணமும், அரசின் வருவாயும் ஆகும். அரசு வழங்கும் நலத்திட்டம் எந்த ஒரு தனிநபரின் கொடையும் அல்ல; அது மக்களின் உரிமை. எனவே, அரசு வழங்கும் நலத்திட்டங்களை ஒரு தனிநபரின் தனிப்பட்ட உதவியாக மக்கள் புரிந்துகொள்ளும் வகையிலான அரசியல் தகவல் பரிமாற்றம் ஜனநாயகத்தின் அடிப்படைக் கொள்கைகளுக்கு உகந்ததல்ல.

புதிய திட்டங்கள் – வரவேற்க வேண்டியவையா?

புதிய திட்டங்களாக அறிவிக்கப்பட்டுள்ள கூவம் மற்றும் அடையாறு ஆறுகளைச் சீரமைத்து மீட்டெடுக்கும் திட்டம், செயற்கை நுண்ணறிவு (ஏஅய்) நகரம் உருவாக்கும் திட்டம் போன்றவை சுவாரஸ்யமானதும் எதிர்காலத்தை நோக்கியதுமான முயற்சிகளாகத் தோன்றுகின்றன. ஆனால், தற்போது அவை பெரும்பாலும் அறிவிப்புகளின் நிலையிலேயே உள்ளன. அவற்றின் வெற்றி, அவற்றுக்கான நிதி ஒதுக்கீடு, தெளிவான செயல்திட்டம், காலக்கெடு மற்றும் பொறுப்பான நிர்வாக அமைப்பு ஆகியவற்றைப் பொறுத்தே அமையும். குறிப்பாக, கூவம் மற்றும் அடையாறு போன்ற ஆறுகளை மீட்டெடுப்பது வெறும் அழகுபடுத்தும் திட்டமாக இல்லாமல், நீரியல், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, கழிவுநீர் மேலாண்மை, ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், மழைநீர் வடிகால் அமைப்பு மற்றும் நகர்ப்புறத் திட்டமிடல் ஆகியவற்றை ஒருங்கிணைத்த நீண்டகாலத் திட்டமாக அது அமைய வேண்டும் என்பது அவசியம்.

அதேபோல், ஏஅய் நகரம் போன்ற திட்டங்கள் வெறும் தொழில்நுட்பக் கவர்ச்சியாக நின்றுவிடாமல், தமிழ்நாட்டின் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, திறன் மேம்பாடு, ஆராய்ச்சி, புதுமை மற்றும் தொழில்முனைவோர் வாய்ப்புகளை உருவாக்கும் வகையில் செயல்படுத்த திட்டமிடல் வேண்டும்.

கல்வி – கவலை அளிக்கும் அம்சம்

இந்தப் நிதிநிலை அறிக்கையில் என்னை மிகவும் கவலைக் குள்ளாக்கிய அம்சம் கல்விக்கான நிதி ஒதுக்கீட்டில் ஏற்பட்டுள்ள குறைவு ஆகும். கல்விக்கான நிதி ஒதுக்கீடு ஏறத்தாழ ரூ.4,000 கோடி குறைக்கப்பட்டிருப்பது அறிவார்ந்த சமூகத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கும் அம்சமாகும். ஒரு மாநிலத்தின் எதிர்காலத்தை உருவாக்குவதில் கல்விக்கான முதலீடு மிக முக்கியமானது. குறிப்பாக, தமிழ்நாடு சமூகநீதி, இடஒதுக்கீடு, அனைவருக்கும் கல்வி மற்றும் உயர்கல்வி வாய்ப்புகளை விரிவுபடுத்துதல் ஆகியவற்றின் மூலம் உருவாக்கிய முன்னேற்றப் பாதையைத் தொடர்ந்து பாதுகாக்க வேண்டிய காலகட்டத்தில், கல்விக்கான நிதி ஒதுக்கீடு குறைவது கவலையளிக்கிறது. மேலும், புதிய கல்லூரிகளோ, புதிய பல்கலைக்கழகங்களோ அறிவிக்கப்படாததும் ஏமாற்றம் அளிக்கிறது. உயர்கல்வியின் பரவலாக்கம், அரசு உயர்கல்வி நிறுவனங்களின் தர மேம்பாடு, ஆராய்ச்சி, தொழில்நுட்பக் கல்வி, புதிய தலைமுறைக்கான திறன் மேம்பாடு மற்றும் பின்தங்கிய சமூகங்களைச் சேர்ந்த மாணவர்களின் உயர்கல்வி வாய்ப்புகள் ஆகியவற்றுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டிய நிலையில், இந்தத் துறையில் புதிய தொலைநோக்குத் திட்டங்கள் தெளிவாக அறிவிக்கப்படவில்லை.

முந்தைய திமுக அரசு கல்வி மற்றும் சமூக மேம்பாட்டுத் துறைகளில் அக்கறையுடன் செயல்படுத்திய பல தொலைநோக்குத் திட்டங்கள் பெயர் மாற்றம் செய்யப்பட்டிருந்தாலும், அவற்றின் அடிப்படைச் செயல்பாடுகள் தொடர்வது வரவேற்கத்தக்கது. ஆனால், அவற்றைத் தொடர்ந்து மேம்படுத்துவதற்கான புதிய முயற்சிகளும் அதே அளவில் அவசியம்.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலன்

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான நிதிநிலை அறிக்கை ஒதுக்கீட்டிலும் பெரிய மாற்றம் எதுவும் தெரியவில்லை. குறிப்பாக, திமுக அரசால் 2024ஆம் ஆண்டு இயற்றப்பட்ட தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான மேம்பாட்டு செயல்திட்டம் மற்றும் அதற்கான விதிகளின் அடிப்படையில், சிறப்பு உட்கூறு திட்டம் (Scheduled Caste Sub-Plan) மற்றும் பழங்குடியினர் துணைத் திட்டம் (Tribal Sub-Plan) ஆகியவற்றின் கீழ் ஒதுக்கப்படும் நிதி உண்மையில் அந்த சமூகங்களின் நலனுக்காக எவ்வாறு பயன்படுத்தப்படும் என்பது தெளிவாக எடுத்துரைக்கப்பட வேண்டிய ஒன்று. நிதிநிலை அறிக்கையில் நிதி ஒதுக்கீடு செய்வது மட்டும் போதாது. அந்த நிதி குறிப்பிட்ட சமூகங்களின் கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதார முன்னேற்றம், நிலம், வீடு, சுகாதாரம் மற்றும் சமூகப் பாதுகாப்பு போன்ற துறைகளில் எவ்வாறு செலவிடப்படுகிறது என்பதையும் வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும்.

.வெ.க.-வின்
தேர்தல் வாக்குறுதிகள் என்னவாயின?

இது இந்தப் நிதிநிலை அறிக்கை எழுப்பும் முக்கியமான கேள்விகளில் ஒன்றாகும். த.வெ.க. தனது தேர்தல் அறிக்கையில் மக்களுக்கு அளித்த பல்வேறு வெகுஜன நலத்திட்ட வாக்குறுதிகள் குறித்து இந்தப் பட்ஜெட்டில் தெளிவான அறிவிப்புகள் இடம்பெறவில்லை என்பது ஏமாற்றமளிக்கிறது. குறிப்பாக, மகளிர் உரிமைத் திட்டம், வேலையில்லாத இளைஞர்களுக்கான உதவித் திட்டம், தமிழ்நாடு முழுவதும் இலவசப் பேருந்துப் பயணம் போன்ற முக்கியமான தேர்தல் வாக்குறுதிகள் எவ்வாறு செயல்படுத்தப்பட உள்ளன என்பது குறித்து தெளிவான நிதி ஒதுக்கீடோ, காலக்கெடுவோ, செயல்திட்டமோ தெரிவிக்கப்படவில்லை. தேர்தல் அறிக்கை என்பது வெறும் தேர்தல் கால வாக்குறுதிகளின் தொகுப்பாக மட்டும் இருக்கக்கூடாது. ஆட்சிக்கு வந்த பிறகு அது அரசின் கொள்கைத் திட்டமாக மாற்றப்பட வேண்டும். அதற்குத் தேவையான நிதி ஆதாரங்கள், முன்னுரிமைகள் மற்றும் செயலாக்க முறைகள் நிதிநிலை அறிக்கையில் பிரதிபலிக்க வேண்டும். அந்த வகையில் பார்க்கும்போது, தவெக தனது தேர்தல் வாக்குறுதிகளுக்கும் முதல் நிதிநிலை அறிக்கைக்கும் இடையே உள்ள தொடர்பைத் தெளிவுபடுத்த வேண்டிய கடமை உள்ளது.

முடிவாக

மொத்தத்தில், தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் நிதிநிலை அறிக்கையை “புதிய பெயர்களில் வழங்கப்பட்ட பழைய சரக்குகள்” என்று கூறுவது பொருத்தமானதாகத் தோன்றுகிறது. ஏற்கெனவே செயல்பட்டு வரும் மக்கள் நலத் திட்டங்களைத் தொடர்ந்து செயல்படுத்துவது நிச்சயமாக வரவேற்கத்தக்கது. ஆனால், திட்டங்களின் பெயர்களை மாற்றுவதன் மூலம் அவற்றின் வரலாற்றையும், அவற்றை உருவாக்கிய அரசியல் மற்றும் சமூகப் பங்களிப்பையும் மறைத்துவிட முடியாது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *