தருமபுரி, ஆக. 4- கருநாடகா மாநில அணைகளில் இருந்து திறக்கப்பட்ட உபரி நீர் இன்று (4.8.2026) அதிகாலையில் தமிழ்நாடு எல்லையான பிலிகுண்டுலுவை வந்தடைந்தது.
கருநாடகா மாநிலம் கபினி அணையில் இருந்து கடந்த 1ஆம் தேதி காலையில் விநாடிக்கு 5,000 கனஅடி தண்ணீர் காவிரியாற்றில் திறந்து விடப்பட்டது. பின்னர் பகலில் 10 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டது. மேலும், அன்று நள்ளிரவில் வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவு 25 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டது. பின்னர் கபினி அணைக்கான நீர்வரத்துக்கு ஏற்ப காவிரியில் வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவிலும் ஏற்ற, இறக்கங்கள் பதிவாகி வந்தது.
இவ்வாறு திறக்கப்பட்ட உபரி நீர் 3ஆம் தேதி மாலையில் தமிழ்நாடு எல்லையான ஒகேனக்கல் அடுத்த பிலிகுண்டுலு வந்தடையும் என எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும், கடந்த சில மாதங்களாக நிலவிய கடும் வறட்சியால் காவிரியாறு காய்ந்து கிடந்த நிலையில் நீர்வரத்து ஒகேனக்கல்லை வந்தடைய கூடுதல் நேரம் எடுத்துக் கொண்டது. இன்று (4.8.2026) அதிகாலையில் உபரிநீர் ஒகேனக்கல் அடுத்த பிலிகுண்டுலுவை வந்தடைந்தது. காலை 6 மணியளவில் பிலிகுண்டுலுவில் விநாடிக்கு 1,000 கன அடியாக நீர்வரத்து பதிவானது. மேலும் நீர்வரத்து சீராக உயர்ந்து வருகிறது.
விமானப்படைத் தேர்விலும் ஆள் மாறாட்டமாம்!
சென்னை, ஆக. 4- சென்னை ஆவடி விமானப்படை மய்யத்தில் பணியாளர் சேர்க்கைக்கு எழுத்துத்தேர்வு நடந்தது. இந்த தேர்வில் முறைகேடு நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக ஆள்மாறாட்டம் செய்த இருவர், ஜி.எஸ்.எம். டிரான்ஸ்மிட்டர் வைத்து பதில்களை கேட்டு எழுதிய இருவர் என அரியானா மாநிலத்தை சேர்ந்த 4 பேரை ஆவடி முத்தாபுதுப்பேட்டை காவல் துறையினர் கைது செய்து தீவிர விசாரணை நடந்து வருகிறது.
விமானப்படை மய்யத்தில் நடைபெற்ற கிளார்க் மற்றும் ஓட்டுநர் பணிக்கு நடந்த தேர்வில் ஆள்மாறாட்டம் மற்றும் நவீன ஜி.எஸ்.எம். டிரான்ஸ்மிட்டர் கருவியைப் பயன்படுத்தி விமானப்படை தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட அரியானாவை சேர்ந்த 4 பேரை காவல் துறை கைது செய்துள்ளனர்.
தேர்வு அறைக்குள் நுழைய முயன்றபோது, தேர்வு அனுமதிச்சீட்டில் இருந்த ஒளிப்படமும் சம்பந்தப்பட்ட நபரின் முகமும் ஒத்துப்போகாததால் ஆள்மாறாட்டம் செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், நவீன ஜி.எஸ்.எம். டிரான்ஸ்மிட்டர் மற்றும் ப்ளூடூத் போன்ற மின்னணு கருவிகளைப் பயன்படுத்தி தேர்வில் முறைகேடு செய்ய முயன்றதும் சோதனையில் அம்பலமானது.
ஆள்மாறாட்டம் செய்த அரியானாவைச் சேர்ந்த கவுரவ் (21), அனில் (27) ஆகியோரும் டிரான்ஸ்மிட்டர் பாக்ஸ் வைத்து தேர்வு எழுதிய சவான் (25), தீபக் ( 24) ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். முத்தாபுதுப்பேட்டை மற்றும் ஆவடி காவல் துறையினர் இந்த 4 பேர் மீதும் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, இவர்களுடன் தொடர்புடைய பிற நபர்கள் குறித்தும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேர்வு முறைகளில் வேறு ஏதும் முறைகேடு ஏற்பட்டுள்ளதா அதேபோன்று வினாத்தாள் ஏதும் கசிந்துள்ளதா என்ற பல்வேறு கோணத்தில் விமானப்படை அதிகாரிகளும் ஆவடி முத்தாபுதுப்பேட்டை காவல் துறையினரும் தற்போது தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வடமாநிலத்தில் இருந்து வந்து தேர்வில் முறைகேடு செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
