புதுடில்லி, ஆக. 4- கொலீஜியம் அமைப்பில் வெளிப்படைத்தன்மை இல்லாததால் தான், சாமானிய மக்களை இழிவுபடுத்திப் பேசுபவர்கள் கூட நீதிபதிகளாக உயர்கிறார்கள் என்று உச்ச நீதிமன்ற நீதிபதி உஜ்ஜல் புயான் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
விமர்சனம்
இந்திய நீதித்துறையில் நீதிபதிகளை நியமிக்கும் ‘கொலீஜியம்’ முறை குறித்து விவாதம் எழுந்துள்ள நிலையில், நீதிபதி உஜ்ஜல் புயான் இதன் வெளிப்படைத்தன்மையற்ற தன்மையைக் கடுமையாக விமர்சித்துள்ளார்.
“கொலீஜியம் நடைமுறையில் வெளிப்படைத் தன்மை (Transparency) இல்லாததன் விளைவாகவே, மக்களை ‘எறும்புகள்’ என்று சுட்டிக்காட்டிப் பேசுபவர்கள் எல்லாம் நீதிபதி நாற்காலியில் அமரும் சூழல் உருவாகிறது” என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கடந்த 2024-ஆம் ஆண்டு நடைபெற்ற விஷ்வ ஹிந்து பரிஷத் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி சேகர் குமார் யாதவ், இஸ்லாமியச் சமூக மக்களை ‘எறும்புகள்’ எனக் குறிப்பிட்டுப் பேசியது பெரும் புயலைக் கிளப்பியது.
அரசியலமைப்புச் சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற கொள்கையைப் பாதுகாக்க வேண்டிய உயர் பொறுப்பில் உள்ள ஒருவர், குறிப்பிட்ட ஒரு சமூக மக்களை எறும்புகளுடன் ஒப்பிட்டுப் பேசியது கடும் கண்டனத்திற்கு உள்ளானது.
“நீதித்துறை நியமனங்களில் வெளிப்படைத்தன்மை இல்லாதபோது, தகுதியும் நடுநிலைமையும் அற்ற பேச்சுக்களைப் பேசுபவர்களும் நீதிபதிகளாக நியமிக்கப்படும் அபாயம் ஏற்படுகிறது.”என்று நீதிபதி உஜ்ஜல் புயான் வேதனையுடன் உரை நிகழ்த்தினார்
நீதிபதிகள் நியமனத்தில் சீர்திருத்தமும், தகுந்த கண்காணிப்பும் அவசியம் என்பதை உணர்த்தும் வகையில் உச்ச நீதிமன்ற நீதிபதியின் இந்த வெளிப்படையான விமர்சனம் தற்போது சட்ட வல்லுநர்கள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.
