சென்னை, ஆக.4 பழனி தண்டாயுதபாணி சாமி கோயிலுக்குச் சொந்தமான ரூ. 100 கோடி மதிப்பிலான நிலம் முறைகேடாக பத்திரப்பதிவு செய்யப்பட்ட விவகாரத்தில், உயர்நீதிமன்ற மதுரைக் கிளை பிறப்பித்த உத்தரவுக்குத் தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.
பழனி கோயிலுக்குச் சொந்தமான நிலம் சட்டவிரோதமாகப் பத்திரப்பதிவு செய்யப்பட்டதை அடுத்து, அந்தப் பத்திரப்பதிவை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டிருந்தது. மேலும், இந்த முறைகேடு தொடர்பாக வெள்ளத்துரை மற்றும் சேதுபதி ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர். உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்தும், தங்களுக்கு பிணை கோரியும் வெள்ளத்துரை மற்றும் சேதுபதி ஆகியோர் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
தடை விதிக்க முடியாது
இந்த மனுக்கள், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.வி. நாகரத்னா மற்றும் ஆர். மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள் பத்திரப் பதிவை ரத்து செய்து உயர்நீதிமன்ற மதுரை கிளை வழங்கிய தீர்ப்புக்கு எந்தவித தடையும் விதிக்க முடியாது என தெள்ளத்தெளிவாக தெரிவித்தனர். நிலுவையில் உள்ள உரிமையியல் (Civil) வழக்கில் சேதுபதி மற்றும் வெள்ளத்துரை ஆகியோரை இடையீட்டு மனுதாரர்களாக (Intervenors) சேர்த்துக்கொள்ள அனுமதி வழங்கப்படுகிறது.
இறுதித் தீர்ப்புக்குப் பின் அமல்
உயர்நீதிமன்றம் பிறப்பித்த பத்திரப்பதிவு ரத்து உத்தரவை, தற்போது நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் உரிமையியல் வழக்கின் இறுதித் தீர்ப்பு வந்த பிறகே செயல்படுத்த வேண்டும். இந்த உத்தரவுகளைப் பிறப்பித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு, இது தொடர்பான வழக்கினை முடித்து வைத்து உத்தர விட்டனர்.
