‘‘வாருங்கள் படிப்போம்’’ குழுவின் 359 ஆவது நிகழ்வு

8 Min Read

சிறப்பு புத்தக சலுகைகள்

* பொங்கல் என்பது தமிழர் திருநாள் – ஜாதிக்கு ஒரு பொங்கல் என்று
மீண்டும் மலேசியா மண்ணில் தொடங்க ஆரம்பித்திருக்கிறார்கள்!
* திராவிடர் கழகம், பெரியார் அமைப்புகள் எல்லாம் 
அதற்கான எதிர்வினையை ஆற்றிக் கொண்டுதான் இருக்கின்றன!!
எல்லா காலத்துக்கும் பெரியார், எல்லோருக்கும் தேவையான ஒருவராகவே இருக்கிறார்!

சிங்கப்பூர், ஜூலை 29  பொங்கல் என்பது பொதுவாக தமிழர் திருநாள்.  ஆனால், இங்கே எப்படி மாறியிருக்கிறது என்றால், ஜாதிக்கு ஒரு பொங்கல் ஆகியிருக்கிறது.  இந்த மாதிரியான விஷயங்கள் எல்லாம்  மீண்டும் மலேசியா மண்ணில்  தொடங்க ஆரம்பித்திருக்கிறது. இருந்தாலும், திராவிடர் கழகம், பெரியார் அமைப்புகள் எல்லாம்  அதற்கான எதிர்வினையை ஆற்றிக் கொண்டுதான் இருக்கின்றன. எல்லா காலத்துக்கும் பெரியார், எல்லோருக்கும் தேவையான ஒருவராகவே இருக்கிறார்.  இங்கே தலைமுறைகள் மாறி இருக்கலாம்; ஆனால், அவருடைய கருத்துகளோடு பயணம் செய்யும் ஒவ்வொரு தலைமுறையும் இன்னமும் இருந்து கொண்டுதான் இருக்கிறோம் என்றார் கனடாவிலிருந்து காணொலி நிகழ்வில் பங்கேற்ற சிவா.லெனின்.

‘‘வாருங்கள் படிப்போம்’’ குழுவின்
359 ஆவது நிகழ்வு!

கடந்த 18.7.2026 அன்று சிங்கப்பூரில்  ‘‘வாருங்கள் படிப்போம்’’ குழுவினரின் 359 ஆவது நிகழ்வாக ‘‘மலேசியா சிங்கப்பூரில் பெரியார்’’ புத்தகத்தின் ஆய்வுரையினை ஜெர்மனியிலிருந்து காணொலிமூலம், முனைவர் சுபாஷினி அவர்கள் நிகழ்த்தினார். அந்நிகழ்வில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களும்  சிங்கப்பூரிலிருந்து காணொலிமூலம் பங்கேற்றார் . ஆய்வுரையின் முடிவில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார்.

நேற்றைய தொடர்ச்சி வருமாறு:

ஆசிரியர் அய்யாவின் உற்சாகத்தைப் பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது!

முனைவர் ஒளிவண்ணன்: அனைவருக்கும் வணக்கம்! நான், ஒளிவண்ணன்.  இன்றைக்கு நாள், ஓர்  உன்னதமான நாள். ஏனென்றால், எந்த நூலைப்பற்றி  பேசுகி றார்களோ, அதே ஊரில் ஆசிரியர் அய்யா இருக்கிறார் சிங்கப்பூரில்! ஒரு பக்கம் ஜெர்மனிலிருந்து சுபாஷினி; அமெரிக்காவிலிருந்து நண்பர்கள் பேராசிரியர் அரசு செல்லையா போன்றவர்கள் இருக்கிறார்கள். மகிழ்ச்சியாக இருக்கிறது இன்றைக்கு!  சிவா லெனின் என்பவர் மலேசியாவில் இருந்து வந்திருக்கிறார். அவர் மலாயா கணபதி  (வாழ்வும் போராட்டமும்) புத்தகத்தை எழுதியவர். கனடாவிலிருந்து பொன். ஏழுமலை வந்திருக்கார். இன்றைக்கு உலகம் முழுவதிலிருந்து இணைந்திருக்கிறார்கள்.  நமக்கெல்லாம் ஒரே ஒரு கவலை என்னவென்றால், சிங்கப்பூரிலேயும், மலேசியாவிலும் இரவு 11.30 மணி. ஆசிரியர் அய்யா அவர்கள் 10 மணிக்குள் உறங்கப் போகிறவர்.  இருந்தாலும் இன்றைக்கு அவர்களுடைய உற்சாகத்தைப் பார்க்கும்போது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது.  அய்யாவிற்கு நாங்கள் நன்றி சொல்கிறோம்.

நாங்கள் எல்லோரும்
உங்களோடு உறுதுணையாக இருப்போம்!

சுபாஷினியிடம் ஒரே ஒரு வேண்டுகோள். நீங்கள் இன்றைக்கு உலகத்தில் இருக்கின்ற தமிழர்களை எல்லாம் இணைத்து, பல நல்ல அரிய காரியங்களைச் செய்து வருகிறீர்கள். தொல்லியல் துறையாக இருந்தா லும் சரி, பல்வேறு துறையாக இருந்தாலும் சரி. இந்தக் கேடுகெட்ட ஜாதி சங்கங்களை எல்லாம் உலக அளவில் ஒழிப்பதற்குத் தமிழர்களைத் திரட்டு வதற்கும் ஒரு மிகப்பெரிய திட்டத்தை  நீங்கள், பெரியாரை முன்னிலைப்படுத்திக் கொண்டு போக வேண்டும் என்பதை எங்களுடைய வேண்டுகோளாக வைக்கிறோம். ஏனென்றால், இதுதான் இன்றைய காலகட்டத்தினுடைய கட்டாயம். தமிழ்நாட்டைவிட அதிகமாக  அமெரிக்காவில் ஜாதி பார்க்கிறார்கள் என்று நினைக்கும்போது வருத்தமாக இருக்கிறது. இதை நீங்கள் ஏன் முன்னெடுக்கக் கூடாது? இதுதான் மிக முக்கியம். இதற்கு நாங்கள் எல்லோரும் உங்களோடு உறுதுணையாக இருப்போம் என்று சொல்லிக் கொள்கிறேன்.

அய்யாவிற்கு எங்களுடைய வணக்கத்தையும், ‘‘வாருங்கள் படிப்போம் குழு’’மூலம் எங்களுடைய நன்றியையும் நாங்கள் தெரிவித்துக் கொள்கிறோம்.

சிவா லெனின்: வணக்கம்! நான் இருக்கிற ஊரைப்பற்றி நான் முதலில் சொல்கிறேன். நான், மலேசியாவில் சுங்கை என்ற ஓர் ஊரில் இருக்கிறேன்.  அந்த ஊருக்குப்  பெரியாரும் வந்திருக்கிறார், பாவலர் பெருஞ்சித்திரனாரும் வந்திருக்கிறார், பேரறிஞர் அண்ணாவும் வந்திருக்கிறார். அத்தகைய பெருமைக்குரிய ஒரு ஊர், நான் இருக்கிற சுங்கை என்கிற ஊர்.  தோழர் சுபாஷினி சொன்னார்கள், தஞ்சோங் மாலிம் அடுத்து கங்கை குரூட் என்ற ஓர் இடம் வரும். அந்த ஊருக்குப் பெரியார் வந்தார். அந்த ஊருக்கு அவர் வந்தபோது, அங்கே நடந்த ஒரு சம்பவத்தை நான் இங்கே தெரியப்படுத்த வேண்டும் என்று நினைக்கிறேன். அதாவது பெரியார் அவர்கள் முதல் முறை  1929 ஆம் ஆண்டு வரும்போது,  அவர் ஈப்போவுக்குப் போகிற வழியில், அந்த ஊரில் உள்ள ஒரு கோயிலில் அவர் உரையாற்றுகிறார்.

கீழ்ஜாதியினருக்கு ஒரு கிணறு;
மேல் ஜாதியினருக்கு மற்றொரு கிணறு இருந்தது; பெரியாரின் வருகைக்குப் பிறகு அது ஒரு கிணறாக மாறியது!

அப்படி பெரியார் உரையாற்றும்போது, அந்த ரப்பர் தோட்டத்தில் இரண்டு கிணறுகள் இருந்தன. ஒன்று மேல் ஜாதிக்கு; இன்னொன்று கீழ் ஜாதிக்கு என்று. பெரியார் இதைப் பார்த்துவிட்டு, வன்மையாக அவர்களிடம் போகும்போது சொல்லிட்டுப் போகிறார். அதற்கு பிறகு ஒரு 20 ஆண்டுகளுக்குப் பிறகு, அந்த இரண்டு கிணற்றில், ஒரு கிணறு உடைக்கப்பட்டது. எல்லாருமே ஒரு கிணற்றைத்தான் பயன்படுத்தினார்கள்.

அந்தத் தோட்டத்தில் இருந்த கோயிலுக்கும், தமிழ் பள்ளிக்கும் பெரியார் வந்திருக்கார்.

அந்த தோட்டம், நான் இருக்கிற ஊரிலிருந்து நான்கு கிலோ மீட்டருக்குள்தான் இருக்கும்.

இது ஒரு விஷயம். அடுத்து, பெரியாரின் வருகைக்குப் பிறகு, மலேசியாவில் என்னவெல்லாம் நிகழ்ந்தது என்பதைப்  பார்க்கும்போது, தோட்டங்களில் ‘லயம் வீடு’ என்று சொல்லுவார்கள்.  வரிசை வீடுகளை  அப்படி சொல்லுவார்கள். நான் நினைக்கிறேன், லயன் என்ற வார்த்தையைத்தான் லயம் என்று சொல்லி விட்டார்களோ என்று.

மேல் லயம், கீழ் லயம் என்ற வேறுபாடுகள் உடைபட்டன!

அந்த வீடுகளில் பாத்தீர்களேயானால், மேல் லயம், கீழ் லயம் என்று இருக்கும். மேலயத்தில்  உயர்ந்த ஜாதிகளும், கீழ் லயத்தில  தாழ்த்தப்பட்ட என்ற ஓர் அடிப்படையில் அந்த லயம் வீடுகள் இருந்தன. பெரும்பான்மை தோட்டங்களில் இந்நிலைதான் இருந்தது. பெரியாரின் வருகைக்குப் பிறகு, அது எல்லாமே உடைப்படுது அந்த இடத்தில். எல்லோரும் எங்கே வேண்டுமானாலும் தங்கலாம். மேல் லயம் வீட்டுக்காரர்கள், கீழ்லயம் வீட்டுக்காரர்கள் என்கிற  பாகுபாடு இல்லாத ஒரு நிலை உருவாயிற்று. அதுமட்டுமல்லாமல், பகுத்தறிவு சிந்தனைகள் மட்டுமில்லாமல், தொழிற் சங்கங்களிலேயும் பெரியாரின் சிந்தனைகள் இந்த நாட்டில் பரவத் தொடங்க ஆரம்பித்தது. அந்த மாதிரி வரும்போதுதான், மலாயா கணபதி போன்ற போராட்டவாதிகளை ஒடுக்கும்போது, அவர்கள் எல்லாம்  பெரியாரின் கருத்துகளைப் பேச ஆரம்பிக்கிறார்கள். இது எல்லாமே  பெரியாரின் வருகைக்குப் பிறகு நடந்தது. ஏனென்றால், மலாயா கணபதி சம்பவம் 1949 இல் நடக்கிறது. அதற்கு முன்பு, இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, தீவிரமாக தோட்டத் தொழிலாளர்கள் போராட்டங்கள் 1941 இல் நடைபெற்ற போராட்டம் இதெல்லாம் நடக்கும்போது பெரியாரின் கருத்துகள் அதிகமாக பேசப்படு
கிறது.

பெரியாரும், பெரியாரின் கருத்துகளும் இந்த நாட்டில் ஒரு தீவிரமான முற்போக்குச் சிந்தனையாக  பரவி இருக்கிறது!

அதே சமயம் வீரமணி அய்யாவுக்குத் தெரிய வாய்ப்பு இருக்கிறது. மலேசியாவில், திராவிடர் கழகம் குறிப்பாக பெரியாரின் படங்கள் போட்டு, அறிக்கைகளை திராவிடர் கழகம் கொடுக்கும்போது கைது செய்யப்பட்ட நிகழ்வெல்லாம்  நடந்தது.  தடை செய்யப்பட்டதும் உண்டு. குறிப்பாக ஜுகோர் மாநிலத்தில், மலாயா சக்திமோகன், அவர் தொழிற்சங்கத்தில இருந்தார். தமிழ்நாட்டில்தான் இருந்தார் கடைசியாக. அவர் கைது செய்யப்பட்டிருக்கார் இந்த விஷயத்திற்காக. அதாவது திராவிடர் கழக சுற்றறிக்கைகளை வெளியிட்டதற்காக. அப்படியானால், இந்த மாதிரியான அளவுக்குப் பெரியாரும், பெரியாரின் கருத்துகளும் இந்த நாட்டில் ஒரு தீவிரமான முற்போக்குச் சிந்தனையாக  பரவி
இருக்கிறது.

திராவிடர் கழகம், பெரியார் அமைப்புகள் எல்லாம்  அதற்கான எதிர்வினையை ஆற்றிக் கொண்டுதான் இருக்கிறார்கள்!

மலேசியா  சுதந்திரம் வாங்குவதற்கு முன்பு, ஒரு மாபெரும் புரட்சி, அதாவது குறிப்பாக தமிழர்கள் மத்தியில்  ஒரு புரட்சி மிகுந்த மண்ணாகத்தான் இருந்திருக்கிறது. அதற்கு பிறகும் அது தொடர்ச்சியாக இருந்தது. ஆனால், இப்பொழுது சுபாஷினி சொன்னதைப் போல, தமிழ்நாட்டிலிருந்து ஜாதி சங்கங்கள் எல்லாம் இங்கே வந்து, மீண்டும் இங்கே அந்தக் குப்பைகளைக் கொட்டத் தொடங்கிவிட்டார்கள். அது இப்பொழுது இயல்பாக நடக்கிறது. ஜாதி சங்கம் மாநாடு நடக்கிறது. ஜாதி சங்கம் பொங்கல் நடக்கிறது. அதாவது பொங்கல் என்பது பொதுவாக தமிழர் திருநாள்.  ஆனால், இங்கே எப்படி மாறியிருக்கிறது என்றால், ஜாதிக்கு ஒரு பொங்கல் ஆகியிருக்கிறது.  இந்த மாதிரியான விஷயங்கள் எல்லாம்  மீண்டும் மலேசியா மண்ணில்  தொடங்க ஆரம்பித்திருக்கிறது. இருந்தாலும், திராவிடர் கழகம், பெரியார் அமைப்புகள் எல்லாம்  அதற்கான எதிர்வினையை ஆற்றிக் கொண்டுதான்
இருக்கின்றன.

எல்லா காலத்துக்கும் பெரியார், எல்லோருக்கும் தேவையான ஒருவராகவே இருக்கிறார்!

அந்த வகையில், ஒரு விஷயத்தை இங்கே பதிவு செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன். இளம் தலைமுறையினர் எல்லோரும் சேர்ந்து, ‘கருஞ்சட்டை இளைஞர் படை’ என்ற ஒன்றை உருவாக்கியிருக்கிறோம். கோவிட் காலகட்டத்தில் தொடங்கப்பட்டது. கருத்தியல் ரீதியான விஷயங்களைப் பேசி, கடந்த இரண்டு ஆண்டுகளாக  மாநாடு நடத்தியிருக்கின்றோம். அந்த மாநாட்டுக்கு, இந்த நாட்டில், மத அமைப்புகளும், ஜாதி அமைப்புகளும் எங்களுக்குப் பெரிய எதிர்ப்பைத் தெரிவித்தார்கள். அதை மீறியும், கடந்த இரண்டு ஆண்டுகளாக அந்த மாநாடு – கருஞ்சட்டை இளைஞர் படையின் மாநாடு சிறப்பாகவே நடந்தேறியது. இந்த ஆண்டும் அந்த மாநாடு கண்டிப்பாக நடக்கும். இதை, ஏன் நான் சொல்கிறேன் என்றால், எல்லா காலத்துக்கும் பெரியார், எல்லோருக்கும் தேவையான ஒருவராகவே இருக்கிறார்.  இங்கே தலைமுறைகள் மாறி இருக்கலாம்; ஆனால், அவருடைய கருத்துகளோடு பயணம் செய்யும் ஒவ்வொரு தலைமுறையும் இன்னமும் இருந்து கொண்டுதான் இருக்கிறோம் என்பதை இந்த நேரத்தில் இங்கே பதிவு செய்வதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.

நன்றி!

துரை. தியாகராஜன்:  ஆசிரியர் அய்யா அவர்களுக்கு வணக்கம்.

உங்களிடம் நேரடி யாகப் பேசுவதற்கு, இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்த  சுபாஷினி மேடத்துக்கும் என்னுடையநெஞ்சார்ந்த நன்றிகள்.

பெரியாரிய கருத்துகள் என்னுடைய அருகில் வந்து சேர்ந்ததுக்கு முக்கியமான நபர் நான் சொல்ல வேண்டும் என்றால்,  பொள்ளாச்சிக்குப்  பக்கத்தில் இருக்கக்கூடிய கணியூரில் தங்கவேல் என்பவர் ஒருவர் இருக்கிறார்.  அவர்,  அரசு கருவூலத்தில் கண்காணிப்பாளராகப் பணிபுரிந்து கொண்டிருக்கிறார்.

30 வயதிற்குப் பிறகுதான்
எனக்குத் தெரிந்தது!

எனக்கு இரண்டு கேள்விகள் இருக்கின்றன அய்யா, உங்களிடம் கேட்பதற்கு.  ஜாதிகள்  2000 ஆம் ஆண்டுகள் கடந்து இன்னமும் ஜாதியை எதிர்த்துப் போராடிக் கொண்டிருக்கின்றோம் என்பதை அவர்மூலம்தான் நான் உணர்ந்தேன். 30 வயதிற்குப் பிறகுதான்  எனக்குத் தெரிந்தது. அதுவரையில் அதைப்பற்றி தெரியமால் தான் இருந்தேன்.

நம்முடைய தமிழ்நாட்டில், ஜாதி கட்சிகள்  நிறைய இருக்கின்றன. சீனாவில், ஒரே ஒரு கட்சிதான் இருக்கிறது. அமெரிக்காவில் இரண்டே இரண்டு கட்சிகள்தான் இருக்கிறது. அது மாதிரி  ஜாதி கட்சிகள் இல்லாத ஒரு சூழ்நிலை, சமுதாயம் இருந்தால், சரியா இருக்குமா? என்பது முதல் கேள்வி.

இரண்டாவது, பெண்ணியத்தைப்பற்றிப் பேசவேண்டும். பெண் உரிமைகளுக்காக  அய்யா பெரியார் அவர்கள் நிறைய போராடி இருக்கிறார். பெண்ணியம் வந்து, நிறைய மாற்றங்கள் சந்தித்தி ருக்கிறார்கள்,  தமிழ்நாட்டிலயே. உலகளாவிய அளவில் பெரியாரைக் கொண்டு போகிறோம். உலகத்தினுடைய நாகரீக மாற்றங்களைத் தமிழ்நாடு வரைக்கும் நாம் கொண்டு வருகிறோம்.  அதுவரைக்கும், மகிழ்ச்சிதான். பெண்ணியம் இருக்கட்டும். ஆனாலும், அது ஒரு ‘சைட் எபெக்ட்’ மாதிரி இருக்கிறது என்று நாம் எடுத்துக்கொள்ளலாமா? அந்த மாதிரி எதுவும் நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? அதைப்பற்றி உங்கள் கருத்துகளைச் சொல்லுங்கள் அய்யா.

(தொடரும்)

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *