தமிழ்நாடு, கருநாடக முதலமைச்சர்கள் சந்திப்பு பற்றி விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு அமைச்சர் வினோத் தகவல்

3 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

கும்பகோணம், ஜூலை 27– மேகதாது அணை விவகாரம் தொடர்பாக, ஆக.3ஆம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் – கருநாடகா டி.கே.சிவக்குமார் முதலமைச்சர் சந்திப்பு குறித்து தலைமை அலுவலகத்தில் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் என தமிழ்நாடு வேளாண்மைத் துறை அமைச்சர் வினோத் தெரிவித்தார்.

கும்பகோணத்தில் நேற்று (26.7.2026) அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

எல் நினோ காலநிலை மாற்றத்தால் வெயில் அடிக்கலாம், இல்லையெனில் மழை பெய்யலாம். அதனால், டெல்டா மற்றும் பிற மாவட்டங்களில் உள்ள விவசாயிகள் பாதிக்கப்படாத வகையில், காலநிலைக்கு ஏற்றவாறு எந்தப் பயிர்களை பயிரிடலாம் என்பது குறித்து விரைவில் அறிவிப்போம் என தெரிவித்தார்.

அப்போது, “மேகதாது அணை தொடர்பாக ஆக.3ஆம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய், கருநாடகா முதலமைச்சரை சந்திக்கப் போவதாக கூறியிருந்தீர்கள். ஆனால், அது உறுதியான தகவல் இல்லை என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் கூறியுள்ளாரே?” என செய்தியாளர்கள் கேட்டதற்கு, “இதுதொடர்பாக தலைமை அலுவலகத்தில் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும்” என வினோத் பதிலளித்தார்.

பள்ளிகளின் பாலினமன்ற ஆசிரியர்களுக்கு உளவியல் வழிகாட்டுதல் நிகழ்ச்சி!

சென்னை, ஜூலை 27- பாலினம் மற்றும் கொள்கை ஆய்வகம் சார்பில் பள்ளிகளின் பாலினமன்ற ஆசிரியர்களுக்கான உளவியல் வழிகாட்டுதல் நிகழ்ச்சியை நேற்று (26.7.2026) சென்னை மாநகராட்சி கல்வி அலுவலர் தொடங்கி வைத்தார்.

சென்னை மாநகராட்சி ஆணையர் சமீரன், உத்தரவின் பேரில் இணை ஆணையர் கற்பகம் வழிகாட்டுதலின் படியும் பாலினம் மற்றும் கொள்கை ஆய்வகம் சார்பில் பெருநகர சென்னை மாநகராட்சிப் பள்ளிகளின் பாலினமன்ற ஆசிரியர்களுக்கான உளவியல் வழிகாட்டுதல் நிகழ்ச்சி ரிப்பன் கட்டட வளாகக் கூட்டரங்கில் நேற்று (26.7.2026) நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியின் நோக்கமானது குழந்தை மற்றும் வளரிளம் பருவத்தினரின் உளவியல் குறித்த ஆசிரியர்களின் புரிதலை வலுப்படுத்துவதையும், மாணவர்களின் உணர்வுசார் நல்வாழ்வு மற்றும் நேர்மறையான வளர்ச்சிக்கு ஆதரவளிப்பதற்கான நடைமுறை அணுகுமுறைகளை அவர்களுக்கு வழங்குவதுமாகும். இந்நிகழ்ச்சியை பெருநகர சென்னை மாநகராட்சியின் கல்வி அலுவலர் தொடங்கி வைத்தார். குழந்தைகளின் தன்னம்பிக்கை, நடத்தை மற்றும் எதிர்காலத்தை வடிவமைப்பதில் ஆசிரியர்களின் முக்கியப் பங்கை எடுத்துரைத்தார்.

நேர்மறை வலுவூட்டல், ஊக்கம் மற்றும் பரிவுள்ள வழிகாட்டுதல் ஆகியவை ஒரு குழந்தையின் சுயமரியாதையை மாற்றி, அவர்களின் திறனை உணர்த்திட உதவும். சுவிட்சர்லாந்தின் சூரிச்சை சேர்ந்த பன்னாட்டுப் பகுப்பாய்வு உளவியலாளரும், சூரிச் அய்எஸ்ஏபின் மெட்ரிகுலேட்டட் தணிக்கையாளருமான மருத்துவர் அக்ஷயா ராஜா சிறப்புரையாற்றினார். ஒவ்வொரு குழந்தையின் நடத்தையும் ஒரு வகையான தகவல் தொடர்பு என்பதை கூறினார்.

மேலும், குழந்தைகளை திருத்தும் முயற்சியில் ஈடுபடுவதற்கு முன்பு அவர்களது உணர்வுகளைப் புரிந்து கொள்வதன் முக்கியத்துவத்தையும், குழந்தைகளின் பலத்தினை அங்கீகரிக்கவும், அவர்களின் முயற்சிகளைப் பாராட்டவும், உணர்வு ரீதியாக மீள்திறன் கொண்ட மற்றும் தன்னம்பிக்கையான தனிநபர்களை வளர்க்க நேர்மறையான வழிகாட்டுதலைப் பயன்படுத்தவும் ஆசிரியர்கள் ஊக்குவிக்கப்பட்டனர்.

எஸ்.அய்.ஆர் என்ற பெயரில்

ஆந்திராவில் 44.71 லட்சம் வாக்காளர்கள் பெயர் நீக்கம்!

அமராவதி, ஜூலை 27- வாக்காளர் சிறப்பு திருத்தத்தின் முதல் கட்டப் பணிகள் (எஸ்அய்ஆர்) முடிவுற்றதை தொடர்ந்து, ஆந்திர மாநிலத்தில் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 4.16 கோடியாக உள்ளது. மேலும், 44.71 லட்சம் போலி வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.

ஆந்திர மாநில தலைநகர் அமராவதியில் நேற்றுமுன்தினம் (25.7.2026) மாநில தேர்தல் ஆணையர் விவேக் செய்தியாளர்களிடம் பேசியதாவது:

“ஆந்திர மாநிலத்தில் முதல்கட்ட எஸ்அய்ஆர் பதிவுகளின் அடிப்படையில் மொத்தம் 4 கோடியே 16 லட்சத்து 27,694 வாக்காளர்கள் உள்ளனர். அந்தந்த முகவரிகளில் இல்லாதவர்கள் 7,76,900 பேர். ஆந்திராவை விட்டு வெளி மாநிலங்களுக்கோ அல்லது வெளி நாடுகளுக்கோ நிரந்தரமாக சென்று விட்டவர்களின் எண்ணிக்கை 14,34,112 ஆக உள்ளது.

வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள இறந்து போனவர்கள் மொத்தம் 15,19,558 பேர். இரு ஊர்களிலும் இடம் பெற்றவர்கள் 7,32,566 பேர். மற்றவர்கள் 8,387 பேர் என தெரிய வந்துள்ளது. மொத்தம் 44,71,523 வாக்காளர்களின் பெயர்கள் பட்டியலில் இருந்து அகற்றப்பட்டுள்ளன. அதிகபட்சமாக நெல்லூர் மாவட்டம் உள்ளது. இங்கு மொத்தம் 2,90,579 வாக்காளர்களின் பெயர்கள் அகற்றப்பட்டுள்ளன.

அடுத்தபடியாக திருப்பதி மாவட்டத்தில் 2,87,759 பேரின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. ஜூலை 31ஆம் தேதி முதல் ஆகஸ்ட் மாதம் 30ஆம் தேதி வரை பொதுமக்கள் இதுகுறித்து ஏதாவது சந்தேகமோ அல்லது தனிப்பட்ட கருத்தோ இருந்தால் தெரிவிக்கலாம்.

அதன் பின்னர், செப்டம்பர் 28ஆம் தேதிக்குள் வாக்காளர்கள் தெரிவித்த கருத்துகள் பரிசீலிக்கப்படும். அக்டோபர் 3ஆம் தேதி இறுதி வாக்காளர்கள் பட்டியல் வெளியிடப்படும். இவ்வாறு தேர்தல் ஆணையர் விவேக் தெரிவித்தார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *