காங்கிரஸ் எம்.பி. வேணுகோபால் மக்களவையில் ஒன்றிய அமைச்சர் ஜிதேந்திர சிங் மீது உரிமை மீறல் அறிவிக்கை

4 Min Read

சிறப்பு புத்தக சலுகைகள்

புதுடில்லி, ஆக. 2– காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மக்களவை நாடாளுமன்ற உறுப்பினருமான கே.சி. வேணுகோபால், ஒன்றிய அமைச்சர் ஜிதேந்திர சிங் மீது உரிமை மீறல் அறிவிக்கை அளித்துள்ளார். மாணவர்கள் போராட்டத்தின் போது துப்பாக்கிச்சூடு நடக்கவில்லை என்று அமைச்சர் நாடாளுமன்றத்தில் தவறான தகவலை அளித்ததாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

ஜூலை 29 அன்று ‘பொதுத்தேர்வுகள் (தடையற்ற வழிமுறைகள் தடுப்பு) திருத்த மசோதா 2026’ மீதான விவாதத்திற்கு பதிலளிக்கும் போது, அமைச்சர் ஜிதேந்திர சிங், “துப்பாக்கிச்சூடு எதுவும் நடக்கவில்லை, கண்ணீர் புகை குண்டுகள் மட்டுமே பயன்படுத்தப்பட்டன. துப்பாக்கிச்சூடு நடக்காதபோது, உத்தரவு பிறப்பிக்கும் கேள்விக்கே இடமில்லை” என்று தெரிவித்தார்.

இந்த அறிக்கை உண்மைக்கு முரணானது என்று வேணுகோபால் சுட்டிக்காட்டியுள்ளார். “அமைச்சரின் கூற்றிற்கு மாறாக துப்பாக்கிச்சூடு நடந்தது உண்மை. காயமடைந்த ஒருவர் இன்னும் சிகிச்சை பெற்று வருகிறார். பொது எல்லையில் இதற்கான ஆதாரங்கள் உள்ளன. நாடாளுமன்றத்தில் தவறான தகவலை அளித்து அமைச்சர் வேண்டுமென்றே அவையைத் தவறாக வழிநடத்தியுள்ளார்” என்று அவர் கூறினார்.

மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவுக்கு அனுப்பப்பட்ட அறிவிக்கையில், விதி 222இன் கீழ் அமைச்சர் மீது சிறப்புரிமை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இந்த விவகாரத்தை உரிமை மீறல் குழுவிற்கு விசாரணைக்கு அனுப்ப வேண்டும் என்றும் வேணுகோபால் வலியுறுத்தியுள்ளார்.

“இத்தகைய வெளிப்படையான பொய்களை அரசு நாடாளுமன்றத்தில் தப்ப விட முடியாது. அமைச்சருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்” என்று அவர் தனது சமூக ஊடக பதிவில் தெரிவித்துள்ளார்

மாற்றுத்திறனாளி நண்பர் குறித்து மாணவர்கள் கட்டுரை எழுதலாம்

கல்வித் துறை தகவல்

சென்னை, ஆக. 2- பள்ளிக் கல்வித் துறை சார்பில் 6 முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் தங்களது மாற்றுத்திறனாளி நண்பர் குறித்து எழுதும் வகையில் கட்டுரைப் போட்டி நடத்தப்படவுள்ளது.

இது குறித்து பள்ளிக் கல்வி இயக்குநரகம் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

பள்ளிக் கல்வித் துறையுடன் இணைந்து ஆட்டிசத்துக்கான ஒப்புயர்வு மய்யம் ‘எனது தோழன்’, ‘எனது தோழி’ எனும் தலைப்பில் 6 முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான கட்டுரைப் போட்டி நடத்தவுள்ளது.

இப்போட்டியில் பங்கேற்கும் மாணவர்கள் தாங்கள் சந்தித்த மாற்றுத்திறனாளி நண்பரைப் பற்றி கட்டுரை எழுத வேண்டும். கட்டுரை ஏ4 தாளில் இரண்டு பக்கங்களுக்கு மிகாமல் தமிழ், ஆங்கிலத்தில் இருக்கலாம். போட்டியில் பங்கேற்கும் மாணவரின் ஒளிப்படத்தை மட்டும் கட்டுரையுடன் இணைத்து அனுப்ப வேண்டும். மாற்றுத்திறனாளி மாணவரின் ஒளிப்படம் தேவையில்லை. சிறந்த 20 கட்டுரைகளுக்கு பரிசு வழங்கப்படும். தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகள் பள்ளிக் கல்வித் துறையின் தேன்சிட்டு இதழில் வெளியிடப்படும்.

கட்டுரைகளை ஆக. 30-ஆம் தேதிக்குள் [email protected] எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். இப்போட்டியில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளி மாணவ, மாணவியர் என அனைவரும் பங்கேற்கலாம்.

பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள், முதல்வர்கள் மாணவர்களின் கட்டுரைகளைப் பெற்று மேற்குறிப்பிட்ட மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைத்துவிட்டு அதன் நகலை அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிளஸ் 2 துணைத் தேர்வு

விடைத்தாள் நகல் பெற
ஆக.4,5-இல் விண்ணப்பிக்கலாம்

சென்னை, ஆக. 2- பிளஸ் 1, பிளஸ் 2 துணைத் தேர்வுகளுக்கான முடிவுகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில், விடைத்தாள் நகல் பெற விரும்பும் தேர்வர்கள் ஆக.4, 5 தேதிகளில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப் பட்டுள்ளது.

இது குறித்து அரசுத் தேர்வுகள் இயக்ககம் சார்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

தமிழ்நாட்டில் மாநில பாடத்திட்டத்தில் பிளஸ் 1 (அரியர்), பிளஸ் 2 துணைத் தேர்வுகள் கடந்த ஜூன், ஜூலை மாதங்களில் நடைபெற்றன. இத்தேர்வுகளை 60,527 தேர்வர்கள் எழுதியுள்ளனர். இத்தேர்வுகளுக்கான முடிவுகள் மதிப்பெண் பட்டியலாக www.dge.tn.gov.in என்ற இணையதள முகவரியில் 31.7.2026 அன்று வெளியிடப்பட்டன. தேர்வர்கள் தேர்வெண், பிறந்ததேதி ஆகிய விவரங்களை பதிவு செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

துணைத் தேர்வுக்கான விடைத்தாள் நகலுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தேர்வர்கள் சம்பந்தப்பட்ட மாவட்ட அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத் துக்கு ஆக.4, 5 ஆகிய நாட்களில் காலை 11 முதல் மாலை 5 மணி வரை நேரில் சென்று ஒவ்வொரு பாடத்துக்கும் ரூ.275 கட்டணத்தை பணமாக செலுத்தி பதிவு செய்து கொள்ள வேண்டும்.

விடைத்தாள் நகல் பெற்ற தேர்வர்களுக்கு மறுகூட்டல், மறுமதிப்பீடு செய்ய விண்ணப்பிப்பதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும். தேர்வு முடிவுகள் குறித்த அய்யங்கள் ஏதேனும் இருப்பின் 14417 என்ற உதவி மய்ய எண்ணை தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *