சென்னை, ஆக. 2- கருநாடகா அணையில் இருந்து தமிழ்நாட்டிற்கு வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.
காவிரியின் குறுக்கே மேகதாது அணையை கட்டியே தீருவோம் என்று பிடிவாதம் காட்டி வரும் கருநாடகா, ஒப்பந்தப்படி தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்து விடவும் மறுத்து வருகிறது. நீர் பங்கீட்டு பிரச்சினையில் ஒவ்வொரு முறையும் வழக்கு தொடர்ந்தே, தண்ணீரைப் பெற வேண்டிய நிலை இருந்து வருகிறது.
அந்த வகையில், இந்த முறையும் தமிழ்நாட்டிற்கு அடுத்த 15 நாட்களுக்கு 3,500 கனஅடி நீரை கருநாடகா திறந்து விட வேண்டும் என்ற உத்தரவை காவிரி மேலாண்மை வாரியத்திடம் இருந்து தமிழ்நாடு பெற்றது. இந்த உத்தரவை எதிர்த்து கருநாடகாவில் கன்னட அமைப்புகள் ஆக.,2ஆம் தேதி போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தன. மேலும், அணைகளில் தண்ணீர் இருப்பு குறைவாகவே இருப்பதால், தண்ணீர் திறந்து விட முடியாது என்று கருநாடகா முதலமைச்சர் சிவகுமார் கூறினார்.
இந்த நிலையில், நேற்று (1.8.2026) மைசூரில் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் சிவகுமார், ‘கருநாடகா அணைகள் நிரம்பும் நிலையில் உள்ளன. இயற்கையை யாரும் கட்டுப்படுத்த முடியாது. தண்ணீரை நாம் கட்டுப்படுத்த நினைத்தால், அது நமக்கு ஆபத்தாகி விடும். கன்னட அமைப்புகள் அறிவித்துள்ள போராட்டத்தை திரும்பப் பெற வேண்டும்,’ என்றார்.
தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்து விடப்போவதாக கருநாடகா முதலமைச்சர் சூசகமாக கூறிய நிலையில், கபினி அணையில் இருந்து வினாடிக்கு 5 ஆயிரம் கன அடி நீர் திறந்து விடப்பட்டது. நீர்வரத்து அதிகரிக்க அதிகரிக்க, உபரிநீர் வெளியேற்றும் அளவும் உயர்த்தப்பட்டு வருகிறது. தற்போது, வினாடிக்கு 25 ஆயிரம் கனஅடி நீர் திறந்து விடப்பட்டு வருகிறது.
கபினி அணையின் மொத்த நீர்த்தேக்க உயரம் 65 அடி. இதில் 62 அடிக்கு தற்போது தண்ணீர் நிரம்பியுள்ளது. அணை நிரம்ப இன்னும் மூன்று அடி மட்டுமே பாக்கியுள்ள நிலையில், அணைக்கு வரும் தண்ணீரில் 5 ஆயிரம் கனஅடி உபரிநீராக தமிழ்நாட்டிற்கு வெளியேற்றப்படுகிறது. தண்ணீர் வரத்து அதிகரித்துக் கொண்டே வருவதால், நேரம் செல்லச் செல்ல வெளியேற்றப்படும் நீரின் அளவும் அதிகரிக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
தமிழ்நாட்டில் இந்த மாதத்தில் மழைப்பொழிவு எப்படி இருக்கும்?
வானிலை ஆய்வு மையம் தகவல்
சென்னை, ஆக.2- தமிழ்நாட்டில் ஆகஸ்டு-செப்டம்பர் மாதங்களில் வட மற்றும் தென் கடலோர மாவட்டங்களில் மழைப்பொழிவு இயல்பைவிட அதிகமாகவும், வடக்கு உள், தெற்கு உள் மாவட்டங்களில் இயல்பு நிலையிலும், மேற்கு தொடர்ச்சிமலை மாவட்டங்களில் இயல்பைவிட குறைவாகவும் மழை பெய்யக்கூடும்.
தமிழ்நாடு கடலோரப்பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்த தாழ்வுப் பாதை நிலவுவதால், இன்றும் (2.8.2026), நாளையும் (3.8.2026) மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களிலும், வட கடலோர மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மய்யம் தகவல் தெரிவித்துள்ளது.
பில்லூர் அணை நீர்மட்டம்
97 அடியை எட்டியது!
பவானி ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!
மேட்டுப்பாளையம், ஆக.2- கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கும் பில்லூர் அணையின் நீர்மட்டம், நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக அதிவேகமாக உயர்ந்து வருகிறது.
மொத்தம் 100 அடி கொள்ளளவு கொண்ட இந்த அணையில், இந்த ஆண்டின் தென்மேற்கு பருவமழை காலத்தில் முதன்முறையாக நேற்று (1.8.2026) அதிகாலை 3.30 மணியளவில் நீர்மட்டம் 97 அடியை எட்டியுள்ளது. (கடந்த ஆண்டில் பில்லூர் அணை நான்கு முறை நிரம்பியது குறிப்பிடத்தக்கது).
அணையின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, அணைக்கு வரும் 8,000 கன அடி நீரும் அப்படியே பவானி ஆற்றில் திறந்து விடப்பட்டு வருகிறது:
4 மதகுகள் வழியாக: வினாடிக்கு 2,060 கன அடி நீர் மின் உற்பத்திக்காக: வினாடிக்கு 6,000 கன அடி நீர் மொத்த உபரி நீர் திறப்பு: 8,060 கன அடி நீர் ஆற்றில் பெருக்கெடுத்து ஓடும் உபரி நீரால், பவானி ஆற்றின் கரையோரப் பகுதி மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.
தேக்கம்பட்டி, நெல்லித்துறை, ஓடந்துறை, பாலப்பட்டி, ஊமையம்பாளையம், வச்சினம்பாளையம், சிறுமுகை, லிங்காபுரம் உள்ளிட்ட கரையோரப் பகுதிகள்.
இப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் அனைவரும் உடனடியாகப் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு வருவாய்த்துறையினர் ஒலிபெருக்கிகள் மற்றும் நேரடி எச்சரிக்கைகள் மூலம் அறிவுறுத்தி வருகின்றனர்.
