சென்னை, ஆக. 8– மேகதாது அணை எதிர்ப்பு தொடர்பாக தவெக அரசு அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டுவதற்கு என்ன பயம் என எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பினார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் மேகதாது அணை குறித்தும் காவிரி டெல்டா பகுதியில் குறுவை சாகுபடி பாதிப்பு குறித்த சிறப்புக் கவன ஈர்ப்பு தீர்மானத்தின் போது, எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:
தமிழ்நாடு விவசாயிகளுடைய வேதனைக்கு இந்த அரசு ஒரு சரியான தீர்வை காண வேண்டும் என இந்த ஒத்திவைப்பு தீர்மானத்தைக் கொண்டு வந்துள்ளோம். குறிப்பாக, மேகதாது அணை கட்டும் கருநாடக அரசை தடுக்க இந்த அரசு என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறது என்று தெரிவிக்கவேண்டும்.
முழு பயிர்க்கடன் தள்ளுபடின்னு தேர்தலின் போது வாக்குறுதி கொடுத்துவிட்டு, ஆட்சிக்கு வந்தபிறகு அரைகுறையாக தள்ளுபடி செய்வது ஏன்? காவிரியில் தண்ணீர் வராத காரணத்தால் குறுவை சாகுபடி மொத்தமாக இல்லாமல் போய்விட்டது; இதற்கு தகுந்த நிவாரண தொகையை எப்போது இந்த அரசு விவசாயிகளுக்கு கொடுக்கப் போகிறது?
டெல்டா மாவட்டங்களை வறட்சி பாதிக்கப்பட்ட மாவட்டங்களாக அறிவித்து விவசாயிகளுக்கு உரிய நிவாரணத்தை இந்த அரசு கொடுக்க வேண்டும் ஆகிய காரணங்களுக்காக இந்த ஒத்திவைப்பு தீர்மானத்தைக் கொண்டு வந்துள்ளோம் எனப் பேசினார்.
புலிகள் காப்பகம் என்ற பெயரில்
மலைக்கிராம மக்களை வனப்பகுதியில் இருந்து வெளியேற்றக் கூடாது!
தேனியில் நடந்த பெருந்திரள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தல்
தேனி, ஆக. 8- புலிகள் காப்பகம் என்ற பெயரில் மலைக்கிராம மக்களை வனப்பகுதியில் இருந்து வெளியேற்றக்கூடாது. இதுகுறித்து தமிழ்நாடு அரசு சீராய்வு மனுவை தாக்கல் செய்ய வேண்டும் என வலியுறுத்தி, தேனி மாவட்ட ஆட்சியர்அலுவலகம் முன் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தேனி மாவட்டம், ஆண்டிபட்டி வட்டத்துக்கு உட்பட்ட 8 ஊராட்சிகளில் உள்ள 98 மலைக் கிராமங்கள் சில ஆண்டுகளுக்கு முன்பு புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்டன. அதைத் தொடர்ந்து, வனத்துறையினர் அங்குள்ள மக்களை வெளியேற்றும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், இப்பகுதிகளில் விவசாயப் பணிகளும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
இதைக் கண்டித்து, மலைக்கிராம மக்கள் பல்வேறு போராட்டங்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒருபகுதியாக, தேனி ஆட்சியர் அலுவலகம் முன் நேற்று (7.8.2026) பெருந்திரள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மலைக்கிராம மக்கள் பங்கேற்றனர். விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் டி.கண்ணன் தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் கே.பாலபாரதி,மலைவாழ் மக்கள் சங்க மாநிலத் தலைவர் பி.டில்லிபாபு உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர். தேனி ஆட்சியரிடம் மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், மலைவாழ் மக்கள் சங்க தலைவர் டில்லிபாபு. நாடாளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் உள்ளிட்டோர் மனு அளித்தனர்.
இதில் மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் பேசும்போது, மலைக்கிராம மக்களை வெளியேற்றும் உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும். வன உரிமைச் சட்டப்படி அங்கு வசிக்கும் மக்களுக்கு பட்டா வழங்க வேண்டும். அதுவரை அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தக் கூடாது. வனத்துக்குள் மலை மாடுகள் மேய்ச்சலுக்கு அனுமதிக்க வேண்டும்’ என்றார்.
ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்செல்வன் பேசும்போது, ‘மலைவாழ் மக்களை வெளியேற்றக் கூடாது. மீறி வெளியேற்றினால் எனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை விட்டு விலகுவேன்’ என்றார். இதில் திமுக, அதிமுக, அமமுக, தவெக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் கலந்துகொண்டன. போராட்டத்துக்குப் பிறகு ஆட்சியர் இரா.வைத்திநாதனிடம் கோரிக்கை மனு வழங்கப்பட்டது. வனக்கிராம மக்களின் போராட்டத்தால், தேனி – மதுரை சாலை போக்குவரத்து பல மணி நேரம் பாதிக்கப்பட்டது.
முழு பயிர் கடன் தள்ளுபடி கோரிக்கை
கோணிப் பைகளை அணிந்து தலைமைச் செயலகம் முன் விவசாயிகள் போராட்டம்!

சென்னை, ஆக. 8- முழு பயிர்கடன் தள்ளுபடி கோரி கோணிப் பைகளை அணிந்து விவசாயிகள் தலைமைச் செயலகம் முன் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு அரசு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வில்லை எனக் கூறி, காவிரி டெல்டா பாசன விவசாய சங்கங்களின் கூட்டமைப்பைச் சேர்ந்த 40-க்கும் மேற்பட்ட விவசாயிகள் சென்னை தலைமைச் செயலகம் முன்பு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோணிப் பைகளை அணிந்து நூதன முறையில் நடைபெற்ற போராட்டத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை காவல்துறையினர் உடனடியாகக் கைது செய்து, அருகில் உள்ள சமுதாய நலக்கூடத்துக்கு அழைத்துச் சென்று பின்னர் விடுவித்தனர்.
போராட்டத்தின் போது செய்தியாளர்களை சந்தித்த கூட்டமைப்பின் தலைவர் இளங்கீரன் கூறுகையில், “வேளாண் நிதிநிலை அறிக்கை விவசாயிகளுக்கு ஏற்றம் தரும், வாழ்வாதாரத்தை உயர்த்தும் நிதிநிலை அறிக்கையாக இல்லை. முதலமைச்சர் அளித்த தேர்தல் வாக்குறுதியை தான் நிறைவேற்ற கேட்கிறோம்.
அடுத்த பிறவியில் விவசாயியாக பிறக்க வேண்டும் என கூறியவர் முதலமைச்சர், அவர் முழு கடன் தள்ளுபடி என கூறியதை நம்பி வாக்களித்தோம், வாக்குறுதிப்படி முழு பயிர்கடன் தள்ளுபடி செய்ய வேண்டும், நெல் குவிண்டாலுக்கு ரூ.3,500-ம், கரும்புக்கு ரூ.4500-ம் கொடுப்பதாக கூறினர், ஆனால் கொஞ்சம் கூட தரவில்லை. கத்தி படத்தில் விவசாயத்தைப் பற்றி நிறைய பேசினார். ஆனால் முதலமைச்சராக எங்களுக்கு எதுவுமே செய்யவில்லை” என்றார்.
