பழனி ரூ.100 கோடி நில மோசடி வழக்கு ஆசிரியர் உட்பட 4 பேரை காவல் துறையினர் விசாரிக்க அனுமதி! திண்டுக்கல் நீதிமன்றம் உத்தரவு

3 Min Read

திண்டுக்கல், ஆக. 6–- பழனி ரூ.100 கோடி நில மோசடி வழக்கில் கைதான ஆசிரியர் உள்ளிட்ட 4 பேரையும் 3 நாட்கள் காவல் துறையினர் எடுத்து விசாரிக்க திண்டுக்கல் மாஜிஸ்திரேட்டு நீதிமன்றம் அனுமதி அளித்தது.

ரூ.100 கோடி நில மோசடி

பழனி அடிவாரம் பகுதியில் தண்டபாணி சுவாமிகள் மடத்தின் அறக்கட்டளைக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்பிலான நிலம் உள்ளது. இந்த நிலம் கடந்த மாதம் 6ஆம் தேதி பழனி சார்பதிவாளர் அலுவலகத்தில் தனிநபர்களுக்கு ரூ.2 கோடிக்கு கிரயமாக பத்திரப்பதிவு செய்யப்பட்டது.

இதுகுறித்து புகாரின் பேரில் சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன், விழுப்புரம் சாலாமேடு பகுதியைச் சேர்ந்த ஆசிரியர் முருகதாஸ் (வயது 56), உடுமலையை அடுத்த பாப்பன்குளத்தைச் சேர்ந்த வெள்ளத்துரை (60), பழனி டி.கே.என்.புதூரைச் சேர்ந்த சேதுபதி (67) ஆகியோர் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் அந்த வழக்கு சி.பி.சி.அய்.டி.க்கு மாற்றப்பட்டது.

11 பேர் மீது வழக்கு

சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் நிபந்தனை முன்பிணை பெற்று சி.பி.சி.அய்.டி. அலுவலகத்தில் ஆஜராகி கையெழுத்திட்டு வந்தார். அவரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. இதுதவிர நிலத்தை விற்பனை செய்வதற்கு தொடர்பு கொண்டவர்கள் உட்பட மொத்தம் 84 பேரிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தினர். இதில் நில மோசடி வழக்கில் 11 பேருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதில் தனிப்படை காவல் துறையினர், நிலத்தை விற்பனை செய்த முருகதாஸ், நிலத்தை வாங்கிய வெள்ளத்துரை (60), சேதுபதி (67), அவர்களுக்கு உதவிய பழனியைச் சேர்ந்த வழக்குரைஞர் அன்வர்தீன் (65) ஆகிய 4 பேரை கைது செய்தனர்.

மனுத் தாக்கல்

பின்னர் கைதான 4 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த நிலையில் அவர்களை காவல் துறையினர் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டு திண்டுக்கல் 1ஆவது ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்தில் சி.பி.சி.அய்.டி. காவல் துறையினர் மனுத்தாக்கல் செய்தனர். அந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது.

இதற்காக 4 பேரும் மதுரையில் இருந்து திண்டுக்கல் வழக்கு அழைத்துவந்து மாஜிஸ்திரேட்டு பாக்கியராஜ் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது சி.பி.சி.அய்.டி. காவல்துறை துணை கண்காணிப்பாளர் அஜய்தங்கம் ஆஜராகி, வழக்கு குறித்த விவரங்களையும், கைதானவர்களிடம் விசாரணை நடத்த வேண்டியதற்கான காரணத்தையும் தெரிவித்தார்.

பின்னர் ஆசிரியர் முருகதாஸ், வெள்ளத்துரை ஆகியோரிடம் நீதிபதி விசாரணை நடத்தினார். பின்னர் முருகதாஸ் உட்பட 4 பேரையும் இன்று (அதாவது நேற்று) முதல் 3 நாட்கள் காவல் துறையினர் விசாரிக்க அனுமதி அளித்து நீதிபதி உத்தரவிட்டார்.

 

காவிரி விவகாரம்

வறட்டுக் கவுரவம் பார்க்காமல்
அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும்

தொல்.திருமாவளவன் வலியுறுத்தல்!

திருச்சி, ஆக. 6- காவிரி விவகாரத்தில் கருநாடக அரசியல்வாதிகளின் அரசியலை அம்பலப்படுத்த வேண்டிய தேவை உள்ளது என்றும், தமிழ்நாடு அரசு உடனடியாக அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

திருச்சி விமான நிலையத்தில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த விசிக தலைவர் திருமாவளவன் கூறியதாவது:

பெங்களூரு நகரத்திற்குத் தேவையான தண்ணீரை கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்தே பெற முடியும் என்ற போதிலும், கருநாடக அரசு மேகதாது அணையைக் கட்டியே தீருவோம் என்பதில் தீவிரமாக உள்ளது.

காவிரி பிரச்சினையில் கருநாடக மாநில அரசியல் வாதிகள் செய்து வரும் அரசியலை உலகிற்கு அம்பலப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசுக்குக் கோரிக்கை

காவிரி விவகாரத்தில் தமிழ்நாடு அரசு வறட்டுப் பிடிவாதமோ, கவுரவமோ பார்க்காமல் உடனடியாக அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்ட வேண்டும்.

எதிர்க்கட்சிகளின் கருத்துகளைக் கேட்டறிந்து, தமிழர்களின் உரிமைகளையும் பிரச்சினைகளையும் முன்னிறுத்த அனைத்துக் கட்சிகளும் இந்த விவகாரத்தில் ஒன்றுபட்டு நிற்க வேண்டும்.

தமிழர்களின் வாழ்வாதாரப் பிரச்சினையான காவிரி விவகாரத்தில் அனைவரும் இணைந்து செயல்படுவதே தற்போதைய தேவை என திருமாவளவன் தனது பேட்டியில் நிறைவாகத் தெரிவித்தார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *