‘சதி’ – பெண்கள் கொலைகளும், பார்ப்பனர்கள் சதியும்! (9) மருத்துவர் இரா.கவுதமன் இயக்குநர், பெரியார் மருத்துவ அணி

5 Min Read

இந்தியாவிற்கு “சுதந்திரம்” 15.8.1947இல் கிடைத்தது.இந்தியா விற்குத்தான் சுதந்திரம் கிடைத்ததே ஒழிய இந்தியப் பெண்களுக்கு சுதந்திரம் கிடைக்கவில்லை.பண்பாடு, கலாச்சாரம் என்ற பலவித மதப் போர்வைகள் அவர்கள் மேல் போர்த்தப்பட்டு அவர்கள் அடுப்பங்கரைகளிலேயே முடக்கப்பட்டுவிட்டனர். பெண் அடிமைத்தனத்தை இயல்பான ஒன்றாக ஏற்றுக் கொண்டு வாழ அவர்கள் பழக்கப் பட்டு விட்டனர். அவர்களுக்கு கல்வி உரிமை இல்லை. ஆண்கள் முன் நிற்கக் கூட உரிமை இல்லை.

வீடுகளில் எந்த வித சுதந்திரமும் இல்லாமல் ஆண்களுக்கு அடங்கியே வாழ அவர்கள் பழக்கப்பட்டுப் போயினர். நகைகள், துணிகள், கோயில்கள், மத விழாக்கள், குடும்ப விழாக்கள் என்பதிலேயே அவர்கள் அய்க்கியப்பட்டு விட்டனர். தந்தை பெரியார் எழுதிய “பெண் ஏன் அடிமையானாள்?” என்ற புத்தகத்தில் அவரே குறிப்பிட்டபடி பெண்கள், நகை மாட்டும் ஸ்டாண்டுகளாக, அலங்கார பொம்மைகளாக, படுக்கையறைப் பாவைகளாவே மாற்றப்பட்டு விட்டனர். இதில் பார்ப்பன ஆதிக்கம் பெரும் பங்கு வகித்தது.

சுதந்திர இந்தியாவில் உள்ள மாநிலம் ராஜஸ்தான்.இராஜபுத்திர அரசர்களின் சமஸ்தானங்களாக இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பிருந்த பகுதி. அந்த மாநிலத்தில் சிகார் (Sikar) என்ற மாவட்டம். அந்த மாவட்டத்தில் இருந்த ஒரு சிற்றூர் தியாரோலா. அந்த ஊரில் வசித்து வந்தவர் மால்சிங் செகாவத். இருபத்து நான்கு வயது இளைஞர். எட்டு மாதங்களுக்கு முன்புதான் பதினெட்டே வயதான ரூப் கன்வார் என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.

திருமணம் ஆகி சில மாதங்களிலேயே மால்சிங் செகாவத் நோய்வாய்ப்பட்டார். மருத்துவமனையில், மருத்துவப் பயனாளியாகச் சேர்க்கப்பட்ட அவரின் நோய் அதிகமாகிக் கொண்டே போனது. இறுதியில் நோய் முற்றி, மருத்துவம் பலனளிக்காமல் 3.9.1987 அன்று மரணமடைந்தார். அவர்களுக்குக் குழந்தை கூட பிறக்காத காலகட்டம். 4.9.1987 அன்று மால்சிங் செகாவத்தின் உடல் எரியூட்டப்பட்டது. இளம் பெண் ரூப் கன்வார் கணவரின் சிதையோடு எரித்துக் கொல்லவும் ரகசியமாக ஏற்பாடு செய்யப்பட்டது.

ரூப் கன்வார் “சதி மாதாவாகவும்”, “சதி தாயாகவும்” மாறி சொர்க்கத்திற்குப் போய் விடுவார் என்று “மூளைச் சலவை” செய்யப்பட்டது. அனைத்துமே ரகசியமாக நடந்தது. 4.9.1987 அன்று இறுதிச் சடங்குகள் முடிக்கப்பட்டு செகாவத்தின் உடல் எரியூட்டும் மேடையில் வைக்கப்பட்டது. தியாரோலா கிராம மக்கள் பெருங்கூட்டமாக எரியூட்டும் மேடையைச் சுற்றி நின்று கொண்டிருந்தனர். சடங்குகள் முடிந்ததும் மால்சிங் செகாவத்தின் உடல் தீயிடப்பட்டது. திடீரென்று அங்கு அழைத்து வரப்பட்ட ரூப் கன்வார் அந்தத் தீயிலே குதித்தார். கணவரின் உடலோடு ரூப் கன்வாரின் உடலும் “சதி”யென்ற அந்தக் கொடுமையான பழக்கத்தால் கருகி சாம்பலானது.

ரூப் கன்வாருக்காக அந்த ஊரில் “சதி மாதா கோயில்” ஒன்றும் கட்டப்பட்டது. இந்த நிகழ்ச்சி வெளி உலகத்திற்கு ஓரிரு நாள் கழித்துதான் தெரிய வந்தது. இது மக்களிடையே ஒரு பெரும் விவாதப் பொருளாக மாறியது. அரசு அதற்குப் பின்னர்தான் விழித்துக்கொண்டது. “சதி”க்கு எதிராக ஒரு சட்டமியற்றத் தயாரானது.  (சான்று: www.http:wikkypedia)

ரூப் கன்வார் உடன்கட்டை ஏற்றப்பட்ட நிகழ்ச்சி செய்தித் தாள்கள் மூலம் வெளியே தெரிந்தது. நாடு முழுவதும் பெரும் பரப்பரப்பு ஏற்பட்டது. இது காட்டுமிராண்டித்தனமான பெண் படுகொலை என்று பரவலான விமர்சனங்கள் நாடு முழுவதும் பேசப்பட்டது. பெண்ணியலாளர்களால் கடுமையாக இதைப் பற்றி வாதி, பிரதிவாதங்கள் நிகழ்த்தப்பட்டன.

நாட்டில் உள்ள சட்ட மன்றங்களிலும், நாடாளு மன்றத்திலும் ரூப் கன்வார் பற்றி பெரும் வாதங்கள் நடந்தன. ராஜஸ்தான் மாநிலத்தில் ஒரு சிறு கிராமத்தில் (Sikar மாவட்டம், தியாரோலா என்ற ஊரில்) நடந்த இந்த பெண் கொலை “சதி”யைப் பற்றிய ஒரு கடுமையான சட்டத்தை இந்திய நாடாளுமன்றம் நிறைவேற்ற காரணமாயிற்று. இந்திய நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்ட சட்டத்தால் “சதி” என்ற பார்ப்பனர்களின் கொடுமையான பெண்களைக் கொல்லும் வழக்கம் முடிவுக்கு வந்தது.

நாடு சுதந்திரம் பெற்று நாற்பது ஆண்டுகள் ஆகிவிட்டது. “சதி” என்ற காட்டுமிராண்டித்தனத்தின் கடைசிப் பலி ரூப் கன்வாராகத்தான் இருக்க வேண்டும் என்ற மக்களின் எழுச்சி 1987இல் பிரதமர் ராஜீவ் காந்தி அவர்களை “சதி”க்கு எதிரான சட்டத்தை இயற்ற வைத்தது. “சதி” வழக்கத்தை ஆதரிப்பது, நியாயப்படுத்துவது அல்லது பரப்புவது அல்லது அதனைப் போற்றுவதற்கொப்பாகும் என்று அந்த சட்டம் கூறியது. “சதி” நடப்பதற்கு முன்போ அல்லது பின்போ தண்டனை விதிக்க அந்த சட்டம் வழி செய்தது.

“சிதை தானாகவே தீ பிடித்தது” என்று யாராவது சொன்னாலோ, குற்றம் சாட்டப்பட்டவர் அதைத் தூண்டியிருந்தாலோ, குற்றத்தை தூண்டிவிட்டு, அவர் “சதி” நடந்த இடத்தில் இல்லாமல் இருந்தாலும், ஒரு விதவைப் பெண் தீயில் எரிவதை கண்டும், அவரைக் காப்பாற்ற முயலாமல், வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தாலும் அது “சதி”யை ஆதரிப்பதற்கான குற்றமாகவே கருதப்படும் என்று அச்சட்டம் கூறியது. “சதி” ஒழிப்பிற்கான இந்த சட்டம் வந்தபின்தான் விதவைப் பெண்களைக் கொன்று ஒழிக்கும் இந்த பழக்கம் நின்றது. (சான்று: ஜாதிப் பெருமை – மனோஜ் மிட்டா.)

“சதி” தடைச் சட்டம் முதல்முதலில் இயற்றப்பட்டு 150 ஆண்டுகள் ஆகியும் அதை பார்ப்பனர்களின் சதியால் முழுமையாக நிறைவேற்ற முடியாத நிலையே இருந்தது.பார்ப்பனர்களின் நிர்வாகத்தில் ஆழ்ந்த ஊடுருவும், சடங்குகளை நிறைவேற்றுவதில் அவர்களுக்கிருந்த ஆழ்ந்த பிடிப்புமே இதற்குக் காரணமாக அமைந்தன.

பார்ப்பனர்கள் இளம் பெண் ரூப் கன்வாரை நெருப்பில் தள்ளிக் கொன்றதுமல்லாமல், இராஜபுத்திரர்களும் அவரை கொன்ற இடத்தில் “சதி மாதாகோயில்” என்று கட்டியும், கொலையுண்ட ரூப்கன்வாரை தெய்வம் என்ற நிலைக்கு உயர்த்தியதும், மறுபுறம் பெண்ணியவாதிகளின் கடுமையான எதிர்ப்புமே இந்த கடுமையான “சதி” தடைச் சட்டம் மீண்டும் ராஜீவ் காந்தி ஆட்சியில் கொண்டு வருவதற்கான காரணமாக அமைந்தது.

ராஜீவ் காந்தியின் “சதி” தடைச்சட்டம் அந்த வழக்கத்தை போற்றுபவர்களுக்கும் தண்டனை வழங்க வகை செய்தது. “சதி”யைக் “கொலைக் குற்றம்” என்று அந்தச் சட்டம் திட்டவட்டமாக அறிவித்தது. அதோடு நில்லாமல் அதைத் தூண்டியவர்களுக்கு “மரண தண்டனை” என்று சட்டம் அறிவித்தது.

இந்தக் கடுமையான சட்டம், லார்ட் மெக்காலே பரிந்துரைத்து, அமலாகிய நீர்த்துப் போனதாகக் கருதப் பட்ட “சதி” ஒழிப்புச் சட்டத்திற்கு சரியான மாற்றாக ராஜீவ் காந்தியின் சட்டம் அமைந்தது. பெண்களை உயிரோடு கொளுத்திக் கொன்ற கொடுமையை முதன்முதலாக நிறுத்தி புரட்சி செய்த வில்லியம் பென்டிங்கின் சட்டம் மீண்டும் ராஜீவ் காந்தியால் புத்துயிர் பெற்றது. (சான்று: “சாதிப் பெருமை” – மனோஜ் மிட்டா.)

(தொடரும்…)

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *