புதுடில்லி, ஆக.5- எத்தனால் கலந்த இ20 பெட்ரோலுக்கு எதிர்ப்பு தெரிவித்து, பிரதமர் இல்லம் நோக்கி ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அர்விந்த் கெஜ்ரிவால் தலைமையில் கட்சித் தொண்டர்கள் நேற்று (4.8.2026) பேரணி நடத்தினர்.
பெட்ரோலில் 20 சதவீதம் அளவுக்கு எத்தனால் கலந்து இ–––-20 என விற்பனை செய்வதைத் தடுக்க வேண்டும் என்று கோரி டில்லியில் நேற்று (4.8.2026) பிரதமர் மோடியின் இல்லம் நோக்கி ஆம் ஆத்மியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அர்விந்த் கெஜ்ரிவால், டில்லி முன்னாள் துணை முதலமைச்சர் மனீஷ் சிசோடியா, கட்சியின் பிற தலைவர்கள், தொண்டர்கள் இணைந்து பேரணியாகச் சென்றனர்.
அப்போது நடுவழியில் அவர்களை காவல் துறையினர் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து அவர்கள் சாலையோரம் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். அப்போது செய்தியாளர்களிடம் அர்விந்த் கெஜ்ரிவால் கூறியதாவது: இ20 பெட்ரோல் விவகாரத்தில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் தலையீடு உள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பின் நெருக்கடிக்குப் பயந்து பிரதமர் மோடி செயல்பட கூடாது என்று நான் கூறிக் கொள்ள விரும்புகிறேன். அமெரிக்காவிடம் இருந்து எத்தனால் வாங்குவது நிறுத்தப்பட வேண்டும். நம்முடைய நாட்டில், எத்தனால் கலப்பு பெட்ரோல் திணிப்பை நிறுத்துவ தற்கான ஏற்பாடுகளைப் பிரதமர் மோடி செய்ய வேண்டும்.
இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி எங்களை அழைத்து பேசுவார் என நம்புகிறேன். அவரைச் சந்திக்க வேண்டும் என்று நாங்கள் தகவல் அனுப்பி இருக்கிறோம். அதுவரை எங்கள் போராட்டம் தொடரும். இ20 பெட்ரோல் பயன்படுத்துவதால் பல பிரச்சினைகள் ஏற்படுகின்றன. இதுதொடர்பாக கோடிக்கணக்கான வாகன உரிமையாளர்கள் கவலை தெரிவித்து வருகின்றனர்.
இ–-20 பெட்ரோலை பயன்படுத்துவதால் பிரச்சினை வருகிறது என்று பொதுமக்கள் கூறிய போதும், அந்த பெட்ரோலைப் பயன்படுத்த வேண்டும் என்று ஒன்றிய அரசு கூறுவது ஏன்? சாதாரண பெட்ரோல் அல்லது இ-20 பெட்ரோல் இவற்றில் எதை வாங்குவது என்பதற்கான வாய்ப்பைப் பெட்ரோல் நிலையங்களில் நுகர்வோருக்கு வழங்க வேண்டும். இதைத்தான் நாங்கள் கேட்கிறோம். மேலும், இ–-20 பெட்ரோல் விலையைக் குறைக்க வேண்டும். இவ்வாறு கெஜ்ரிவால் கூறினார்.
