மதுரை, ஜூலை 27– தமிழ்நாட்டில் தீண்டாமை வன்கொடுமைகளால் பாதிக்கப்பட்டு, குடும்பத் தலைவரை இழந்த பட்டியல் மற்றும் பழங்குடியின (எஸ்சி/எஸ்டி) குடும்பங்களுக்கு வழங்கப்படும் சிறப்பு குடும்ப ஓய்வூதியம் கடந்த 3 மாதங்களாக வழங்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ், படுகொலை செய்யப்பட்டவர்களின் குடும்ப வாழ்வாதாரம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்ய மாநில அரசால் மாதந்தோறும் ரூ.18,950 சிறப்பு ஓய்வூதியமாக வழங்கப்பட்டு வருகிறது.
ஆனால், கடந்த மே, ஜூன் மற்றும் ஜூலை ஆகிய மூன்று மாதங்களாக இந்த ஓய்வூதியம் வழங்கப்படவில்லை. இதனால் தமிழ்நாடு முழுவதும் பாதிக்கப்பட்ட 843 பேருக்கு வழங்க வேண்டிய ரூ. 4,51,42,650 (ரூ. 4.51 கோடி) நிலுவையில் உள்ளது. உரிய நேரத்தில் பணம் கிடைக்காததால், அக்குடும்பங்கள் அன்றாட வாழ்வாதாரத்திற்கு வழியின்றி கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
இது குறித்து ‘தலித்’ விடுதலை இயக்கத்தின் தலைவர் கருப்பையா தெரிவிக்கையில்:”கொலை செய்யப்பட்ட பட்டியலின மக்களின் குடும்பப் பராமரிப்பிற்காக வழங்கப்படும் ஓய்வூதியத்தை 3 மாதங்களாக நிறுத்தி வைத்திருப்பது மிகுந்த வருத்தத்திற்குரியது. சமூக நீதித்துறையே இந்த நிதியை விடுவிக்காமல் தாமதிப்பது பாதிக்கப்பட்ட குடும்பங்களின் வாழ்வாதாரத்தைக் கேள்விக்குறியாக்கியுள்ளது.
இதில் தமிழ்நாடு அரசும், சமூக நீதித்துறை அமைச்சரும் உடனடியாகத் தலையிட வேண்டும். நிலுவையில் உள்ள ரூ.4.51 கோடியை வட்டியுடன் உடனடியாக வழங்க வேண்டும். மேலும், நிதியை விடுவிக்காமல் காலந்தாழ்த்திய அதிகாரிகள் மீது துறைரீதியான கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்,” எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.
பாதிக்கப்பட்ட குடும்பங்களின் சூழலைக் கருத்தில் கொண்டு, அரசு உடனடியாக இந்த நிலுவைத்தொகையை விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.
