கேள்வி 1: தி.மு.க. வலிமை பெற்று அடுத்த முறை ஆட்சியைப் பிடிக்க வேண்டுமானால், தி.மு.க. என்ன செய்ய வேண்டும் என கருதுகிறீர்கள்?
– மு.அய்யூப்கான், மேலக்காவேரி, கும்பகோணம்

பதில் 1: தேர்தல் தோல்வியால் தி.மு.க. என்றும் துவண்டு, சுருண்டு விடாத அரசியல் கட்சி என்பதை கடந்த பல காலங்களில் ‘கலைஞரின் ஆற்றல்மிகு தலைமை, உலகுக்கு நிரூபித்து, நிலைத்து, தனது பவளவிழா ஆண்டைக் கடந்து உள்ளது.
இயக்கத்தின் குருதி நாளங்களான – தொண்டர்கள், தோழர்களுடைய கருத்தறிந்து புதிதாகக் கட்டமைத்து, கொள்கைப் பிரச்சாரம் – போராட்டம் போன்ற தொடர் அடர்த்தியான நிகழ்ச்சிகளை முறைப்படுத்தி நடத்திட வேண்டும். “எதிர்க்கட்சியின் ஆக்கப்பூர்வமான செயல்பாடுகள் வரவேற்கத்தக்கதாக உள்ளன” என்று மக்கள் அனைவரும் உணரும்படி நாளும் தொண்டறப் பாதையில் தலைமை லட்சியப் பயணத்தைத் தொடர்ந்தால் நிறைவான பலன் கிடைக்கும்.
நாளை என்பது அரசியலில் எப்போதும் பல நேரங்களில் கேள்விக்குறிகளாக இருப்பதை விட, ஆச்சரியக்குறியாகவே அமைவது வரலாற்று உண்மையாகும்!
- • •
கேள்வி 2: “‘காசு கொடுத்துத்தான் கடவுளைக் காண வேண்டும்’ என்றால் அது கோயிலா? பொருட்காட்சியா? இரட்டை டம்ளர் முறை தவறு எனில் இரட்டை தரிசன முறையும் தவறுதானே, பொருளாதாரத் தீண்டாமையை ஏற்படுத்தும் ஆலய தரிசனக் கட்டண முறையை தமிழ்நாடு அரசு ரத்து செய்ய வேண்டும்” எனக் கூறி மாநிலம் முழுவதும் இந்து முன்னணி ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளதே?
– மன்னை சித்து, மன்னார்குடி-1
பதில் 2: இரட்டைக்குவளை முறையை இதன்மூலம் நியாயப்படுத்தும் புதிய முயற்சி இது! திருப்பதி வெங்கடாசலபதி முதல் காசேதான் கடவுளடா – என்ற நிலை உள்ளதே. அதை அங்கே சென்று அந்த முதலாளிக் கடவுளிடம் முறையிடலாம். பகவானே, காசு கொடுத்தவனைத்தானே முன்னால் உடனடியாக வரச் சொல்கிறான் என்ற நிலை உள்ளதே! இரட்டைக் குவளை உதாரணம் பொருத்தமானதா? பொருந்தாத ஒன்று! காசு கொடுத்தால் எவரும் உடனடியாகக் கடவுளைப் பார்க்கலாம். காசு கொடுத்துக் குடித்தாலும் தீண்டாமை பார்க்கும் இரட்டை டம்ளர் முறை அப்படியானதா?
- • •
கேள்வி 3: ‘காவிரிப் பிரச்சினையில் உச்சநீதிமன்றம் கொடுத்துள்ள உத்தரவு இருக்கையில், கருநாடக முதலமைச்சரிடம் பேச்சு வார்த்தையோ, கெஞ்ச வேண்டிய அவசியமோ தமிழ்நாட்டிற்கு இல்லை’ என்று தி.மு.க. பொதுச் செயலாளர் துரைமுருகன் கூறியதை முதலமைச்சர் ஜோசப் விஜய் செவிமெடுத்தால் என்ன?
– ம.சுடரொளி, கோவை
பதில் 3: நல்ல கேள்வி. இதுவும் முதலமைச்சர் காதில் விழுகிறதோ என்னவோ? அதுதான் இப்போதைய பிரச்சினை.
- • •
கேள்வி 4: பெரியார் 1956இல் மாயூரம் ஜாதி ஒழிப்பு மாநாட்டில் நிறைவேற்றிய முக்கிய தீர்மானம்: “கோயில்களில் தமிழ் மொழியிலேயே, அதுவும் தமிழர்களை அர்ச்சனையாளராக ஏற்படுத்த வேண்டும். இந்த ஏற்பாட்டை ஒரு மாத காலத்திற்குள் செய்யாவிட்டால் ‘கர்ப்பகிரகம்’ என்று சொல்லப்படுகிற இடத்திற்குத் தமிழர்கள் பிரவேசிக்க – கிளர்ச்சி தொடங்க வேண்டி வரும் என்று இந்து மத பரிபாலன இலாக்காவுக்கு இம் மாபெரும் மாநாடு எச்சரிக்கை விடுக்கிறது.” என்பது அத்தீர்மானம்.
இன்று தமிழ்த்தாய் வாழ்த்து, அரசு நிகழ்வில் மூன்றாம் இடத்திற்குத் தள்ளப்பட்டிருக்கிறது. நாம் என்ன செய்வது?
– ஆர்.அழகுப்பாண்டி
பதில் 4: தமிழ்நாடு புதிய ஆட்சியின் இரட்டை நிலைப்பாட்டைப் புரிந்து கொள்ள மக்களிடம் எடுத்துச் சொல்ல வேண்டும்; ‘பாலுக்கும் காவல்; பூனைக்கும் தோழன்’ என்ற விசித்திரமே பல பிரச்சினைகளில். அதன் தீய விளைவே இந்த நடவடிக்கை.
- • •
கேள்வி 5: தமிழ்நாட்டில் ஆணவப் படுகொலைக்கு எதிராகத் தனிச் சட்டம் கொண்டு வரப்படுவது தாமதமாவது ஏன்? தனிச் சட்டம் வருமா?
– மு.கலேஷா, அயன்புரம்
பதில் 5: நீதியரசர் கே.என்.பாஷா அவர்களது தலைமையிலான ஆணையம் தனது அறிக்கையைத் தரும். அப்போது நிச்சயம் தமிழ்நாடு த.வெ.க. அரசு தனிச்சட்டம் கொண்டு வரும் என்பது நமது விழைவும் – நம்பிக்கையும்.
- • •
கேள்வி 6: சென்னையில் மெட்ரோ ரயிலில் பயணித்து ஆய்வு செய்த (29.7.2026) முதலமைச்சர் ஜோசப் விஜய் வருகையைக் காலை முதற்கொண்டே ஊடகங்கள் விளம்பரப்படுத்தியது எதனால்? மக்கள் கூடுவதால் ஆய்வுப் பணிகள் பாதிக்கப்படுமென்று தெரியாதா?
– பசுமணி, அரக்கோணம்
பதில் 6: எதையும் காட்சிப்படுத்திடும் நிலை வந்ததன் பக்க விளைவு இது! பரிகாரம் காண வேண்டியது அரசின் கடமை.
- • •
கேள்வி 7: வந்தே மாதரத்துக்கு தேசிய கீதத்திற்கு உரிய தகுதி நிலை அளித்து, அப் பாடலை அவமதித்தால் 3 ஆண்டுகள் சிறை என்று மசோதா ஒன்றிய அரசால் நிறைவேற்றப்பட்டுள்ளதே, பலதரப்பினரின் வேண்டுகோளை ஒன்றிய அரசு புறக்கணித்துள்ளது நியாயமா?
– மு.கார்த்திக், மோரை
பதில் 7: பா.ஜ.க. – ஆர்.எஸ்.எஸ். தனது கொள்கைகளை அரசு மூலம் விரைந்து செயல்படுத்தும் என்பதற்கு இந்த நடவடிக்கை ஒரு தெளிவான சாட்சியம் ஆகும்.
- • •
கேள்வி 8: தமிழ்நாட்டில் கோயில் நிலங்கள் பட்டா மாற்றப்பட்டு, மோசடியாகப் பத்திரப் பதிவு செய்து, கோடிக்கணக்கிலான ரூபாய் கையாடல் செய்யப்பட்டுள்ளதே… இதற்கு அவ்வளவு துணிவு எப்படி வருகிறது? கடவுளுக்கு பயப்பட்டாக வேண்டும் என்பது என்னாயிற்று?
– கதிர், மூணாறு
பதில் 8: ‘கடவுளே கடத்தப்படுகிறார்’ என்கிறபோது நம் கடவுளை நாம்தான் காப்பாற்றி வைக்க வேண்டிய பரிதாப நிலை. ‘கடவுளாவது – பயமாவது’ என்கிற காஞ்சி அர்ச்சகர் தேவநாதனை – மறந்து விட்டதா?
- • •
கேள்வி 9: 20 சதவீத எத்தனாலை பெட்ரோலுடன் கலந்து விநியோகிக்கும் திட்டத்தை ஒன்றிய அரசு மக்களுடைய கருத்தைக் கேட்காமல் தன்னிச்சையாக அறிவித்துள்ளது பற்றி…?
– ஓவியன், அரும்பாக்கம்
பதில் 9: பா.ஜ.க. – ஆர்.எஸ்.எஸ். அரசு எதில் மக்களுடைய கருத்தை அறிந்து சட்டம் செய்தது? இதுகுறித்து மட்டும் அது எப்படி கருத்தைக் கேட்டு விடும். உண்மையான ஜனநாயகத்தில்தான் அது சாத்தியம்!
- • •
கேள்வி 10: மக்களுக்குச் சேவை செய்ய தற்போது துடிக்கும் அண்ணாமலை, அரசுப் பதவியில் இருந்து விலகியவுடன், பா.ஜ.க.வில் இணையாமல், முதலிலேயே மக்களுக்கு சேவை செய்ய முன் வராதது ஏன்? பதவி படுத்திய பாடா அல்லது தி.மு.க.விற்கு எதிராக ஏவிய அம்பா?
– அன்புமணி சுந்தரராசன், மதிச்சியம், மதுரை
பதில் 10: இந்த பா.ஜ.க.வின் – ஆர்.எஸ்.எஸ். மாயமானைப் பற்றிப் போகப்போகப் புரியும்! அவர் பல அவதாரங்களை எடுப்பார். இப்போதைக்கு இந்த நிலை. நாளை நடப்பதை அவரே அறியார்? என்ற நிலைதான்!
