அலகாபாத். ஆக. 1- பெண்களின் தாய்மை உரிமையையும் வாழ்வாதார உரிமையை யும் பறிக்கும் வகையில், கர்ப்பத்தை மட்டுமே காரணமாகக் காட்டி அரசு வேலையை மறுக்கக் கூடாது என்று அலகாபாத் உயர் நீதிமன்றம் மிக முக்கியமான மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியுள்ளது.
வழக்கின் பின்னணி
உத்தரப் பிரதேச மாநிலத்தில் வனக்காவலர் மற்றும் வனவிலங்கு காப்பாளர் பணி நியமனத் திற்காக கடந்த 2023ஆம் ஆண்டு அறிவிப்பு வெளி யிடப்பட்டது. இதில் கோமல் ஜெய்ஸ்வால் என்ற பெண் விண்ணப் பித்து, எழுத்துத் தேர்வில் வெற்றியும் பெற்றார்.
இதனைத் தொடர்ந்து, அவருக்கு 14 கிலோமீட்டர் தூரம் நடக்கும் உடற் தகுதித் தேர்வுக்கான தேதி அட்டவணைப்படுத்தப் பட்டது. ஆனால், அந்தச் சமயத்தில் அவர் 9 மாத கர்ப்பிணியாக இருந்தார்.
தேர்வாணையத்தின் நிராகரிப்பும்,
நீதிமன்றப் போராட்டமும்
பிரசவத்திற்குப் பிறகு தனக்கு உடற்தகுதித் தேர்வை தள்ளிவைத்து நடத்துமாறு உத்தரப் பிரதேச மாநில தேர்வு வாரியத்திடம் கோமல் ஜெய்ஸ்வால் கோரிக்கை விடுத்தார். ஆனால், “தேர்வை தள்ளி வைக்க விதிகளில் இட மில்லை” எனக் கூறி அவரது கோரிக்கை நிராகரிக்கப் பட்டது.
தேர்வாணையத்தின் முடிவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், தனி நீதிபதி அமர்வும் அவரது மனுவைத் தள்ளுபடி செய்தது.இதைத் தொடர்ந்து, அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி அருண் பன்சாலி மற்றும் நீதிபதி ஜஸ்பிரீத் சிங் அடங்கிய அமர்வில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
நீதிமன்றத்தின் அதிரடித் தீர்ப்பு
மற்றும் கருத்துகள்
வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற அமர்வு, தேர்வாணையத்தின் முடிவை ரத்து செய்து உத்தரவிட்டதுடன் கீழ்க்கண்ட முக்கியக் கருத் துகளைத் தெரிவித்துள்ளது:
கர்ப்பத்தைக் காரணம் காட்டி ஒரு பெண்ணுக்கு உடற்தகுதித் தேர்வைத் தள்ளிவைக்க மறுப்பது, அப்பெண்ணைக் “குழந்தை பெற்றெடுப்பதா அல்லது வேலைக்குச் செல்வதா” என்ற கடினமான நிலைக்குத் தள்ளுவதாகும்.
ஒரு பெண்ணின் திருமண நிலையையோ அல்லது கர்ப்பத்தையோ எக்காரணம் கொண்டும் தகுதியின்மையாகக் கருத முடியாது.
மனுதாரருக்கு 4 வாரங்களுக்குள் உடற் தகுதித் தேர்வை நடத்த வேண்டும்.
இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த பெண் பிரிவில் குறைந்த மதிப்பெண் பெற்றவருக்குப் பணி நியமனம் வழங்கப்பட்ட அதே தேதியிலிருந்து, இவருக்கும் அனைத்துச் சலுகைகளுடன் பணி வழங்கப்பட வேண்டும்.
வழக்கு முடியும் வரை சம்மந்தப்பட்ட பணியிடத்தைக் காலியாக வைத்திருக்க வேண்டும்.
