பெரும்பான்மை மக்களுக்குச் சமூகநீதியை வென்றெடுக்கத் தேவை விழிப்புணர்வு

3 Min Read

சிறப்பு புத்தக சலுகைகள்

உத்தரப் பிரதேச முதலமைச்சர் சாமியார் ஆதித்யநாத் பங்கேற்ற காசிப்பூர் பொதுக்கூட்டப் பேரணியில், வினாத்தாள் கசிவு முறைகேடு வழக்குகளில் தொடர்புடையதாகக் கூறப்படும் பேதிராம் மேடையில் இடம்பெற்றது பெரும் அரசியல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

‘‘உத்தரப் பிரதேசத்தில் இதுவரை 20-க்கும் மேற்பட்ட அரசுத் தேர்வு வினாத்தாள்கள் கசிந்துள்ளன. இருந்த போதிலும், முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது மாநில அரசு கடுமையான நடவடிக்கை எதையும் எடுக்கவில்லை’’ என எதிர்க்கட்சிகளும், பொதுமக்களும் குற்றம் சாட்டி வருகின்றனர்.  வினாத்தாள் கசிவுக் குற்றவாளிகள் யாருமே கைதாகவில்லை

மாறாக பீகார் மற்றும் ஒடிசாவில் வினாத்தாள் மோசடித் தொடர்பாகத் தேடப்படும் குற்றவாளிகளுள் முக்கியமானவர் – தேர்வு மோசடிகளில் ஈடுபடும் குழுவின் தலைவர் என்று கருதப்படும் பேதிராம் சுக்லா, உ.பி. முதலமைச்சர் ஆதித்யநாத்தின் காசிப்பூர் நலத்திட்ட அறிமுகவிழா பொதுக் கூட்ட மேடையில் அவரோடு கலந்துகொண்டார்.

பேதிராம் சுக்லா மீது சுமார் 18 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு மாநிலங்களில் போட்டித் தேர்வு வினாத்தாள்களை கசியவிட்டதாகப் பல தீவிர குற்றச்சாட்டுகள் உள்ளன.

2006 மற்றும் 2008 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற ரயில்வே ‘குரூப்-டி’ மற்றும் பிற வேலைவாய்ப்புத் தேர்வு வினாத்தாள்களைக் கசியவிட்ட வழக்கிலும்,  டில்லி பிஎம்டி மருத்துவ நுழைவுத் தேர்வு வினாத்தாள் கசிவு வழக்கிலும் 2012-இல் சிபிஅய்-யால்  கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.

உத்தரப் பிரதேச காவலர் தேர்வு (2010), மத்தியப் பிரதேச அரசுப் பணியாளர் தேர்வாணையம் மற்றும் ராஜஸ்தான் தேர்வு முறைகேடுகள் செய்துள்ளார்.

2006-இல் ரயில்வே வினாத்தாள் கசிவு வழக்கில் உத்தரப் பிரதேச சிறப்புப் பணிப்படை இவரைக் கைது செய்து  குண்டர் சட்டம்’ பாய்ந்தது. 2014-இல் இவரது சொத்துக்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

2024 ஆம் ஆண்டில் வெளியான ஒரு ரகசிய காட்சிப் பதிவில் பல்வேறு மாநிலங்களில் 40 முதல் 50 பேருக்குப் பணத்தைப் பெற்றுக் கொண்டு அரசு வேலை வாங்கித் தருவதாகவும், தேர்வு வினாத்தாள்களைக் கசியவிடுவது குறித்துப் பேசுவதுவுமாகக் காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.

2024 ஜூலை மாதத்தில், 2006 ஆம் ஆண்டு ரயில்வே வினாத்தாள் கசிவு வழக்குத் தொடர்பாக லக்னோ நீதிமன்றம் பேதிராமிற்கு எதிராக பிணையில் வர முடியாத பிடியாணை பிறப்பித்தது குறிப்பிடத்தக்கது.

ஒன்றிய அரசு அதிகாரத்தில் –  அதிலும் குறிப்பாக மோடி தலைமையில் பிஜேபி அதிகாரத்துக்கு வந்தது முதல் ‘நீட்’ வினாத்தாள்கள் கசிவு என்பது சர்வ சாதாரணம்.

இதே மோடி குஜராத் முதல் அமைச்சராக இருந்த போது– காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வரப்பட்ட ‘நீட்’டுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, குஜராத் மாநிலம் நீட்டை ஏற்காது என்று சொன்னவர்தான்.

உச்சநீதிமன்ற மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு ‘‘‘நீட்’ செல்லாது; தேர்வுகளை நடத்த மருத்துவக் கவுன்சிலுக்கு உரிமை கிடையாது’’ என அறுதியிட்டுத் தீர்ப்புச் சொன்ன நிலையில் அதன்மீது மறுசீராய்வு மனுவை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தது மோடி தலைமையிலான அரசு என்பது பலருக்கும் மறந்து விட்டது போலும்!

சமூகநீதியை ஒழிப்பது என்பது – பார்ப்பனர்களுக்கான பால் பாயாசமாகும்.

சரி, சமூகநீதியின் வேரை வெட்டும் ‘நீட்’ தேர்வையாவது ஒழுங்கு முறையாக நடத்தத் துப்பும் இல்லை.

வினாத்தாள்கள் கசிவு என்பதில் முக்கிய குற்றவாளிகளாகவும் பிஜேபி வகையறாக்கள் உள்ளனர் என்பது எத்தகைய வெட்கக் கேடு!

இந்த நாட்டின் பெரும்பான்மையான மக்களைப் பாதிக்கச் செய்யும் செயல்களைத் திட்டமிட்டுச் செய்து வரும் பிஜேபி ஆட்சியைத் தொடர விடலாமா?

ஜனநாயகம் என்பது பெரும்பான்மையான மக்களைச் சுரண்டி சிறுபான்மை உயர் ஜாதிப் பார்ப்பனர் வயிற்றில் அறுத்துக் கட்டத்தானா?

வெகு மக்களே வெகுண்டெழுவீர்! சமூகநீதியை நிலை நாட்டுவீர்!!

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *