புதுடில்லி, ஆக.8 விழா மற்றும் நெரிசல் மிகுந்த காலங்களில் இயக்கப்படும் முன்பதிவு வசதி கொண்ட சிறப்பு ரயில்களுக்கு, வழக்கமான ரயில்களை விட கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் மக்களவையில் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் நாடாளுமன்ற சஞ்சனா மக்களவையில் எழுப்பிய எழுத்துப்பூர்வ கேள்விக்கு அளித்த பதிலில் அமைச்சர் இந்தத் தகவலைப் பகிர்ந்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சனாவின் கேள்விகள்:
சிறப்பு ரயில்களுக்கான கட்டண அமைப்பு மற்றும் அதை நிர்ணயிப்பதற்கான அளவுகோல்கள் என்ன?
கடந்த 3 ஆண்டுகளில் எத்தனை சிறப்பு ரயில்கள் வழக்கமான சேவைகளாக மாற்றப்பட்டுள்ளன?
சிறப்பு ரயிலின் கட்டணம், அதே வழித்தடத்தில் செல்லும் வழக்கமான ரயில்களை விட அதிகமாக உள்ளதா?
ரயில்வே அமைச்சரின் பதில்:
இக்ககேள்விகளுக்குப் பதிலளித்த ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்ததாவது:
“விழாக்கள், சிறப்பு நிகழ்வுகள் மற்றும் நெரிசல் மிகுந்த காலங்களில் பயணிகளின் கூடுதல் கூட்டத்தைச் சமாளிக்கவே சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. வணிக ரீதியான தேவை மற்றும் செயல்பாட்டு சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்து, இந்த சிறப்பு ரயில்கள் படிப்படியாக வழக்கமான சேவைகளாக மாற்றப்பட்டு வருகின்றன.”
மேலும், கடந்த 3 ஆண்டுகளில் 245 சிறப்பு ரயில்கள் வழக்கமான சேவைகளாக மாற்றப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். அதேவேளையில், முன்பதிவு வசதி கொண்ட சிறப்பு ரயில்கள், வழக்கமான அட்டவணைப்படி இயங்கும் ரயில்களை விட கூடுதல் கட்டணத்திலேயே இயக்கப்படுகின்றன என்பதையும் அமைச்சர் தனது பதிலில் உறுதிப்படுத்தியுள்ளார்.
எவ்வித முன்னறிவிப்பும் இன்றி சிறப்பு ரயில்கள் என்ற பெயரில் கட்டணத்தை ஏற்றி மக்கள் மேல் சத்தமில்லாமல் சுமையை ஏற்றிவிட்டு உறுப்பினர்கள் கேட்டபிறகு ஆமாம் என்று கூறுவது கட்டணக் கொள்ளை தானே என்று பயணிகள் விமர்சிக்கினர்.
