“குப்பை கொட்டினால் செய்வினை” பூச்சாண்டி காட்டிய போர்டு… அசால்ட்டாக ‘செயப்பாட்டு வினை’ ஆக்கிய பொதுமக்கள்!

2 Min Read

பொதுவாக, பொது இடங்களில் குப்பை கொட்டுபவர்களைத் தடுக்க ‘அபராதம் விதிக்கப்படும்’, ‘காவல்துறையில் ஒப்படைக்கப்படும்’. சில கீழை நாடுகளில் பொது இடத்தில் பிரம்படியும்கூட உண்டு. இங்கும் பல்வேறு எச்சரிக்கைப் பலகைகளை நாம் பார்த்திருப்போம். ஆனால், சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் உள்ள பாரதியார் தெருவில், குப்பை கொட்டுபவர்களை மிரட்ட ஒரு புதுமையான, சற்று ‘பயங்கரமான’ உத்தியை நிர்வாகம்  கையாண்டுள்ளது.

அங்கு வைக்கப்பட்டுள்ள ஓர் அறிவிப்புப் பலகையில், “இங்கு குப்பைகளைக் கொட்டக்கூடாது, மீறினால் செய்வினை செய்யப்படும்” என்று பெரிய எழுத்துக்களில் எழுதப்பட்டுள்ளது. அதற்குக் கீழே ஓர் அபாயகரமான மண்டை ஓட்டுச் சின்னமும்  அச்சிடப்பட்டுள்ளது.

மந்திரமா? தந்திரமா?

‘செய்வினை’ என்றால் ஏதோ மந்திரவாதியை வைத்து பில்லி, சூனியம் வைத்துவிடுவார்கள் என்று குப்பை கொட்டுபவர்கள் பயந்து ஓடுவார்கள் என்பது இந்த பலகையை வைத்தவர்களின் எண்ணமாக இருக்கலாம். மூடநம்பிக்கையைப் பயன்படுத்தி, மக்களைப் பயமுறுத்தியாவது அந்த இடத்தைச் சுத்தமாக வைத்திருக்கலாம் என்ற ஓர்  எண்ணம்தான் இதற்குக் காரணம் என்றாலும், இது ஒரு ‘பகுத்தறிவு பூர்வமான’ கேள்வியை எழுப்புகிறது. “குப்பையை அள்ளுவதுதான் நகராட்சியின் வேலை, அதை விடுத்து இப்படி மூடநம்பிக்கையை வளர்ப்பது நியாயமா?” என்றும், “இந்தக் காலத்தில் இதற்கெல்லாம் யார் பயப்படுவார்கள்?” என்றும் சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

பயப்படாத பொதுமக்கள் – ‘அசால்ட்’ ஆட்டிட்யூட்

ஆனால், இந்த எச்சரிக்கைப் பலகைக்கு அந்தத் தெரு மக்கள் கொடுத்த ரியாக்‌ஷன் தான் மிகச் சிறப்பானது. இந்த ‘செய்வினை’ மிரட்டலை அவர்கள் ஒரு துளி கூடப் பொருட்படுத்தவில்லை. அந்த எச்சரிக்கை பலகைக்குக் கீழேயே, ஒரு பெரிய குப்பைக் குவியலே காட்சியளிக்கிறது. இதைப் பார்க்கும் போது, மக்கள் மனதிற்குள் என்ன நினைத்திருப்பார்கள் என்று தோன்றுகிறது:

“செய்வினை, செயப்பாட்டு வினை இதெல்லாம் நாங்க பள்ளிகூடத்திலேயே படிச்சுட்டோம்!  குப்பை கொட்டுறது ‘செய்விஎனை’ன்னு சொன்னா, அதை அள்ளாம அப்படியே விடுறது ‘செயப்பாட்டு வினை’!” என்று மிகவும் அசால்ட்டாக அந்தப் போர்டுக்குக் கீழேயே குப்பையை வீசிச் சென்றுள்ளனர்.

பூச்சாண்டிகளைக் காட்டி மக்களைப் பயமுறுத்திச் சமூக மாற்றத்தைக் கொண்டுவர முடியாது என்பதை இந்த இளையான்குடி சம்பவம் நிரூபித்துள்ளது. மூடநம்பிக்கைக்குப் பதிலாக, முறையான குப்பை மேலாண்மையும், மக்களிடம் விழிப்புணர்வும் மட்டுமே பொது இடங்களைச் சுத்தமாக வைத்திருக்க உதவும். ‘செய்வினை’ மிரட்டலைத் தூக்கியெறிந்து விட்டு, ‘சுத்தம் செய்வது’ என்ற சரியான வினையைச் செய்ய முன்வர வேண்டும்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *