புதுடில்லி, ஜூலை 29- எத்தனால் கலந்த பெட்ரோல் (இ20 பெட்ரோல்) விற்பனையை எதிர்த்து வரும் ஆக.4ஆம் தேதி நாடாளுமன்றம் நோக்கி பேரணி செல்ல போக்குவரத்துச் சங்கங்கள் திட்டமிட்டுள்ளன.
நாடு முழுவதும் 20 சதவீத எத்தனால் கலக்கப்பட்ட (இ20) பெட்ரோல் விற்பனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்புகள் எழுந்துள்ளது.
இந்நிலையில், இது குறித்து டில்லி டாக்சி மற்றும் சுற்றுலாப் போக்கு வரத்து மற்றும் சுற்றுலா ஆபரேட்டர்கள் சங்க தலைவர் சஞ்சய் சாம்ராட் கூறியதாவது:
“எத்தனால் கலந்த பெட்ரோல் விற்பனையை எதிர்த்தும், அதனை திரும்பப் பெற கோரியும் நாடாளுமன்றம் நோக்கி ஆக.4இல் பேரணி செல்ல திட்டமிட்டுள்ளோம்.
இந்த விவகாரத்தில் நித்திரையில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களை விழிக்க செய்யவுள்ளோம். எத்தனால் கலந்த பெட்ரோல் காரணமாக தேசம் முழுவதும் வாகனங்கள் பழுதடைவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாங்கள் இந்த விவகாரத்தில் அரசியல் செய்ய விரும்பவில்லை. எங்களது பேரணி போராட்டத்துக்கும் இ20 ஜனதா கட்சி, கரப்பான் பூச்சி ஜனதா கட்சி அல்லது வேறு எந்தவொரு அமைப்புக்கும் தொடர்பு இல்லை” என்றார்.
இது தொடர்பாக அகில இந்திய மோட்டார் போக்குவரத்து சங்கத்தின் தேசிய தலைவர் ஹரிஷ் சபர்வால் கூறியதாவது:
“வாகன பயன்பாட்டாளர்களிடம் இ20 பெட்ரோல் பயன்பாடு திணிக் கப்படக்கூடாது. விருப்பத்தின் அடிப்படையில் அது வழங்கப்பட வேண்டும்.
இப்போது அது மாதிரியான விருப்ப தேர்வு எதுவும் இல்லை. இந்த விவகாரம் சார்ந்து நாடாளுமன்றம் நோக்கி மேற்கொள்ள உள்ள பேரணியை நாங்கள் ஆதரிக்கிறோம். இப்போதைக்கு தேசிய அளவிலான வேலைநிறுத்தம் மேற்கொள்ளும் திட்டம் எதுவும் இல்லை” என்றார்.
கரப்பான் பூச்சி ஜனதா கட்சி மேற்கொண்ட போராட்டத்துக்கு வெற்றி கிடைத்த நிலையில் சமூக வலைதளத்தில் இ20 ஜனதா கட்சி உதயமானது. இதற்கு ஆதரவு பெருகி வரும் நிலையில் நாடாளுமன்றம் நோக்கி பேரணி அறிவிக்கப்பட்டுள்ளது.
