உலகச் செய்திகள்

சிறப்பு புத்தக சலுகைகள்

மொராக்கோவில் இருந்து
ஸ்பெயினுக்குள் கடல் வழியாக
நுழைய முயன்ற 57 பேர் உயிரிழப்பு

மாட்ரிட், ஆக. 1-  மொராக்கோவில் இருந்து ஸ்பெயின் நாட்டின் சியூட்டா எல்லைக்குள் பல்லாயிரக்கணக்கானோர் நுழைய முயன்றபோது ஏற்பட்ட தள்ளுமுள்ளு நிகழ்வு, நெரிசல், கடலில் மூழ்கியது முதலான நிகழ்வுகளால் 57 பேர் உயிரிழந்துள்ளனர். அய்ரோப்பிய ஒன்றியத்தில் அமைந்துள்ள ஸ்பெயினும், ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள மொராக்கோ நாடும் அருகருகே அமைந்துள்ளன. இரு நாடுகளுக்கு இடையிலான மிகக் குறைந்த தூரமே, அதாவது 13 கிலோ மீட்டர் இடைவெளி மட்டும்தான். ஸ்பெயினில் உள்ள சியூட்டா தான் மொராக்கோவுக்கு அருகிலுள்ள எல்லைப் பகுதி ஆகும்.

முஸ்லிம் நாடான மொராக்காவில் வறுமை, வேலையின்மை போன்றவை காரணாக ஏராளமானோர் புலம்பெயர்ந்து ஸ்பெயினுக்குள் வருகின்றனர். கடந்த ஒரு வாரமாக மொராக்கோ நாட்டு மக்கள் சட்டவிரோதமாக ஸ்பெயினுக்குள் புலம் பெயர்ந்து வருகின்றனர்.

மொராக்கோ மக்களை உடனடியாக திருப்பி அனுப்பக் கூடாது என்று ஸ்பெயின் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள தால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் ஸ்பெயின் அரசு உள்ளது. இதனிடையே, மொராக்கோ நாட்டின் ஃபனிடெக், பெலியூன் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து சுமார் 70,000 பேர் நேற்று (31.7.2026) தரை மற்றும் கடல் வழியாக ஸ்பெயின் எல்லையான சியூட்டாவை நோக்கி ஒரே நாளில் குவிந்துவிட்டனர்.

ஸ்பெயின் நாட்டு உச்ச நீதிமன்றத்தின் அண்மைக்கால தீர்ப்பு தங்களுக்கு சாதகமாக இருப்பதைப் பயன்படுத்திக் கொண்டு ஒரே நாளில் ஏராளமான மக்கள் சியூட்டா வழியாக ஸ்பெயினுக்குள் நுழைய முயன்றனர். காவல்துறையினரின் கட்டுப்பாட்டையும் மீறி அவர்கள் கடல்வழியாக நுழைந்தனர். நிலைமையைக் கட்டுப்படுத்த ஸ்பெயின் அரசு எல்லைப் பகுதியில் ராணுவ வீரர்களையும், காவல்துறையினரையும் அதிக அளவில் குவித்திருந்தது.

ஸ்பெயின் எல்லைக்குள் வரும் மொராக்கோ மக்கள் மீது தண்ணீரைப் பீய்ச்சியடித்து காவல்துறையினர் விரட்ட முயன்றனர். இருந்தபோதும் 64,000-க்கும் அதிகமானோர் சியூட்டா எல்லையைக் கடந்து ஸ்பெயினுக்குள் சென்றுவிட்டதாக ஸ்பெயின் நாட்டின் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த நிகழ்வின்போது ஏற்பட்ட தள்ளுமுள்ளு, நெரிசல், கடல் நீரில் மூழ்கியது போன்ற காரணங்களால் மொராக்கோவைச் சேர்ந்த 57 பேர் உயிரிழந்து விட்டனர். உயிரிழந்தவர்களின் சடலங்களை காவல்துறையினர் மீட்டு மருத்துவமனைகளுக்கு அனுப்பியுள்ளனர். மேலும், மொராக்கோவில் இருந்து சியூட்டா வழியாக ஸ்பெயினுக்குள் நுழைவதைத் தடுக்க ஸ்பெயின் அரசு தீவிர கண்காணிப்பை ஏற்படுத்தியுள்ளது. எல்லைப் பகுதியில் பலத்த காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சியூட்டா பகுதியை நோக்கி வரும் பொதுமக்களைத் தடுக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

திபெத்தில் எவரெஸ்ட் சிகரம் அருகே இந்திய எல்லையை கண்காணிக்க ட்ரோன் ஆராய்ச்சி மய்யம் – சீனா தொடங்கியது

பெய்ஜிங், ஆக. 1- எல்லைக் கண்காணிப்பு, பாதுகாப்பு, தளவாடங்கள் மற்றும் போக்குவரத்தை பலப்படுத்துவதற்காக, திபெத்தில் உள்ள எவரெஸ்ட் சிகரத்திற்கு அருகில் ட்ரோன் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மய்யத்தை சீனா நிறுவியுள்ளது.

சீனா இந்திய எல்லைக்கு அருகில் உள்ள பகுதிகளில் ராணுவ பலத்தை அதிகரித்து வருகிறது. லடாக்கின் லே பகுதிக்கு அருகில் உள்ள ஹேட்டன் விமானப்படை தளத்தில் ஏழு ஜே-20 ரக போர் விமானங்களை நிறுத்தியுள்ளது. அருணாச்சலப் பிரதேசத்தின் தவாங் பகுதிக்கு அருகில் 4 ஜே-20 ரக போர் விமானங்களை நிறுத்தியுள்ளது செயற்கைக்கோள் படங்கள் மூலம் தெரியவந்தது. இவை ரேடாரில் சிக்காத 5ஆம் தலைமுறை போர் விமானங்கள் ஆகும். இதற்கு போட்டியாக இந்திய விமானப்படை ரபேல் மற்றும் சுகோய் போர் விமானங்களை நிறுத்தியுள்ளது.

இந்நிலையில் 4,000 மீட்டருக்கு அதிகமான உயரத்தில் உள்ள சீனாவின் திபெத் பகுதியில் அமைந்துள்ள சிசாங் பல்கலைக்கழகத்தில் ட்ரோன் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மய்யத்தை சீனா கடந்த 3ஆம் தேதி திறந்துள்ளது. அமெரிக்க தொழில்நுட்பத்துடன் போட்டிபோடும் விதத்தில் சீனா இந்த ட்ரோன் ஆராய்ச்சி மய்யத்தை தொடங்கியுள்ளது.

இது குறித்து இந்தப் பல்கலைக்கழகத்தின் தலைவர் சுன் சியான்ஷாங் கூறியதாவது: செயற்கை நுண்ணறிவு மற்றும் புதிய ஆற்றல் அறிவியல் மற்றும் பொறியியல் ஆகியவற்றில் புதிய பாடத்திட்டங்களுக்கான அண்மைக்கால ஒப்புதலைத் தொடர்ந்து, நாங்கள் இப்போது ‘பீடபூமி நுண்ணறிவு குறைந்த-உயர ட்ரோன் பயன்பாடுகள்’ என்ற பாடத்திட்டத்தையும் முறைப்படி பதிவு செய்துள்ளோம். வருங்காலத்தில் இந்த மய்யம் அதிக உயரமான ட்ரோன்களுக்கான முக்கிய தொழில்நுட்பச் சவால்களை இலக்காகக் கொண்டு செயல்படும். சுற்றுச்சூழல் பாதுகாப்பு, எல்லைக் கண்காணிப்பு, பாதுகாப்பு, போக்குவரத்து, புவியியல் கண்காணிப்பு மற்றும் அவசரப் பொருட்கள் விநியோகம் ஆகிய வற்றிற்கான ஒருங்கிணைந்த தளங்களை இந்த மய்யம் உருவாக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்க
சீன அதிபர் ஜி ஜின்பிங் இந்தியா வருகிறார்

புதுடில்லி, ஆக. 1- பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்க சீன அதிபர் ஜி ஜின்பிங் செப்டம்பர் மாதம் இந்தியா வர வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சீன அதிபர் ஜி ஜின்பிங் கடைசியாக கடந்த 2019ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இந்தியா வந்தார். அதன்பின் கடந்த 2020ஆம் ஆண்டில் கல்வான் பள்ளத்தாக்கில் இந்தியா – சீன வீரர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் இந்திய வீரர்கள் 20 பேர் உயிரிழந்ததாகத் தகவல் வெளியானது.

அதேபோல் சீனத் தரப்பில் சுமார் 50 பேர் உயிரிழந்திருக்கலாம் என்று பன்னாட்டு ஊடகங்கள் தெரிவித்தன. ஆனால், சீனா அதை மறுத்தது. கல்வான் மோதலுக்குப் பிறகு இருதரப்பு உறவில் விரிசல் ஏற்பட்டது. அதன்பின் சீன அதிபர் ஜின்பிங் கடந்த 6 ஆண்டுகளில் இந்தியாவுக்கு வரவில்லை. இதற்கிடையில் இருதரப்பில் தூதரக உறவை மேம்படுத்த விமானப் போக்குவரத்து மீண்டும் தொடங்கி பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. தற்போது இந்தியா – சீனா இடையேயான எல்லைப் பிரச்சினை குறித்து பேச சிறப்பு பிரதிநிதிகள் குழு அமைக்கப்பட்டுள்ளது. இதனால் இந்தியா – சீனா உறவில் சற்று முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பிரிக்ஸ் உச்சி மாநாடு செப்டம்பர் மாதம் டில்லியில் நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்க சீன அதிபர் ஜி ஜின்பிங் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான தேதி இன்னும் இறுதி செய்யப்படவில்லை. உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் சீனா செல்ல வாய்ப்புள்ளது. அப்போது சீன அதிபரின் வருகை குறித்து ஆலோசிக்கப்படும் எனத் தெரிகிறது. சீன அதிபர் ஜி ஜின்பிங் இந்தியா வந்தால், இருதரப்பு தூதரக உறவுகள் மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *