பத்மசிறீ மருத்துவர்
வி.எஸ்.நடராஜன்
முதியோர் நல மருத்துவம்,
சென்னை
வயதான காலத்தில் நல்ல மனநிலையில் உள்ள முதியவர்கள் திடீரென்று வித்தியாசமாக செயல்பட ஆரம்பிப்பார்கள். அவர்கள் மனம் மிகவும் குழம்பி இருக்கும். மிகப் பதற்றத்துடன் காணப்படுவார். வீட்டில் உள்ளவர்களை அடையாளம் தெரியாமல் புதியவர்களை பார்ப்பது போல் பார்ப்பார். இதனால் உறவினர்கள் “நேற்று நல்லா இருந்தாரே, இன்றைக்கு என்ன ஆச்சு” என்று மிக வேதனையடைந்து பெரியவரை மருத்துவரிடம் அழைத்துச் செல்வார்கள். அண்மையில் நடைபெற்ற ஒரு உண்மை நிகழ்ச்சியோடு இக்கட்டுரை தொடங்குகிறது.
திடீர் மனக்குழப்பம் இளமைப் பருவத்தினரைவிட முதியவர்களுக்கு அதிகம் வர வாய்ப்புகள் உண்டு. மனக்குழப்பம் முன்னெச்சரிக்கை ஏதுமின்றி, நல்ல மனநிலையில் உள்ள முதியவர்களுக்கும் கூட திடீரென்று வரலாம். இந்த மனக்குழப்பமும் பதட்டமும் சில மணி நேரங்கள் தான் நீடிக்கும். அதற்குண்டான காரணத்தை கண்டறிந்து தக்க சிகிச்சை அளித்துவிட்டால் பழைய நிலைக்கு நலமாகத் திரும்பி விடுவார்.
மனக் குழப்பம் வர வாய்ப்புள்ளவர்கள்
மிகவும் வயதானவர்கள்
மறதி நோய் போன்ற மூளைசார்ந்த நோயுள்ளவர்கள்
நடக்க முடியாத நிலையில் உள்ளவர்கள்
பல நோய் உள்ளவர்கள்
பலவிதமான மாத்திரைகளை உண்ணுபவர்கள்
காரணங்கள்
நோய் தொற்று : பாக்டீரியா, வைரஸ் கிருமிகளின் தொல்லைகள், உ.ம்.: நிமோனியா
சிறுநீர்த்தாரையில் பூச்சித் தொல்லை
மருந்துகள் : உ.ம்: வலி நிவாரணி, தூக்க மாத்திரை, உயர் இரத்த அழுத்த மாத்திரை, மன நோய்க்கு கொடுக்கும் மாத்திரை, காச நோய் மாத்திரை, உதறுவாதத்திற்கு கொடுக்கும் மாத்திரை.
மதுவையும், சில மாத்திரைகளையும் திடீரென்று நிறுத்துவது.
மூளைக்கு இரத்த ஓட்டம் குறைதல், உ.ம்.: மாரடைப்பு, இதயம் வலிமை இழத்தல், உடலில் இரத்தம் திடீரென குறைதல், சீரற்ற நாடித்துடிப்பு.
மூளையைச் சார்ந்த நோய்கள், உ.ம்.: பக்கவாதம், மூளையில் இரத்தக்கசிவு.
மூளைக்கு பிராணவாயு குறைதல், உ.ம்.: நிமோனியா, ஆஸ்த்துமா
தொடர்ந்து தாங்க முடியாத வலி இருந்தால் மனக்குழப்பம் ஏற்படும், உ.ம். அறுவைச் சிகிச்சைக்குப் பின், மலம் இறுகும் போது, சிறுநீர் அடைப்பு ஏற்படும்போது, எலும்பு முறிவு.
புற்றுநோய் மூளையைத் தாக்கும் பொழுது
இரத்தத்திலுள்ள உப்பு மற்றும் இதர தாதுப் பொருட்களின் அளவு மாறுபடுதல், உ.ம்.: உப்பு, சுண்ணாம்புச்சத்து, பொட்டாசியம் மற்றும் மக்னீசியம்.
நீரிழிவு நோய் : உடலிலுள்ள சர்க்கரையின் அளவு குறைவது மற்றும் அளவு அதிகரித்தல்.
இதர நோய்கள், உ.ம்.: தைராய்டு தொல்லைகள்
உணர்ச்சிகளை கிரகிக்கும் தன்மை குறைதல், உ.ம்.: கண் பார்வை குறைதல், காது கேளாமை, இருண்ட சூழ்நிலை, சுற்றுபுற மாற்றங்கள்
சிகிச்சை முறைகள்
மனக்குழப்பம் அடைந்த நோயாளிகளை முழுமையாக பரிசோதனை செய்வது மிக அவசியம். அதற்கு தேவையான இரத்தப் பரிசோதனை, எக்ஸ்ரே, ஈ,சி.ஜி. முதலியவற்றை செய்ய வேண்டும். அதற்குண்டான காரணத்தை கண்டறிந்தால் சிகிச்சை முறை மிகவும் எளிது. குழப்பம் அடைந்தவர்களுக்கு தூக்க மாத்திரையைக் கொடுக்கக்கூடாது. அது குழப்பத்தை மேலும் அதிகரிக்கும். தேவையானால் அமைதிப்படுத்தும் மாத்திரை மற்றும் வலி மாத்திரைகளை கொடுக்கலாம்.
சில எளிய சிகிச்சை முறைகள்
நிமோனியா ஒரு காரணமாக இருந்தால் அதற்கு தக்க கிருமி நாசினியைக் கொடுத்தால் போதும்.
நீர் வறட்சிக்கு ஊசி மூலமாக சலைன், குளுகோஸ் கலந்த மருந்தை உடலில் செலுத்தலாம்.
மலம் இறுகி இருந்தால் எனிமாவே போதுமானது.
சிறுநீர் அடைப்பு இருந்தால் கேத்திட்டர் மூலம் வெளியேற்றலாம்.
எலும்பு முறிவுக்குத் தக்க சிகிச்சையுடன் வலிமாத்திரை கொடுக்க வேண்டும்.
வயதான காலத்தில் திடீரென்று மனக்குழப்பம் ஏற்பட்டால் உறவினர்கள் பயப்படவேண்டாம்.
உடனே மருத்துவரிடம் அழைத்துச் சென்றால் அதற்குண்டான தக்க சிகிச்சை பெற்று பழைய நிலைக்கே திரும்ப வாய்ப்புண்டு.
