சென்னை, ஜூலை 31– ‘நீட்’, உயர் ஜாதி இடஒதுக்கீடுக்கான எதிர்ப்புப் போராட்டத்தைக் கண்டு ஒன்றிய பா.ஜ.க. அரசைவிடத் த.வெ.க. அரசுதான் அதிகம் மிரளுகிறது என்று கண்டனம் தெரிவித்த தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் திராவிடர் கழகம் நடத்தும் – ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் பரப்புரைப் பயணத்துக்கு உரிய அனுமதியை த.வெ.க. அரசு வழங்கிட வேண்டும் என்று தனது சமூக வலைதளப்பதிவில் கேட்டுக் கொண்டுள்ளார்.
இது குறித்து நேற்று (30.–07.–2026), தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் சமூக வலைதளப் பதிவுவில் கூறியதாவது:
‘நீட்’, உயர் ஜாதி இடஒதுக்கீடுக்கான எதிர்ப்புப் போராட்டத்தைக் கண்டு ஒன்றிய பா.ஜ.க. அரசைவிட த.வெ.க. அரசுதான் அதிகம் மிரளுகிறது!
தந்தை பெரியாரைக் கொள்கைத் தலைவர் எனச் சொந்தம் கொண்டாடும் த.வெ.க. அரசுபெரியார் திடலிலேயே காவல்துறையினரைக் குவித்திருப்பது ஏன்?
திராவிடர் கழகத்தின் இருசக்கர வாகனப் பரப்புரைப் பயணத்துக்குக் கடைசி நிமிடத்தில் அனுமதி மறுத்ததற்கு என்ன காரணம்? யாருடைய அழுத்தத்துக்குப் பணிந்து இதைச்செய்கிறார்கள்?
கடந்த காலங்களில் மிக அமைதியான முறையில், அறவழியில், கண்ணியத்தோடு இதே போராட்டங்களைத் தாய்க் கழகமாம் திராவிடர் கழகம் கட்டுப்பாட்டுடன் நடத்திக் காட்டி யிருக்கிறது. அத்தகைய இயக்கத்தின் பரப்புரைப் பயணத்தைத் தடை செய்வது வன்மையான கண்டனத் துக்குரியது.
சிவப்பும் மஞ்சளும் சேர்ந்தால் கிடைப்பது காவி என்பது இதன் மூலம் உறுதியாகிவிட்டது.
அடக்குமுறை அரசியலைக் கைவிட்டு, திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களின் பரப்புரைப் பயணத்துக்கு உரிய அனுமதியை த.வெ.க. அரசு வழங்கிட வேண்டும்!”
இவ்வாறு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தமது சமூக வலைதளப்பதிவில் கண்டனம் தெரிவித்துள்ளார்.
