கேள்வி 1: தி.மு.க., அ.தி.மு.க. உள்பட அனைத்துக் கட்சிகளிலிருந்தும் முன்னணித் தலைவர்கள் மற்றும் பலரும் த.வெ.க. கட்சியில் இணைந்து கொண்டிருக்கிற நிலையில், திராவிடர் கழகத்திலிருந்து மட்டும் யாரும் த.வெ.க. கட்சியில் சேரவில்லையே… இதற்கு முக்கியக் காரணம் என்ன என்று கருதுகிறீர்கள் ஆசிரியரே….?
– மு.அய்யூப்கான், மேலக்காவேரி, கும்பகோணம்
பதில் 1: ஈக்களும், எறும்புகளும் சிந்திய சர்க்கரையைத் தேடிப் போகலாம். தேனீக்கள் பூக்களில் உள்ள தேனைக் கொண்டுவந்து தேன்கூடு கட்டும். இராணுவத்திற்குக் கடமையைத் தவிர வேறு தெரியாது.தந்தை பெரியாரின் கருஞ்சட்டை இராணுவம் விலைகளுக்கும், கவலைகளுக்கும் அப்பாற்பட்ட ஒரு கடமையைச் செய்வதில் கண்ணும் கருத்துமாய் உள்ள அணி. அதனால்தான்!
கேள்வி 2: த.வெ.க. அரசு சட்டமன்றத்தில் சமர்ப்பித்த முதலாவது நிதிநிலை அறிக்கை எப்படி உள்ளது? அதைப் பற்றிய தங்களின் கருத்தும், கணிப்பும் என்ன?
– வி.புனிதா, புதுச்சேரி
பதில் 2: அருள்கூர்ந்து (6.8.2026) ‘விடுதலை’ ஏட்டில் வெளிவந்துள்ள அறிக்கையைப் படிக்கவும். புத்தொளித் தராத ஒரு மந்த பட்ஜெட்!
கேள்வி 3: முஸ்லீம் லீக் கட்சியையும், அதன் தலைவர் பேராசிரியர் காதர் மொகிதீன் மற்றும் அமைச்சர் ஷாஜகானையும் தி.மு.க.வினர் கடுமையாக விமர்சனம் என்கின்ற பெயரில் பேசி வருவது சரிதானா?
– மு.அய்யூப்கான், மேலக்காவேரி, கும்பகோணம்.
பதில் 3: காரியத்தை மட்டும் கவனிக்கக் கூடாது; காரணத்தையும் ஆராய வேண்டிய நிலை என்றாலும், கடும் விமர்சனம் தவிர்க்கப்பட வேண்டும் – எல்லாத் தரப்பிலும்.
கேள்வி 4: எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதியைக் கைது செய்வதாகக் கூறி, பின்னர் சொந்த பிணையில் காவல் நிலையத்திலேயே அவரை விடுவித்து – “ஒரு நாள் கூத்துக்கு மீசையை வைத்தான்” என்பது போன்று த.வெ.க. அரசு நடந்து கொண்டது ஏன்?
– ப.பகலவன், கொரட்டூர்
பதில் 4: ஆத்திரம் அறிவுக்கு எதிரி என்பதை நிரூபிக்கும் ஓர் அரசியல் அனுபவற்ற ஆவேசத்தினால் அரசு (பின்) வாங்கிய வெற்றிகர வாபஸ்! நீதிமன்ற ஆணையை மதியாது – முதிர்ச்சி இல்லாது முக்காடு தேடிக்கொண்ட ஒரு செயல்!

கேள்வி 5: இஸ்ரோவில் தயாரிக்கப்படும் ராக்கெட் போன்று மாதிரி செய்து விஞ்ஞானிகள் அதனைக் கொண்டு போய் திருப்பதி கோயிலில் வைத்து பூஜை செய்வதைப் போன்று தமிழ்நாட்டின் வேளாண்மைத் துறையின் நிதிநிலை அறிக்கையைக் கொண்டுபோய் அந்தத் துறையின் அமைச்சர் திருப்பதி கோயிலில் வைத்து பூஜை செய்துள்ளாரே?
– மன்னை சித்து, மன்னார்குடி-1
பதில் 5: படிப்பு, பதவிக்கும் – பகுத்தறிவுக்கும் சம்பந்தமில்லா பக்தி போதையின் நகைக்கத்தக்க, கண்டனத்திற்குரிய கேவலம்! அரசியலமைப்புச் சட்ட விரோதம்.
கேள்வி 6: “பதவி உயர்வு, பணியிட மாற்றங்களுக்கு இனிமேல் முதலமைச்சரின் ஒப்புதலைப் பெற வேண்டும்” என்று தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளதே, இது சரியான முறையா?
– அ.சத்தியசீலன், அரும்பாக்கம்
பதில் 6: ஓர் அரசு சிறப்பாக நடைபெற அதனுடைய அதிகாரங்களை, தலைமை முதலமைச்சர் பகிர்வு செய்து அதனைக் கணித்து ஆளுமையை நடத்துவது என்ற தத்துவத்திற்கு நேர் எதிரான – நடைமுறையில் சிக்கலான ஒன்று, முதலமைச்சர் தன்னுடைய சக அமைச்சர்களின் நடவடிக்கைகளில் நம்ப முடியாத நிலையை அதிகாரபூர்வமாக ஒப்புக் கொள்கிறார் என்பதின் மறைபொருள் இது! முதலமைச்சர் மற்றைய நாட்டு நடப்புகளை அன்றாடம் கண்காணித்து, ஆணையிட்டு அரசு இயந்திரத்தைச் செயல்பட வைப்பதற்கே 24 மணி நேரம் போதாது என்கிறபோது, இப்படி ஒரு புதிய பாரத்தைச் சுமப்பதன் மூலம் அவர் முழு நீதி வழங்க முடியாது. பதவியிலுள்ளவர்களது பணியிட மாற்றங்கள் எளிதில் – விரைவில் நடக்கும் வாய்ப்பே இருக்காது! அமைச்சரவைச் சகாக்களை நேர்மை வழியில் நடக்கப் பழக்க வேண்டும் – அவர்களைக் கற்றுக்கொள்ள வைக்க வேண்டும். தங்களை விற்றுக்கொள்ள முயல்வோரை அடையாளம் கண்டு வெளியேற்றலாம். அதுதான் அவர் செய்ய வேண்டிய முதற்பணி.

கேள்வி 7: பூமியில் குப்பைக் கழிவுகள் இருப்பது போன்று, விண்வெளியில் சேர்ந்துள்ள ஏராளமான செயற்கைக்கோள் (உள்பட) உலக நாடுகளின் கழிவுகளை எப்படிக் கையாள வேண்டும் என்பதைப் பற்றித் தங்களுடைய கருத்து என்ன…?
– பா.ஓவியன், அரும்பாக்கம்
பதில் 7: நம்மூர் குப்பைக் கழிவுகளை அகற்றுவதிலேயே நமது கருத்துரைகள் பயன்படாதபோது இந்த வீண் வேலை எதற்கு? ஏன் திணிக்கிறீர் தோழரே?
கேள்வி 8: கலைஞர் மகளிர் உரிமைத் தொகையை தேர்தல் வாக்குறுதியில் குறிப்பிட்டவாறு உயர்த்தி அறிவிக்காததோடு, அதிலிருந்து கலைஞர் பெயரையும் நீக்கி, ‘திராவிட மாடல்’ அரசின் திட்டங்களுக்குப் பெயரை மாற்றம் செய்து புதிய திட்டங்கள் போன்று நிதிநிலை அறிக்கையில் அறிவித்துள்ள த.வெ.க. அரசின் நடவடிக்கையை எப்படி எடுத்துக்கொள்வது?
– க.அரசு, மாதவரம்
பதில் 8: அரசியல் வன்மத்திற்கும், முதிர்ச்சியற்றப் போக்கிற்கும் நல்ல உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம்.
கேள்வி 9: நடிப்பிசைப்புலவர் கே.ஆர்.இராமசாமியோடு தங்களின் தொடர்பும், நட்பும் எத்தகையது?
– க.வசந்தகுமார், விழுப்புரம்
பதில் 9: அவர் ஒரு சிறந்த கொள்கை வீரர் – பதவிகளை எதிர்பார்க்காது அய்யாவிடமும், அண்ணாவிடமும் அளவுகடந்த பற்றும், மரியாதையும் கொண்ட ஒரு பண்பின் பெட்டகம். பெருமைமிக்க கலைத்துறையின் ஒரு குறிஞ்சி மலர்! நம்மிடம் தனி அன்பு காட்டியவர்.
கேள்வி 10: கொளத்தூர் தொகுதி வாக்குப்பதிவு இயந்திரங்களில் உள்ள குறைபாடுகள் குறித்து நீதிமன்றத்தை நாட இருப்பதாகத் தி.மு.க. அறிவித்துள்ள நிலையில், அதில் எவ்விதக் குறைபாடுகளோ, முரண்பாடுகளோ இல்லை என்று சென்னை மாநகராட்சி கூறியுள்ளதே…?
– ஏ.லோகநாதன், கொளத்தூர்
பதில் 10: அப்படித்தானே அவர்கள் – தேர்தல் நடத்தியவர்கள் – கூறுவார்கள். அதிலும் புதிய ஆட்சியின்கீழ் பணி புரிபவர்கள்! எனவே, அதிலென்ன வியப்பு, விந்தை!
‘விடுதலை’ ஞாயிறு மலருக்கு
கேள்விகள் வரவேற்கப்படுகின்றன!
அனுப்ப வேண்டிய முகவரி:
‘விடுதலை’, 84/1(50), ஈ.வெ.கி. சம்பத் சாலை, வேப்பேரி, சென்னை – 600 007.
மின்னஞ்சல்: [email protected]
