பி.ஜே.பி.யின் ஹிந்துத்துவா அரசியல் இனி… மாணவர்களுக்கு கிழங்கு, முட்டை, காரம் உப்பு இல்லாத உணவு மட்டுமாம்!

3 Min Read

மேற்குவங்கத்தில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள சுவேந்து அதிகாரி தலைமையிலான பாஜக அரசு, அரசுப் பள்ளி களின் மதிய உணவுத் திட்டத்தை ‘இஸ்கான்’ (ISKCON) அமைப்பிடம் ஒப்படைக்க முடிவு செய்துள்ளது.

பாஜக அரசின் இந்த நடவடிக்கைக்கு அம்மாநில எதிர்க்கட்சியான திரிணாமூல் காங்கிரஸ் (TMC) கடும் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளதுடன், இது “இஸ்கான் அமைப்பின் உப்புச்சப்பில்லாத உணவு கலாச்சாரத்தை வலுக்கட்டாயமாகத் திணிக்கும் முயற்சி” என்றும் குற்றம் சாட்டியுள்ளது.

மேற்குவங்க மாநிலத்தின் பட்ஜெட்டை அண்மையில் தாக்கல் செய்த நிதியமைச்சர் ஸ்வபன் தாஸ் குப்தா, “இனிவரும் காலங்களில் அரசுப் பள்ளிகளில் மதிய உணவுத் திட்டத்தின்கீழ் உணவுத் தயாரிப்பு மற்றும் விநியோகப் பணிகளில் இஸ்கான் அமைப்பு உதவும்” என்று அறிவித்திருந்தார்.

இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, இஸ்கான் அமைப்புக்கு மதிய உணவுப் பொறுப்பு வழங்கப் படுவதால், பள்ளிகளில் இதுவரை வழங்கப்பட்டு வந்த முட்டை முற்றிலும் நீக்கப்பட்டு, தீவிர மரக்கறி (சைவ) உணவுகள் மட்டுமே வழங்கப்படும் என்ற தகவல் வெளியானது. இது மேற்குவங்க அரசியல் வட்டாரத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.

டெரிக் ஓ. பிரையன் கடும் விமர்சனம்

இதுதொடர்பாக திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் இணைச் செயலாளர் டெரிக் ஓ. பிரையன் தனது எக்ஸ் (X) சமூக வலைதளப் பக்கத்தில் பாஜக அரசை கடுமையாக விமர்சித்துப் பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: “மேற்கு வங்க தேர்தல் பிரச்சாரத்தின்போது வாக்குகளைப் பெறுவதற்காக மீன் சாப்பிட்டு நாடகமாடிய குஜராத் ஜிம்கானா (பாஜக), இப்போது தனது உண்மையான முகத்தைக் காட்டத் தொடங்கியுள்ளது. மேற்குவங்கத்தில் புதிய பாஜக அரசு செயல்படத் தொடங்கியுள்ள விதம் இதோ…

அரசியல் எதிராளிகளுக்கு எதிராக முட்டைகள் ஓர் ஆயுதமாகப் பயன்படுத்தப்படும் அதே வேளையில், பள்ளி மதிய உணவில் குழந்தைகளுக்கு வழங்கப் பட்டு வந்த முட்டைகள் மறுக்கப்படுகின்றன. உங்கள் அரசியல் எதிராளிகள் மீது வேண்டுமானால் முட்டைகளை வீசுங்கள், அதைவிடுத்து மதிய உணவிலிருந்து முட்டைகளை நீக்கி, குழந்தைகளுக்கு ஏன் ஊட்டச்சத்தை மறுக்கிறீர்கள்? மேற்குவங்கத்தில் சைவ உணவு கலாச்சாரத்தை ஏன் வலுக்கட்டாயமாக திணிக்கிறீர்கள்? பாஜக அரசின் இந்த நடவடிக்கையை திரிணாமூல் காங்கிரஸ் முற்றிலும் நிராகரிப்பதுடன், வன்மையாகக் கண்டிக்கிறது.”

மதிய உணவுத் திட்டத்தில் இஸ்கான் அமைப்பு இணைக்கப்படுவதற்கு அரசியல்வாதிகள் மட்டு மின்றி, கல்வியாளர்களும் தங்களது கவலையை வெளிப்படுத்தியுள்ளனர்.

தீவிரமான ஆன்மிக மற்றும் உணவுப் பழக்க வழக்கங் களைக் கொண்ட இஸ்கான் அமைப்பு, மண்ணுக்கடியில் விளையும் எந்தப் பொருளையும் (கிழங்கு வகைகள்) உணவில் சேர்க்காது. மேலும் வெங்காயம், பூண்டு ஆகியவற்றைப் பயன் படுத்தாததோடு, உணர்ச்சிகளைத் தூண்டும் என்று கூறி காரம் மற்றும் உப்பைத் தவிர்த்தே  பயன்படுத்துமாம். தங்களது இந்த உணவுக் கொள்கையில் அந்த அமைப்பு எந்தவித சமரசமும் செய்துகொள்வதில்லையாம்.

மேலும் உணவு வழங்கும்போது கிருஷ்ண பஜனை கட்டாயம் இருக்குமாம். அவர்கள் கருத்துப்படி விருப்பப்பட்ட மாணவர்கள் கிருஷ்ண பஜனையில் கலந்து கொள்ளலாம் என்று கூறியுள்ளது. ஆனால் உணவு வழங்கும் முன்பாக கையில் தட்டைக் கொடுத்துவிட்டு, கிருஷ்ண பஜனை செய்வார்கள். அப்படி தட்டை வாங்கிய பிற மத மாணவர்களும் கிருஷ்ண பஜனையில் கலந்துகொள்வது தவிர்க்கமுடியாத சூழல் உருவாகும்.

இப்படிப்பட்ட சூழலில், மதிய உணவு ஒப்பந்தத்தை அவர்களிடம் கொடுக்கும்போது, அது பள்ளிச் சிறார்களின் புரதச்சத்து தேவையில் நீண்டகாலப் பாதிப்பை ஏற்படுத்தும் என்று கல்வியாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். பள்ளிச் சிறார்களின் மதிய உணவில் முட்டை நீக்கப்படும் இந்த விவகாரம், மேற்குவங்க அரசியலில் தற்போது பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *