பெரியார் பன்னாட்டமைப்பின் ‘‘சமூகநீதிக்கான வீரமணி விருது’’ வழங்கும் விழா ஏற்புரையில் திராவிடர் கழகத் துணைத் தலைவர் கலி.பூங்குன்றன் உரை

15 Min Read

சிறப்பு புத்தக சலுகைகள்

* பெரியார் பன்னாட்டமைப்பு அளித்துள்ள விருதும் – நிதியும் கருப்பு மெழுகுவத்திகளான

    தோழர்களுக்கு அடையாளமாக எனக்கு அளிக்கப்பட்டதே!

* தந்தை பெரியார் கொள்கை என்பது ஒரு வாழ்க்கை நெறி!

‘‘பெரியார் உலக மயம் – உலகம் பெரியார் மயம்’’ ஆக உழைப்போம்!!

தமிழர் தலைவர் வழிநின்று தந்தை பெரியார் பணி முடிப்போம்!

‘நன்றி’ என்ற ஒன்றைச் சொல்வதைத் தவிர, என்னிடம் வேறு ஒன்றும் இல்லை!

சென்னை, ஆக. 5 தமிழர் தலைவர் ஆசிரியர் தலைமையில் அணிவகுத்து, தந்தை பெரியார் பணி முடிப்போம் –  பெரியார் உலகம் படைப்போம் – கருப்பு மெழுகுவத்திகளுக்காக என்னை ஓர் அடையாளமாகத் தேர்வு செய்து, விருது அளித்த பெரியார் பன்னாட்டமைப்பினருக்கு நன்றி! நன்றி! என்று ஏற்புரையில் குறிப்பிட்டார் திராவிடர் கழகத் துணைத் தலைவர் கலி.பூங்குன்றன்.

பெரியார் பன்னாட்டமைப்பின் ‘‘சமூகநீதிக்கான வீரமணி விருது’’ வழங்கும் விழா

நேற்று (4.8.2026) மாலை 6.30 மணியளவில், சென்னை பெரியார் திடலில் உள்ள நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றத்தில்,  திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களுக்கு, பெரியார் பன்னாட்டமைப்பின் ‘‘சமூகநீதிக்கான வீரமணி விருது’’ வழங்கப்பட்டது. அவ்விழாவில், திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் ஏற்புரையாற்றினார்.

அவரது ஏற்புரை வருமாறு:

மன்னிப்புக் கோருகிறேன்!

முதலாவதாக என்னுடைய மன்னிப்பைக் கோருகின்றேன். அதுவும் ஆசிரியரின் கட்டளைப்படி அமர்ந்துதான் பேசவேண்டும் என்ற முறையில். உள்ளபடியே இந்த நாள் வராமல் இருக்கக்கூடாதா? என்றுகூட ஒரு பக்கத்தில் என் சிந்தனை ஓடிக் கொண்டிருக்கின்றது.

இதே மேடையில், பல நிகழ்ச்சிகளில் வரவேற்புரையாற்றி இருக்கிறேன்; தொடக்கவுரை ஆற்றியிருக்கிறேன். ஆனால், ஏற்புரை என்ற ஒன்றை ஆற்றவேண்டிய நிலைக்கு நான் ஆளாக்கப்பட்டு இருக்கின்றேன்.

ஒரு நாள் இரவு, நம்முடைய இலக்குவன் தமிழ் அவர்கள், தொலைப்பேசி வழியாக, ‘‘ஒரு மகிழ்ச்சியான செய்தி என்றார்; உங்களுக்கு இந்த ஆண்டு பெரியார் பன்னாட்டமைப்பின் சார்பாக, சமூகநீதிக்கான வீரமணி விருது வழங்க முடிவு செய்துள்ளோம்’’என்று சொன்னார்.

நான் மகிழ்ச்சி அடைந்ததைவிட, அதிர்ச்சியடைந்தேன்.

இரண்டு நாள்களுக்கு முன்பு, பன்னாட்டமைப்பின் தலைவர் டாக்டர் சோம.இளங்கோவன் அவர்கள், இதே கருத்தைச் சொன்னார். முறைப்படி, யாரைத் தேர்ந்தெடுத் திருக்கின்றோமோ, அதை அந்தத் தேர்வுக் குழுவின் தலைவர்தான் அறிவிக்கவேண்டும் என்பதற்காகத்தான், அவர் சொன்னதற்குப் பிறகுதான், நான் உங்களிடம் தெரிவிக்கின்றேன் என்றார்.

இந்த ஒழுங்கு முறையை இந்த இயக்கத்தில்தான் நாம் பார்க்க முடியும்.

இந்தப் பணியைச் செய்யும்பொழுது
மிகப்பெரிய மனநிறைவு!

என்னைப் பொறுத்தவரையில், ஏராளமாகப் பாராட்டியிருக்கிறீர்கள். அய்யா சொன்னதுதான் நினைவிற்கு வருகிறது, ‘‘இருப்பதிலேயே மிகக் கஷ்டமான விஷயம், பாராட்டைப் பெறுவதுதான்’’ என்று.

ஆனால், இந்தப் பணியைச் செய்வதின்மூலமாக, ஒரு மன நிறைவு கிடைக்கிறது என்று சொன்னால், இதைவிட ஒரு சுயநலம் உலகத்தில் வேறு இருக்கவே முடியாது.

மன நிறைவோடு அந்தப் பணியைச் செய்கின்றேன். ஒரு சாதாரண எளிய குடும்பத்தில் பிறந்தவன் நான்; இன்னும் சொல்லப்போனால், பட்டதாரிகூட அல்ல, குடும்பச் சூழல்!

ஆனால், எங்கள் பகுதியிலே இயக்கத்தை, அந்தக் காலத்தில் பெரியவர்கள் எப்படி வளர்த்தார்கள்? என்பதைச் சொல்லியாக வேண்டும்.

அண்ணன் அரங்கசாமிக்கு நன்றி!

அண்ணன் அரங்கசாமிக்கும், அவரை இந்த நேரத்தில் நான் நினைவில் கொள்கின்றேன். நான் மயிலாடுதுறையில் பிறந்து வளர்ந்தவன். அதுவரையில் நான், தஞ்சாவூரைப் பார்த்ததில்லை. தஞ்சாவூரைப் பார்க்க வருகிறாயா? என்று கேட்டார். எனக்கு ஏற்பட்ட ஆசையால், வருகிறேன் என்றேன்.

தஞ்சாவூருக்குப் போன கலியமூர்த்தி வேறு; மயிலாடுதுறைக்குத் திரும்பிய கலியமூர்த்தி வேறு.

ஒரே வார்த்தை, தந்தை பெரியாருடைய கொள்கையைக் கொண்டு சேர்ப்பது வரையில்தான் நம்முடைய வேலை. அப்படிக் கொண்டு சேர்த்துவிட்டால், அது, அதனுடைய வேலையைக் கண்டிப்பாகச் செய்யும் என்பதற்கு நானே ஓர் உதாரணம். தஞ்சாவூருக்குச் சென்று வந்த பிறகு அண்ணன் அரங்கசாமி அவர்கள், ‘ஞானசூரியன்’ என்ற புத்தகத்தை என்னிடம் கொடுத்தார். எப்படி அந்தக் காலத்தில், இயக்கத்திற்குத் தோழர்களைக் கொண்டு வந்து சேர்த்தார்கள் என்ற அணுகுமுறையை, இந்தக் காலத்தில் இருக்கக்கூடிய இயக்கப் பொறுப்பாளர்கள் தெரிந்து கொள்ளவேண்டும்.

படித்த முதல் புத்தகம் ‘ஞானசூரியன்!’

‘ஞானசூரியன்’ புத்தகத்தை நான் படித்து முடித்தவுடன், எங்கள் தெருவில் உள்ளவர்கள் எல்லாம் பேச ஆரம்பித்து விட்டார்கள். ‘‘என்ன ஒரு தினுசாக இவன் இருக்கிறானே?’’ என்று.

அப்படித்தான், இயக்கத்திற்கு வரவேண்டிய ஒரு சூழல் வந்தது. ஒரு வழியாக அரசுப் பணியில் சேர்ந்தேன்.

நான் நினைத்துப் பார்க்கிறேன், ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்த ஒருவருக்கு, இப்படிப்பட்ட விருது, பாராட்டு எல்லாம் கிடைத்திருக்கிறது. இதில் ஒரு பெரிய சுயநலம் அடங்கியிருப்பதாகத்தான் நான் கருதுகிறேன். அந்த உணர்ச்சியைத்தான் நான் பெறுகின்றேன்.

தந்தை பெரியார் தன்மானப் பேரவை!

கீழ்வேளூரில், ஓர் அரசுப் பணி. அது திராவிடர் தொழி லாளர்கள் இருந்த பகுதி. அங்கே சென்றவுடன், இந்த உணர்வுள்ள தோழர்களிடம் பழகிப் பழகி, ஓராண்டிற்குப் பின்னால், (பகுத்தறிவாளர் கழகம் 1970 ஆம் ஆண்டு தோன்றியது) நான் சொல்வது, 1962 ஆம் ஆண்டு, அரசுப் பணியாளர்களை ஒன்றிணைந்து, ‘‘தந்தை பெரியார் தன்மானப் பேரவை’’ என்ற ஓர் அமைப்பை உருவாக்கினேன்.

நம்முடைய தலைவர் ஆசிரியர் அவர்கள், இரண்டு முறை அந்த அமைப்பின் நிகழ்ச்சிக்கு வந்திருக்கின்றார். தந்தை பெரியாரே, அந்த அமைப்பின் நிகழ்விற்கு வந்தார். மதிய விருந்தில், மாவட்ட ஆட்சியரும் கலந்துகொண்டார்.

உண்மையிலேயே நான் ஒரு களப் பணியாளன்!

உண்மையிலேயே நான் அடிப்படையிலே ஒரு களப் பணியாளன். ஏதோ ஒரு சூழ்நிலையில், களப்பணியாளனாக இருக்க முடியாமல், வேறு பணியைச் செய்யக்கூடிய ஒரு சூழல் ஏற்பட்டது. அந்த வகையில், ஆசிரியர் அவர்களின் தொடர்பு ஏற்பட்டதற்குப் பின்னால், ஆண்டுதோறும் தயாரிக்கப்படுகின்ற தந்தை பெரியார் பிறந்த நாள் விடுதலை மலருக்கான பணியில், கொஞ்சம் வந்து உதவுங்கள் என்று சொன்னார். 1966 ஆம் ஆண்டு என்று நினைக்கின்றேன்.

அப்பொழுதெல்லாம் இவ்வளவு வசதியாக அச்சகங்கள் கிடையாது. பல அச்சகங்களில் அச்சிட வேண்டிய நிலை இருக்கும். ஆசிரியர் அவர்களும், நானும், புலவர் இமயவரம்பன் ஆகியோர் அண்ணா சாலையில் உள்ள பிலால் உணவு விடுதியில், இரவு உணவைச் சாப்பிட்டுவிட்டு, அடையாறில் உள்ள ஆசிரியர் வீட்டிற்கு நடந்தே செல்வோம்.

அந்த அச்சகத்தில், துண்டு காகிதத்தின்மீது நம்முடைய ஆசிரியர் உறங்கியிருக்கிறார். இப்பொழுது இருக்கின்ற சூழ்நிலைகளைப் பார்க்காதீர்கள். இந்த நிலையை எட்டுவதற்கு எவ்வளவு இடர்ப்பாடுகள், எவ்வளவு துன்பங்கள், எவ்வளவு சங்கடங்கள், எவ்வளவு நெருக்கடிகள் – இவையெல்லாவற்றையும் பார்த்துத்தான் வளர்ந்திருக்கிறோம்.

நூற்றுக்கு நூறு எனக்கு வழிகாட்டி ஆசிரியர்தான்!

எனக்கான சுய சிந்தனையால் வளர்ச்சியடைந்தேன் என்றால், அது  உண்மையில்லை. தந்தை பெரியார் எப்படி ஆசிரியருக்கு வழிகாட்டியாக இருந்தாரோ, அதுபோல, ஆசிரியர் அவர்கள், நூற்றுக்கு நூறு வழிகாட்டியாக எனக்கு இருக்கிறார். பல சமூக சீர்திருத்த இயக்கங்கள், உலகத்திலும் தோன்றியிருக்கின்றன; இந்தியாவிலும் தோன்றியிருக்கின்றன. ஆனால், அதைத் தோற்றுவித்த தலைவர்கள் மறைவிற்குப் பின்னால், அந்த சமூக சீர்திருத்த இயக்கங்களின் முகவரிகள் கிடையாது.

இந்தியாவில், மகாத்மா ஜோதிபாபூலே தொடங்கிய அமைப்போ, கேரளாவில் எஸ்.என்.டி.பி. யோகம் அமைப்போ அப்போது தொடங்கிய அளவிற்கு இப்போது இல்லை. இப்படி நிறைய சொல்லிக் கொண்டு போகலாம்.

தந்தை பெரியாருக்குப் பிறகு இந்த இயக்கம்!

ஆனால், தந்தை பெரியாரால் தோற்றுவிக்கப்பட்ட இயக்கம், அவர் காலத்தை போலவே சிறப்பாக மேலும் வலிமையாக இருக்கிறது. அதுதான் இந்த இயக்கத்தினுடைய சிறப்பாகும்.

அதற்குக் காரணம், தந்தை பெரியார் அவர்களால் அடையாளங்காணப்பட்டு, இயக்கத்தை நடத்துவதற்கான இடத்தில் உட்கார வைத்தார்கள் பாருங்கள், அதுதான் காரணம். அப்படித்தான் அன்னை மணியம்மையார்.

அன்னை மணியம்மையார் அவர்கள் இயக்கத்திற்குத் தலைமையேற்றபொழுது, பெரிய அளவிற்கு விளம்பரம் ஆனவர்கள் இல்லை. விளம்பரம் ஆன தலைவர்கள் நிறைய இருந்தார்கள். ஆனால், இயக்கத் தொண்டனுடைய மகள், அவர்களைத் தந்தை பெரியார், அடையாளங்கண்டார். அதேபோல, ஆசிரியர் அவர்கள்.

ஒரு சாதாரண நடுத்தரக் குடும்பத்தைச் சார்ந்தவர். அவரை, அய்யா அவர்கள் அடையாளங் கண்டார். இப்படிச் சரியாக அடையாளம் காணப்பட்ட காரணத்தினாலும், அவர்களும் தந்தை பெரியார் என்ன நினைத்தாரோ, அந்த லட்சியத்தை  எந்தவித சபலங்களுக்கும் ஆளாகாமல், செய்த காரணத்தினால் தான், இப்படி ஒரு பெரிய இயக்கம் தந்தை பெரியாருக்குப் பின்னாலும் நிலைத்துள்ளது. வளர்ந்தும் வருகிறது.

கருஞ்சட்டைத் தோழர்களின் தீரம் – தியாகம்!

எனக்கு 60 ஆண்டு இயக்கத்தைத் தெரியும். இவ்வளவு இளைஞர்களைப் பார்த்ததே இல்லை. உண்மையைச் சொல்கிறேன். இருப்பார்கள், ஆனால், அந்தத் தொண்டர்களுடைய தியாகம் இருக்கிறது பாருங்கள்; அதை ஒப்பிட முடியாது. ஜாதி ஒழிப்புக்காக ஒரு காகிதத்தில அரசியலமைப்புச் சட்டம் என்று எழுதி எரித்ததற்காக, மூன்றாண்டு கடுங்காவல் தண்டனை ஏற்றவர்கள் கருஞ்சட்டைத் தோழர்கள். சிறையில் பிறந்த குழந்தைகளுக்குச் ‘சிறைப் பறவை’ என்று பெயர் வைத்திருக்கிறார்கள். அவர்கள் செய்த தியாகம் பெரியது. ஆனால், இளைஞர்கள் இன்றைக்கு ஒரு பெரிய அளவிற்குத் திராவிடர் கழகத்தை நோக்கி வந்திருக்கிறார்கள் என்று சொன்னால், அதற்குக் காரணம், தந்தை பெரியாருக்குப் பின்னாலே இந்த இயக்கத்தை வழிநடத்திச் சென்று கொண்டிருக்கின்ற நம்முடைய ஆசிரியர் என்பதை நாம் மறக்க முடியாது.

நம்முடைய திருமாவேலன் அவர்கள், சட்டக் கல்லூரியில் படிக்கின்ற பொழுது,  அந்த விடுதியில் தங்கிப் படித்த தோழர்கள் தங்கவேல், குமாரதேவன் போன்ற தோழர்கள் இங்கே வந்திருக்கிறார்கள். அங்கேதான் சட்டக் கல்லூரி மாணவர் கழகத்தை அமைத்தோம். அப்பொழுதெல்லாம் ஒரு சிலர்தான்! இன்றைக்கு ஏராளமான இளைஞர்கள் திராவிடர் கழகத்தை  நோக்கி வருகிறார்கள். ஏராளமான வெளியீடுகள், நான்கு பக்கமாக இருந்த ‘விடுதலை’ எட்டு பக்கம், பல வண்ணங்களில், இரு பதிப்புகளாக வெளிவருகின்றன. இப்படி அந்தச் சமூக சீர்திருத்தப் புரட்சியாளர் தந்தை பெரியார் அவர்களால் உருவாக்கப்பட்ட இந்த இயக்கம், வலுவாக வேரூன்றி, வேகமாக உலகளவில் பரவியிருக்கிறது.

1994 இல் சிகாகோவில் உருவானது
பெரியார் பன்னாட்டமைப்பு!

1994 ஆம் ஆண்டு இந்தப் பெரியார் பன்னாட்டு அமைப்பு, சிகாகோவில் உருவாக்கப்பட்டது.  அதில், நம்முடைய டாக்டர் சோம.இளங்கோவன், சந்திரஜித் யாதவ் போன்றவர்கள், நமது ஆசிரியர் அவர்கள் பங்கேற்றனர்.  இன்றைக்கு ஓர் அமைப்பை உருவாக்குவது மிக எளிது. நம்முடைய பேராசிரியர் அன்பழகன் சொல்லுவார், தொடக்க விழாவுக்குக் கூப்பிடுகிறான்; மூடு விழாவுக்குக் கூப்பிட மாட்டேன் என்கிறான் என்பார்.

ஒரு நிகழ்ச்சியை தொடங்குவதில் ஆர்வம் இருக்கும்; ஓர்  அமைப்பைத் தொடங்குவதில் ஆர்வம் இருக்கும். அதைத் தொடர்ந்து நடத்திச் செல்கின்றோமா? தொடர்ந்து வலிமையாக நடத்திச் செல்கின்றோமா? தொய்வில்லாமல் நடத்திச் செல்கின்றோமா? கருத்து வேற்றுமைக்கு இடமில்லாமல் நடத்திச் செல்கிறோமா? என்பதுதான் மிக முக்கியம்.

அப்படிப்பட்ட ஓர் இயக்கத்தை, நம்முடைய தலைவர் ஆசிரியர் அவர்கள் இன்றைக்கு நடத்திக் கொண்டிருக்கிறார்கள். பெரியார் பன்னாட்டு அமைப்பு, உலகத்தின் பல நாடுகளில் இருக்கிறது. இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை, தந்தை பெரியார் கருத்துகளை உலகம் முழுதும் கொண்டு சென்று கொண்டே இருக்கிறார்கள்.

பல சீர்திருத்த இயக்கங்கள் மறைந்தன – ஆனால்…

நினைத்துப் பாருங்கள்; மற்ற சமூக சீர்திருத்த இயக்கங்கள் அழிந்து போனதற்கும், இந்த இயக்கம், இந்த சமூகப் புரட்சி இயக்கம் வளர்ந்து வருவதற்குக் காரணம் என்னவென்றால், தந்தை பெரியாருடைய அடிப்படைக் கொள்கை ஒரு பக்கம்; அவரால் அடையாளம் காட்டப்பட்டு, இயக்கத்திற்குக் கொண்டுவரப்பட்ட தோழர்கள், தலைவர்கள் ஒரு பக்கம். அந்த வகையிலே இன்றைக்கு இந்த இயக்கம் மிக வலிமையாக இருந்து கொண்டிருக்கிறது. தலைவர் ஆசிரியர் அவர்களை எல்லாரும் ‘குடும்பத் தலைவர்’ என்று சொல்லுவார்கள். அது அழகுக்காக சொல்வதில்லை. கொள்கை வழிப்பட்ட குடும்பம் அவ்வளவுதான். குருதிக் குடும்பத்தை விட கொள்கை வழிப்பட்ட குடும்பம். எங்கள் வீட்டில மட்டும் ஆசிரியர் அவர்கள், 35 சுயமரியாதைத் திருமணங்களை நடத்தி வைத்திருக்கிறார். கரோனா காலத்தில், இணையத்தின் மூலமாக, முதல் இரண்டு திருமணங்களும் எங்கள் வீட்டில்தான் நடந்திருக்கிறது. இணையத்தின் மூலமாக ஆசிரியர்தான் நடத்தி வைத்தார்.

இந்த இயக்கம் ஒரு கொள்கைக் குடும்பம்!

இப்படி ஒரு குடும்பம், ஒரு கொள்கைக் குடும்பமாக இந்த இயக்கம் இருக்கின்ற காரணத்தினால்தான் அது சாத்தியமாயிற்று. இந்த இயக்கத்தில், எதை எதிர்பார்த்து, வந்திருக்கிறார்கள், சொல்லுங்கள். திராவிடர் கழகத்திற்கு வருகிறார்கள் என்றால், எதை எதிர்பார்த்து? இந்தக் கொள்கை – பெரியார் கொள்கை என்பது ஒரு வாழ்க்கை நெறிமுறை. Way of Life. அந்தக் கொள்கையைப் பின்பற்றினால், வாழ்க்கையில் வெற்றி பெற முடியும்; நன்மதிப்பைப் பெற முடியும்.

நான்  சாதாரண குடும்பத்தைச் சேர்ந்தவன். இன்றைக்கு நல்ல நிலைக்குத்தான் வந்திருக்கேன். நான், உழைத்திருக்கின்றேன் என்று சொன்னார்கள். என்னுடைய வாழ்விணையர் ஆசிரியர்.  என்னுடைய மகள் ஒருமுறை கேட்டார், ‘‘நாங்கள் உயர்நிலைப் பள்ளிப் படிப்பைக் கூட முடிக்கவில்லை; அதற்குள்ளேயே எப்படி நீங்கள் விருப்ப ஓய்வு கொடுத்தீர்கள்?’’ என்று. நச்சு என்று தலையில் குட்டியது போன்று இருந்தது. நான் அதைப்பற்றி எல்லாம் யோசிக்கவில்லையம்மா என்று சொன்னேன். இப்பொழுது நன்றாகத்தானே இருக்கிறோம். இந்தக் கொள்கையை ஏற்றுக்கொள்வதினால், தோல்வி என்ற பேச்சுக்கே இடமில்லை.  இந்தக் கொள்கை ஒழுக்கமானது, நெறியானது, தன்னலம் கருதாதது, பிறர் மகிழ்ச்சி அடைவதன் மூலமாக, மகிழ்ச்சி அடைவது.

சுயநலத்துக்குப் பெரியார் சொன்ன இலக்கணம்!

அய்யா சொல்கிறார், ‘‘நான் சுயநலவாதி இல்லை என்று சொல்லாதீர்கள்; நான் சொன்ன கொள்கை வெற்றி பெற்று, மக்கள் உரிமைப் பெற்று மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள் என்று பார்க்கும் பொழுது, எனக்கு ஏற்படுகிற உணர்ச்சி இருக்கிறதே, இது சுயநலம் இல்லையா?’’ என்று கேட்கிறார்.

இப்படி சுயநலத்துக்கு விளக்கம் சொன்ன ஒரு தலைவரை நீங்கள் பார்க்க முடியாது. இவ்வளவு பேர் என்னைப் பாராட்டினீர்கள் என்று சொன்னால், இது ஒரு சுயநலம். என்னவிட பெரிய பணக்காரர்கள், படித்தவர்கள், பதவி உள்ளவர்கள் இருப்பார்கள். இன்றைக்கு இவ்வளவு பேர் கூடி பாராட்டுகிறார்கள் என்றால், திரண்டுள்ளனர். இதைவிட சுயநலம் உலகத்தில் வேறு என்ன இருக்க முடியும்?

அந்தப் பெருமையை எனக்குத் தலைவர் ஆசிரியர் அவர்கள் அளித்திருக்கிறார்கள். கடைசி மூச்சு அடங்குகிகின்ற வரை, அய்யா தந்தை பெரியார் சொல்வார்,

‘‘புத்தம் சரணம் கச்சாமி

சங்கம் சரணம் கச்சாமி

தம்மம் சரணம் கச்சாமி’’ என்று. அந்த வழிமுறைதான் எங்னுடைய முறை. இன்னொன்று ஆசிரியர் அவர்களுடைய வாழ்விணையர் இங்கே வந்திருக்கிறார்கள். அவர்களைப்பற்றிச்  சொல்ல வேண்டும். பல்வேறு பிரச்சினைகளை நாங்கள் மனம் விட்டுப் பேசுவோம்; பல்வேறு செய்திகளைச் சொல்வார்கள்; குடும்ப ரீதியாக பல்வேறு செய்திகளைச் சொல்வோம்; அவருடைய ஆலோசனைக் கேட்போம். அவர்களும் கேட்பார்கள். இன்றைக்கு அவர்களிடம் ஆலோசனை கேட்காமல், ஒரு காரியத்தை நான் செய்யவிருக்கிறேன். ஆலோசனையைக் கேட்டிருந்தால், அவர்கள் தடுத்திருப்பார்கள் என்று எனக்குத் தெரியும்.

இந்த பெரியார் பன்னாட்டு அமைப்பு எனக்கு அளித்த இந்த ஒரு லட்ச ரூபாய் நிதியை நம்முடைய (நடுவில், மருத்துவர் சோம.இளங்கோவன் அவர்கள் எழுந்து, ‘‘முடியாது, அய்யா முடியாது; தயவு செய்து, இது உங்களுக்காகத்தான்’’ என்று சொல்கிறார். உடனே கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள்,  ‘‘எனக்குக் கொடுத்துவிட்டீர்கள்; நான்தான் முடிவு செய்வேன்’’ என்று சொல்கிறார்.

மருத்துவர் சோம.இளங்கோவன் அவர்கள், ‘‘முடியாது, என்று சொல்லி, அரங்கத்திலிருப்பவர்களைப் பார்த்து, ‘‘நீங்கள் என்ன சொல்றீங்க’’ என்று கேட்டு, ‘‘எல்லாரும் கவிஞர்தான் அதை வைத்துக் கொள்ளவேண்டும்’’ என்று சொல்கிறார்கள் என்றார்.)

தலைவர் ஆசிரியரின் முழு சிந்தனையும்
பெரியார் உலகமே!

ஆசிரியர் அவர்கள் ஒரு பெரிய முயற்சியில் இருக்கிறார்.  அதுதான் பெரியார் உலகம். அவருடைய கனவு, நனவு, மூச்சு எல்லாம் அதுதான். அவர் எவ்வளவு சிரமப்படுகிறார் என்று எனக்குத் தெரியும். என்னுடைய சக்திக்கு, எங்கள் குடும்பச் சக்திக்கு பெருமைக்காக இதைச் சொல்லவில்லை. நாங்கள் இதுவரை ஏழு லட்சம் ரூபாய் கொடுத்திருக்கிறோம். நாங்கள், ஏழு லட்சம் ரூபாய் கொடுக்க முடிந்தால், மற்றவர்களால் எத்தனை லட்சம் ரூபாய் கொடுக்க முடியும்? என்ற எண்ணம் வர வேண்டும் என்பதற்காகச் சொன்னேன். அந்த வகையிலே, இந்த நிதியைக் கொடுக்க வேண்டும் என்றுதான் முடிவு செய்தேன். அந்த அமைப்பினுடைய தலைவர் குறுக்கிடுகிறார். இதைப் பற்றி பின்னாலே சிந்தித்து, முடிவு செய்வேன்.

இந்தக் கொள்கையால்
நாங்கள் வெற்றி பெற்றுள்ளோம்!

எங்களுடைய வாழ்க்கையிலே நாங்கள் மகிழ்ச்சியாகதான் இருக்கிறோம்; வெற்றி பெற்றவர்களாக இருக்கிறோம். காரணம், இந்தக் கொள்கையை ஏற்றுக்கொண்ட காரணத்தினால். அதேபோல என்னுடைய வாழ்விணையர் அவர்களுடைய அந்த ஒத்துழைப்பும், ஒரே கருத்தும்தான் காரணம். என்னைவிட அவங்க சீனியர் இயக்கத்துக்கு. சட்ட எரிப்பின்போது சிறைக்குப் போனவர் அவருடைய தந்தையார். என்னுடைய நண்பர் தான் அவர். பின்னாளில், என்னுடைய மாமனாராக மாறினார். கையெழுத்துப் போடும்போது கூட, நாத்திகன் ஆர்.சின்னத்தம்பி என்றுதான் கையெழுத்துப் போடுவார். ஆசிரியர் அவர்களுக்கு நன்றாகத் தெரியும். இவ்வளவு பெரிய பாராட்டு, சிறப்பை எனக்கும் அளித்து, என்னுடைய ஆயுளையும் நீட்டியிருக்கின்றது இந்த அமைப்பு! இவ்வளவு பெருமக்கள் வந்திருக்கிறீர்கள். தமிழ்நாட்டின் பல்வேறு பகுதியில் இருந்து கழகத் தோழர்கள் வந்திருக்கிறார்கள். பெரிய பதவியில் இருக்கக்கூடிய பெருமக்கள் எல்லாம் வந்திருக்கிறார்கள்.  பல்துறை அறிஞர்களை இங்கே பார்க்க முடிகிறது.

தந்தை ெபரியாருக்குப் பின், தலைவர் ஆசிரியரின் சமூகநீதி வெற்றிப் பணிகள்!

இவர்களையெல்லாம் பார்க்கின்றபொழுது, எனக்காக இல்லை. இந்தக் கொள்கைக்காக, தந்தை பெரியாருக்காக, இந்த இயக்கம் மேலும் வலுவாக இருக்க வேண்டும். திருமாவேலன் அருமையாகச் சொன்னார். அய்யா அவர்கள், காங்கிரசை விட்டு வெளியேறியது சமூகநீதிக்காகத்தான். தந்தை பெரியார் மறைந்த நேரத்தில், நமக்கு இருந்த இட ஒதுக்கீடு 49 சதவிகிதம். அய்யா இல்லாத காலத்தில், நம்முடைய தலைவர் ஆசிரியர் காலத்தில் நாம் பெற்றிருக்கின்ற இட ஒதுக்கீடு 69%. அரசமைப்புச் சட்டம் ஒன்பதாவது அட்டவணைப் பாதுகாப்போடு இருக்கிறது. உச்சநீதிமன்றம்கூட ஒன்றும் செய்ய முடியாது. தந்தை பெரியாரின் கட்டமைப்பின் பலம்தான் இது! தந்தை பெரியார் இருந்த காலத்தில் தீர்மானம் போட்டிருக்கிறார். 1940 ஆம் ஆண்டிலேயே ஒன்றிய அரசுத் துறைகளிலும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடு வேண்டும் என்று.  கிடைக்கவில்லை. ஆனால், நம்முடைய ஆசிரியர் காலத்தில், 27 சதவிகித இட ஒதுக்கீடு, அகில இந்தியா முழுதும் உள்ள பிற்படுத்தப்பட்ட மக்களுக்குக் கிடைத்துள்ளது. 42 மாநாடுகள், 16 போராட்டங்கள். ஆகவே, இந்த இயக்கம் தோழர்கள் வளர்ச்சி மட்டுமல்ல; இந்த இயக்கத்தினால், மக்கள் வளர்ச்சிப் பெற்றிருக்கிறார்கள். அரசியலுக்குச் செல்லாத இயக்கம் இது. ஆனால், அரசியலை வெளியிலிருந்து நடத்துகின்ற இயக்கம் திராவிடர் கழகம். தந்தை பெரியார், அரசியலுக்குச் செல்லவில்லை; பதவிக்குச் செல்லவில்லை. ஓர் ஆட்சியை எப்படி நடத்த வேண்டும் என்பதை வெளியிலிருந்து நடத்திக் காட்டியவர் தந்தை பெரியார்.

தந்தை பெரியார் கூறியது ஒன்றும் தப்பவில்லை!

அந்த முறையில், இன்றைக்கு நடந்த ஒரு பரபரப்பான – அதே நேரத்தில் வருந்தத்தக்க நிகழ்ச்சி உள்பட முதல் அறிக்கையைக் கொடுத்தவர் நம்முடைய தலைவர் ஆசிரியர் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. அய்யா சொன்னார், ‘‘நாட்டை பிடித்த நோய்கள் அய்ந்து என்று.  பார்ப்பான், பத்திரிக்கை, அரசியல் கட்சிகள், தேர்தல், சினிமா’’ என்று பெரியார் சொன்னது ஒன்றும் தப்பாய் விடக்கூடாது பாருங்கள்; அதுதான் நடந்துகொண்டு இருக்கிறது.

நமது இயக்கத் தோழர்களுக்கு

ஆகவே, நம்முடைய தோழர்கள், நம்முடைய இயக்கத்தோழர்கள், இளைஞர்களை இயக்கத்தில் ஈர்ப்பதற்கான பெரு முயற்சியில் ஈடுபட வேண்டும் என்று கேட்டு, இவ்வளவு சாதாரண ஒரு எளியவனுக்கு இவ்வளவு பெரிய பாராட்டையும், நிதியையும் கொடுத்தமைக்காக, பெரியார் பன்னாட்டு அமைப்புக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

நான் சில நாள்களுக்க முன்பு உடல் நலம் பாதிக்கப்பட்ட நேரத்தில், வாரத்திற்கு இரண்டு முறை ஆசிரியர் அவர்கள் எங்கள் வீட்டிற்கு வந்தார். (கண்கள் கலங்கினார்) அனைவருக்கும் நன்றி,

தமிழர் தலைவர் தலைமையில் நின்று, தந்தை பெரியார் பணி முடிப்போம்!

வணக்கம்!

– இவ்வாறு திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் ஏற்புரையாற்றினார்.

 

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  


Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *