பா.ஜ.க. கொள்கைகளுக்கு எதிராக இந்திய கம்யூனிஸ்ட் 10 நாட்கள் நடை பயணப் பரப்புரை

3 Min Read

சிறப்பு புத்தக சலுகைகள்

சென்னை, ஜூலை 31- பாஜகவின் கொள்கைகள் மற்றும் வகுப்புவாத அணுகு முறைகளுக்கு எதிராக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நாடு தழுவிய நடை பயண பரப்புரை ஆக.6 முதல் 15-ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தகுதித் தேர்வு என்ற பெயரில் ஏழை, எளிய மாணவர்களின் மருத்துவக் கனவை சிதைக்கும் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும், இளைஞர்களின் வேலைவாய்ப்பை உறுதிசெய்ய வேண்டும், விலைவாசி உயர்வுக்கு முடிவு கட்ட வேண்டும், பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு மீதான வரிகளைக் குறைக்க வேண்டும், இவற்றை பதுக்கி, கள்ளச்சந்தையில் விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும், அத்தியாவசிய உணவுப் பொருட்கள் அனைத்தையும் வழங்கும் வகையில் பொது விநியோகத் திட்டத்தை விரிவு படுத்த வேண்டும், தொழிலாளர் உரிமை சட்டங்களை மீட்டெடுக்க வேண்டும், பெண்கள் பாதுகாப்பு மற்றும் இடஒதுக்கீட்டை உறுதிசெய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆக.6 முதல் 15-ஆம் தேதி வரை 10 நாட்கள் நடைபயண பரப்புரை மேற்கொள்ளப்பட உள்ளது.

புதிதாக 93 ஊராட்சிகள்,
9 ஊராட்சி ஒன்றியங்கள் உருவாக்கம்

சென்னை, ஜூலை 31- தமிழ்நாட்டில் புதிதாக ஒன்பது ஊராட்சி ஒன்றியங்கள், 93 ஊராட்சிகள் உருவாக்கப்பட்டு உள்ளன.

மக்களின் கோரிக்கைகளுக்கு ஏற்ப, நிர்வாக வசதிக்காக, புதிய ஊராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. கடந்த தி.மு.க., ஆட்சியில், புதிய ஊராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்களை உருவாக்க, ஊரக வளர்ச்சித் துறை சார்பில் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

93 ஊராட்சிகள்

இந்நிலையில், புதிதாக பொறுப்பேற்றுள்ள அரசு, புதிதாக ஒன்பது ஊராட்சி ஒன்றியங்கள், 93 ஊராட்சிகளை உருவாக்கி உள்ளது. ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறையின் செயலர் பிரசாந்த் வடநேரே, இதற்கான அரசாணையை வெளியிட்டு உள்ளார்.

அதன்படி, நீலகிரி மாவட்டத்தில், குந்தா, பண்டலுார்; திருவள்ளூரில் மாதர்பாக்கம்; காஞ்சிபுரத்தில் சாலவாக்கம்; விழுப்புரத்தில் கிளியனுார், கஞ்சனுார்; திருவண்ணாமலையில் மழையூர்; கிருஷ்ணகிரியில் அஞ்செட்டி; கள்ளக்குறிச்சியில் வானபுரம் ஆகிய, ஒன்பது ஊராட்சி ஒன்றியங்கள் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளன.

சிறப்பு அதிகாரிகள் நியமனம்

இப்புதிய ஊராட்சி ஒன்றியங்களுக்கு, மக்கள் பிரதிநிதிகள் இல்லாததால், நிர்வாக பணிகளை மேற்கொள்ள துணை இயக்குநர் தகுதியில் சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

அதேபோல், நீலகிரி மாவட்டத்தில் 61; ஈரோட்டில் 9; கோவையில் 7; கள்ளக்குறிச்சி, திருச்சியில் தலா 4; திண்டுக்கல், வேலுாரில் தலா 2; தென்காசி, தர்மபுரி, சிவகங்கை, கரூர் ஆகிய மாவட்டங்களில், தலா ஒரு ஊராட்சி என, புதிதாக 93 ஊராட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளன.

 

டில்லி மாணவர் போராட்டத்தில் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களின் பட்டியல்களை பாதுகாக்க வேண்டும்

உச்ச நீதிமன்ற உத்தரவு

புதுடில்லி, ஜூலை 31- டில்லி மாணவர் போராட்டத்தில் பயன்படுத்திய ஆயுதங்களின் விவரங்களை பாதுகாக்கவும், அது குறித்து அறிக்கையை தாக்கல் செய்யவும் ஒன்றிய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நீட் வினாத்தாள் கசிவை கண்டித்து டில்லி ஜந்தர் மந்தரில் மாணவ, மாணவியர், இளைஞர்கள் தொடர் போராட்டம் நடத்தினர். கடந்த 20-ஆம் தேதி நடத்திய பேரணியின்போது காவல்துறையினர் தடியடி நடத்தினர். மாணவர்கள் போராட்டத்தில் பெல்லட் குண்டுகள் பயன்படுத்தப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த சூழலில் போராட்டத்தை கட்டுப்படுத்த பெல்லட் குண்டுகள் பயன்படுத்துவதை தடுக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்குகள் தொடுக்கப்பட்டு உள்ளன. உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சூர்யகாந்த் மற்றும் நீதிபதிகள் ஜாய் மாலியா பக் ஷி, வி.மோகனா அமர்வில் பொதுநல வழக்குகள் விசாரணைக்கு வந்தன.

அப்போது மூத்த வழக்குரைஞர் விருந்தா குரோவர் கூறியதாவது: டில்லி போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுக்கு எதிராக காவல்துறையினர் பெல்லட் குண்டுகளை பயன்படுத்தி உள்ளனர். போராட்டத்தில் களமிறக்கப்பட்ட அதிரடிப் படையினரின் பணி விவரம், வழங்கப்பட்ட ஆயுதங்கள், வெடிபொருட்கள், அதிரடிப் படையினரை களமிறக்கப் பிறப்பிக்கப்பட்ட உத்தரவு, பெல்லட் குண்டுகளின் விவரம் உள்ளிட்டவற்றையும், சிசிடிவி பதிவுகளையும் பாதுகாக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு வழக்குரைஞர் விருந்தா குரோவர் வாதிட்டார்.

இதைத் தொடர்ந்து உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கூறியதாவது: அசாதாரண சூழல் நிலவும் பட்சத்தில் பெல்லட் குண்டுகளை பயன்படுத்த காவல் துறையினருக்கு அனுமதி உள்ளது. அதிரடிப்படையினர் பயன்படுத்திய ஆயுதங்கள் தொடர்பான பதிவுகளை பாதுகாத்து வைக்க வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

 

 

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *