அயோத்தி ராமன் கோயில் காணிக்கை திருட்டைக் கண்டித்து நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியினர் ஆர்ப்பாட்டம்

2 Min Read

சிறப்பு புத்தக சலுகைகள்

புதுடில்லி, ஆக.04- அயோத்தி ராமன் கோயில் காணிக்கை திருட்டைக் கண்டித்து, நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள மகர் துவார் இடத்தில் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் பிரியங்கா காந்தி மற்றும் சமாஜ் வாதி, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் நேற்று (3.8.2026) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, அயோத்தியில் காணிக்கை திருடப்பட்டதாக கூறப்படும் நிகழ்வைக் குறிக்கும் வகையில், அங்கு வைக்கட்டிருந்த காணிக்கைப் பெட்டியில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பணத்தை செலுத்துவது போல் செலுத்தி விட்டு பின்னர் அதை திருடுவது போல் செய்து காட்டினர்.

மேலும், ‘நீட்’ தேர்வை கண்டித்து அண்மையில் நடைபெற்ற மாணவர் போராட்டத்தில், அவர்கள் மீது காவல் துறை நடத்திய கொடூர தாக்குதலையும் கண்டித்து முழக்கங்களை எழுப்பினர். குறிப்பாக, உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்றத்துக்கு ஏன் வரவில்லை என்ற வாசகங்கள் இடம் பெற்ற பாதாதைகளை கையில் ஏந்தி நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கடந்த 31.7.2026 அன்று நாடாளுமன்ற வளாகத்தில் ‘இண்டியா’ கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடகம் மூலம் போராட்டம் நடத்தினர். இதில், ராகுல் காந்தி உள்ளிட்ட நாடாளு மன்ற உறுப்பினர்கள் காணிக்கைப் பெட்டிகளில் பணம் செலுத்திய நிலையில், காவி நிற உடை அணிந்திருந்த ராஜேஷ் ரஞ்சன் எனும் பப்பு யாதவ் அந்த பணத்தை தனது பாக்கெட்டில் வைத்துக் கொள்வது போல நடித்தார். இதன் மூலம், ராமன் கோயிலில் காணிக்கைத் தொகை திருடப்பட்டதாக கூறப்படும் நிகழ்வை அவர்கள் சுட்டிக் காட்டினர்.

இந்தப் போராட்டத்திற்கு பாஜக மற்றும் பல இந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இது ஸநாதன தர்மத்தை அவமதிக்கும் செயல் என்று அவை குற்றம்சாட்டியுள்ளன.

இதற்கிடையில், இந்த வார நாடாளுமன்ற நடவடிக்கைகளில் பின்பற்ற வேண்டிய வியூகத்தை இறுதி செய்யும் நோக்கில், காங்கிரஸ் கட்சி தலைவரும், மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவருமான மல்லிகார்ஜுன கார்கேவின் அலுவலகத்தில் ‘இண்டியா’ கூட்டணிக் கட்சிகளின் கூட்டம் நேற்று (3.8.2026) நடைபெற்றது. கூட்டத்திற்கு பிறகு, எக்ஸ் தளத்தில் கார்கே வெளியிட்ட பதிவில், “மாணவர்கள் மீது தடியடி மற்றும் பெல்லட் துப்பாக்கி பயன்படுத்தப்பட்ட நிகழ்வு குறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்றத்தில் வந்து விளக்கம் அளிக்க வேண்டும். பிரதமரின் மேற்பார்வையில் செயல்படும் சிறீ ராமரன் கோயில் அறக்கட்டளையின் கீழ் இருந்தபோதும், பக்தர்கள் வழங்கிய காணிக்கை எவ்வாறு திருடப்பட்டது என்பது குறித்தும் பிரதமர் பதிலளிக்க வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *