பெரியாருடைய கொள்கை ஒருபால் பட்டது அல்ல; எல்லா மக்களுக்குமானது!
மானுடத்தினுடைய எல்லைக்கு
விரிவடையக் கூடியது பெரியாரின் வெற்றி!
களைகள் வளர்கின்றன என்பதற்காகப் பயிரை அழித்து விட முடியாது;
பயிர் நிச்சயமாக அதனுடைய விளைவுகளைத் தரும்; நல்ல அறுவடை தரும்!
சிங்கப்பூர், ஜூலை 27 பெரியாருடைய கொள்கை ஒருபால் பட்டது அல்ல; எல்லா மக்களுக்குமானது – மானுடத்தினுடைய எல்லைக்கு விரிவடையக் கூடியது பெரியாரின் வெற்றி! அதுவரையில் அவர் பிரச்சாரம், நடந்து கொண்டே இருக்கும். மூடநம்பிக்கைகளும் ஒரு பக்கம் வளர்ந்து கொண்டே இருக்கும். பயிர் வளர்க்கும் போது, களையும் வளரும்; களை எடுத்தலும் மிக முக்கியம். களைகள் வளர்கின்றன என்பதற்காகப் பயிரை அழித்து விட முடியாது. பயிர் நிச்சயமாக அதனுடைய விளைவுகளைத் தரும்; நல்ல அறுவடை தரும் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
கடந்த 18.7.2026 அன்று சிங்கப்பூரில் ‘‘வாருங்கள் படிப்போம்’’ குழுவினரின் 359 ஆவது நிகழ்வாக ‘‘மலேசியா சிங்கப்பூரில் பெரியார்’’ புத்தகத்தின் ஆய்வு ரையினை ஜெர்மனியிலிருந்து காணொலிமூலம், முனைவர் சுபாஷினி அவர்கள் நிகழ்த்தினார். அந்நிகழ்வில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களும் சிங்கப்பூரிலிருந்து காணொலிமூலம் பங்கேற்றார் . ஆய்வுரையின் முடிவில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார்.
அவ்விவரம் வருமாறு:
20 ஆம் நூற்றாண்டிலே உலக அளவிலே இணையற்ற தலைவர் தந்தை பெரியார்!
கனடாவிலிருந்து பொன் ஏழுமலை: வணக்கம் அய்யா! இந்த நேரத்தில் உங்களுக்கு ஒரு நன்றியைச் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். கடந்த 2000 ஆம் ஆண்டில், y2 K என்பதைப்பற்றியான கூட்டம், திடலில் நடந்த போது, அப்போது பேச வேண்டிய ஒருவர் வரவில்லை என்பதினால், என்னு டைய மகள் பேசினார். பகுத்தறிவாளனாக இருப்பதால், எப்படி தன்னம்பிக்கையாக இருப்பது என்பதை குறித்து அவர் பேசியதைக் கேட்டு, நீங்கள் கேட்டீங்க, ‘‘யார் இந்த பெண்?’’ என்று.
இவர்தான், ஏழுமலையோட பெண் என்று சொன்ன போது, ‘‘ஏழுமலையோட பெண் இப்படி பேசவில்லை என்றால்தான் வியப்பு’’ என்று வாழ்த்தினீர்கள். அந்த மகள் தான், இன்றைக்குக் கனடாவில் இருக்கிறாங்க. அங்கிருந்து உங்களை இந்த நிகழ்வின்மூலமாகப் பார்ப்பதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி!

அய்யா, பெரியாரைப் போலவே நீங்களும் இந்த வயதில், நிறைய உழைக்கிறீங்க, தெளிவாகப் பேசுறீங்க; உங்களுடைய வாழ்வியல் சிந்தனைகளை நான் படித்திருக்கிறேன். பெரியாருடைய கடைசிக் கூட்டம் 1973 இல், தியாகராயர் நகரில் நடந்த போது, அதைக் கேட்டவன் நான். மலேயாவிற்குப் பெரியார் அவர்கள் சென்றபோது 56 வயது என்று சொல்கிறார்கள். அப்பவே, இதோ இப்போது நாம் உணர்கின்ற வீரியத்தோடே அப்பொழுதும் இருந்தி ருக்கிறார். ‘முதிர்ந்த காலத்தில் தான் அந்த முதிர்ச்சி வந்தது என்பது இல்லை. இளமையிலேயே இருந்தது’ என்று தெரிந்திருக்கிறது. அவர் பயணத்தில் கூட களைப்பில்லாமல், அன்றைக்கே கூட்டங்களில் கலந்து கொண்டிருக்கிறார் என்பது அவருக்கான சிறப்பு. நான் இங்கே பேசும் பொழுதுகூட, நான் என்ன சொல்வேன் என்றால், உலகத்தில் பல தலைவர்கள் பெரியாருக்கு முன்பும் சீரிய கருத்துகளைச் சொல்லி இருக்கிறார்கள். பின்பும் சொல்லி இருக்கிறார்கள். ஆனாலும், அந்த சமகாலத்திய விழுமியங்களுக்கு எதிரடியான, அதிரடியான கருத்துகளைச் சொல்லி, அந்த மக்களால் ஏற்றுக்கொண்டு பாராட்டப்பட்ட தலைவர் பெரியாரே! அவர் 20 ஆம் நூற்றாண்டிலே உலக அளவிலே இணையற்ற தலைவர் என்றுதான் நான் அறிமுகப்படுத்துவேன் என்னுடைய நண்பர்களிடம்.
பெரியார் எதிர்கொண்டது எப்படி?
என்னுடைய கேள்வி என்னவென்றால், பெரியார், அந்தக் காலத்துல அங்கே சென்றபோது, அங்கே சொன்னாங்க ஜாதிச் சங்கம் என்று சொன்னாங்க; மருத்துவர் என்று பெயர் வைத்திருந்தார்கள். நம்முடைய ஊரில், எங்கள் பகுதியில், கொச்சையாக ‘அம்பட்டன்’ என்று சொல்லுவாங்க, முடித்திருத்துபவர்களை! அவர்களைத்தான் மருத்துவர்கள் என்று அங்கே சொல்வார்கள். அந்த மாதிரியான சூழல் அங்கே இருந்தது. பெரியார் அவர்கள், தமிழ்நாட்டிலிருந்து அங்கே போகிறார். அப்பொழுது அங்கே இருந்த மக்களிடையே அவருக்கு மேல்தட்டு வர்க்கத்தினுடைய எந்த அளவுக்கு ஆதரவும், அவரைப் போற்றுதலும் இருந்தது. அதை எப்படி அவர் எதிர்கொண்டார் என்பதையும் சொன்னால் நன்றாக இருக்கும் அய்யா!
‘கருத்துச் சுதந்திரம் உண்டு கேள்வி கேட்க’ என்று சொல்லுவார் தந்தை பெரியார்!
தமிழர் தலைவர் பதில்: ‘‘ஜாதி ஒழிப்பு மாநாடு’’ என்று ஈப்போவிலே முதலில் நடத்தினார். எப்பொழுதுமே தந்தை பெரியார் அவர்களின் கருத்துகளை, யாரும் முதலில் சரியாகப் புரிந்து கொண்டதே கிடையாது. அதிகமான மக்கள், அவரை எதிர்த்துதான், பின்னர் மாறி இருக்கிறார்கள். எனவே, எதிர்த்த மக்களின்மீது அவர் கொஞ்சம் கூட கோபப்பட்டது இல்லை. அதற்கு விளக்கம் சொல்லுவார். விளக்கம் சொல்லி, கேள்வி கேட்க வைப்பார். ‘கருத்துச் சுதந்திரம் உண்டு கேள்வி கேட்க’ என்று சொல்லுவார்.

விருதுநகருக்கு ஒரு முறை அய்யா சென்றபோது, அவரை நோக்கி ஒருவர் கத்தியை எடுத்துக் கொண்டு சென்றபோது, எல்லாரும் ஆத்திரப்பட்டு போனார்கள். ‘‘அவரை உட்கார வையுங்கள், இங்கே’’ என்று சொல்லிவிட்டு, அவருக்கு விளக்கம் சொன்னார் அய்யா.
‘‘அய்யா, எனக்கு எதுவும் தெரியாது. யாரோ என்னை அனுப்பினார்கள். இந்த வேலையைச் செய்யச் சொல்லி, இன்றைக்கு நான் இவ்வளவு அறிவு பெற்றேன்’’ என்று அவர் வருத்தப்பட்டுப் போனார் என்பதை, பட்டுக்கோட்டை அழகிரிசாமி அவருடைய உரையில் சொல்லி இருக்கிறார்.
பெரியாருடைய உழைப்பு எல்லா இடங்களிலும் வெற்றி பெற்றிருக்கிறது!
ஆகவே, இப்படி தந்தை பெரியார் அவர்கள், எதிர்நீச்சலிலே வளர்ந்து வளர்ந்துதான் இயக்கத்தை நடத்தினார். மலேசியாவிலும் எதிர்நீச்சல் தான். சிங்கப்பூரில், அந்த அளவுக்கு இல்லை. நீங்கள் சொல்கிற மாதிரி, சிங்கப்பூர் நாடு இன்றைக்கு இந்த அளவிற்கு வளர்ந்திருக்கிறது. அந்த நாட்டில், டீ கிளாசில் வித்தியாசம்; மிகப்பெரிய அளவிற்கு அங்கே தீண்டாமை என்பது ஒரு காலத்தில் மிக முக்கியமான பகுதிகளில் எல்லாம் இருந்தது. பெரியாருடைய கொள்கைகள் வந்ததினால், இன்றைக்கு அந்தப் பிள்ளைகளின் தலைமுறைக்குச் ஜாதி என்றாலே, என்னவென்று தெரியாத அளவுக்கு வந்திருக்கிறது என்றால், பெரியாருடைய உழைப்பு எல்லா இடங்களிலும் வெற்றி பெற்றிருக்கிறது. அவரே சொன்னார், ‘‘என்னுடைய கொள்கைகளுக்கு உடனடியாக வெற்றி ஏற்படாது; கொஞ்சம் காலதாமதமாகும்; ஆனால், என்றைக்கும் நான் தோற்க மாட்டேன்’’ என்றார். இதுதான் பதில்.
முட்டாள்களிடம் கெட்ட பெயர் எடுத்தால் அதனால் நட்டமில்லை!
கடுமையான உழைப்பு; அது எந்தவிதமான பதவியோ, புகழோ இல்லை. ஒரே ஒரு வார்த்தைச் சொன்னார், ‘‘நல்ல பெயர் எடுக்கவேண்டும் என்று நினைப்பவர்கள் என் கூட வருவது அவசியம் இல்லை. கெட்ட பெயர் எடுக்கிறவன் மட்டும் என்கூட வா! முட்டாள்களிடம் நல்ல பெயர் வாங்குறதவிட, அவர்களிடம் கெட்ட பெயர் எடுத்தால் அதனால் நட்டமில்லை. அறிவாளிகளாக அவர்களை மாற்றுவதுதான் என்னுடைய பணி’’ என்று சொன்னார். இப்படி ஆசாபாசங்கள் அற்ற ஒரு தலைவர், பதவி எதிர்பாராத தலைவர், நன்றியை எதிர்பாராத தலைவர், மானம் பாராத தலைவர், மற்றவர்களுக்கு மானத்தைச் சொல்லிக் கொடுத்த தலைவர். தொடர்ந்து அந்தப் பணியைச் செய்தார். அந்தப் பணி இன்றைக்குப் ‘பெரியார் உலகமயம்; உலகம் பெரியார் மயம்’’ என்ற அளவிற்கு வளர்ந்திருக்கிறது. இதுதான் ரகசியம்!
முனைவர் அரசு செல்லையா: ஆசிரியர் அய்யாவைப் பார்ப்பதில் மிகுந்த மகிழ்ச்சி. சுபாஷனி அருமையாக உரையாற்றினார்கள். என்னுடைய அப்பா, மலேயா போய்விட்டு, அம்மாவோடு வாழ்ந்து, பிறகு தமிழ்நாட்டில் இருக்கிறார்கள். சித்தப்பா பிள்ளைகள் எல்லாம், அங்கே பெயரப் பிள்ளைகளோடு மலேசியாவில் வசிக்கிறார்கள். நானும் அங்கே போவது உண்டு. அமெரிக்காவிற்கு வந்து 41 ஆண்டுகள் ஆயிற்று. ஒரு கிராமத்திலிருந்து இங்கே வருவதற்கு அடிப்படைக் காரணம், தந்தை பெரியார்தான். தந்தை பெரியாருடைய சிந்தனை, உழைப்பு – அதைத் தொடர்ந்து, இப்பொழுது ஆசிரியர் அய்யாவும் இன்றைக்கு நிகழ்த்திக் கொண்டிருப்பது எங்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்தக் கூட்டத்தில், பகுத்தறிவாளர்கள் பலரைப் பார்ப்பதில் மிக்க மகிழ்ச்சிடைகிறேன்.
அடிப்படைக் காரணம் பெரியாருடைய ஜாதிப் பட்டத்தை ஒழிக்கும் தீர்மானம்தான்!
சுபாஷனி உரையில் நிறைய செய்திகள் இருந்தன. திரும்பத் திரும்ப படிக்க வேண்டும் அந்தப் புத்தகத்தை! ஜாதிப் பட்டத்தை ஒழிக்கும் தீர்மானத்தை செங்கல்பட்டு மாநாட்டில் நிறைவேற்றினார். அந்த ஒரு தீர்மானம் போட்டதனால், பெயருக்குப் பின்னால் ஜாதியைப் போடுவது கிடையாது. இங்கே (அமெரிக்கா) வந்து பல ஆண்டுகள் ஆயிற்று. ஒரு கட்டத்தில், ‘‘எங்களுடைய பிள்ளைகள் என்னிடம், நாம் என்ன ஜாதி?’’ என்று கேட்டார்கள். ‘‘உனக்குத் தெரியவில்லை அல்லவா, அதை விட்டுவிடு, அதைப்பற்றித் தெரிந்து கொள்ளவேண்டிய அவசியம் இல்லை’’ என்றேன். இப்போது பெயரப் பிள்ளைகளுக்கு ஜாதி என்றாலே ‘டெபனிஷன்’ சொல்ல வேண்டும். அந்த அளவுக்கு இங்கே மாறியிருக்கிறது.
அதற்கு அடிப்படைக் காரணம் பெரியாருடைய ஜாதிப் பட்டத்தை ஒழிக்கும் தீர்மானம் என்பதுதான். இதுபோன்ற நிகழ்வுகளை சுபாஷனி அடிக்கடி நிகழ்த்த வேண்டும். ஆசிரியர் அய்யாவும் அடிக்கடி வந்து கலந்து கொள்ளவேண்டும். நன்றி சொல்வதற்காகத்தான் நான் அழைத்தேன். நன்றி, வணக்கம்!
தமிழர் தலைவர்: நான் பேசும்போது சொன்னேன், முதல் தலைமுறையில் மலேசியாவிற்குப் போன வர்களை, அவர்களது பிள்ளைகளைப் படிக்க வைக்கச் சொன்னார். அடுத்த தலைமுறை, பெரியாரை வர வேற்றது! இப்பொழுது அங்கே மலேசியாவில் இருந்து, பிறகு படித்துப் பிறகு தமிழ்நாட்டில் ஜாதி மறுப்புத் திருமணம், காதல் திருமணம் செய்து கொண்டு, பிறகு அமெரிக்காவில பேராசிரியர் அரசு செல்லையாவாக ஆகியிருக்கிறீர்கள் என்றால் பெரியார் வகுத்த இலக்கணத்துக்கு, இலக்கியம் உங்களை போன்றவர்கள்.
மானுடத்தினுடைய எல்லைக்கு விரிவடையக் கூடியது பெரியாரின் வெற்றி!
எனவேதான், இதுபோல கொள்கை வெற்றியைப் பார்க்கக்கூடிய வாய்ப்பு பெரியாருக்குக் கிடைத்தது. இந்த இயக்கம் ஒருபோதும் தோற்காது என்பதற்கு உங்களைப் போன்றவர்கள் உற்சாகத்தோடு இருப்பதும், கொள்கையைப் பின்பற்ற கூடியவர்களாய் இருப்பதும், நீங்கள் மட்டுமல்ல, உங்கள் குடும்பம், உங்களுடைய துணைவியார் மீனா போன்றவர்கள் அத்தனை பேருக்கும் இந்த உணர்வு வருவதற்குக் காரணமே, பெரியாருடைய கொள்கை. அது ஒருபால் பட்டது அல்ல; எல்லா மக்களுக்குமானது – மானுடத்தினுடைய எல்லைக்கு விரிவடையக் கூடியது பெரியாரின் வெற்றி! அதுவரையில் அவர் பிரச்சாரம், நடந்து கொண்டே இருக்கும். மூடநம்பிக்கைகளும் ஒரு பக்கம் வளர்ந்து கொண்டே இருக்கும். பயிர் வளர்க்கும் போது, களையும் வளரும்; களை எடுத்தலும் மிக முக்கியம். களைகள் வளர்கின்றன என்பதற்காகப் பயிரை அழித்து விட முடியாது. பயிர் நிச்சயமாக அதனுடைய விளைவுகளைத் தரும்; நல்ல அறுவடை தரும்; தருகிறது என்பதற்கு அடையாளம்!
நன்றி!
1953–1954 ஆம் ஆண்டு மலேசிய பயணத்தில் பெயருக்குப் ஜாதிப்பட்டம் இல்லை!
ஆய்வாளர் சுபாஷினி: இதில், ஒரு பாயிண்ட் சொல்கிறேன். அதாவது 1929 பயணம் இருக்கிறது இல்லையா, அதில் அவர் சந்திக்கின்ற அத்தனைப் பேருடைய ஜாதிப் பெயர்களையும் பிராக்கெட்டில் போட்டிருக்கிறார் ஆசிரியர். இதையே ஒரு ஒப்பீட்டு ஆய்வாகச் செய்யலாம். ஆனால், 1953–1954 ஆம் ஆண்டு சென்ற பயணத்தில் மலேசியால் இருந்த ஒருத்தருடைய பெயரோடும் அந்த ஜாதி இல்லை. அப்படியென்றால், இடைப்பட்ட 25 ஆண்டுகளில், எப்படி ஜாதிப் பெயர்கள் மலேசியாவில், அதாவது இந்தியாவில் எப்படி அதைப் போக்கவேண்டும் என்கிற முயற்சிகள் நடந்ததோ, அதுவும் மலேசியாவில் பிரதிபலிப்பாகி இருப்பது அப்படியே தெளிவாக நமக்குத் தெரிகிறது. இதுவே ஒரு நல்ல உதாரணமாக நாம் சொல்லலாம்.
அந்தக் காலகட்டத்தில் இருந்து அந்த ஜாதி பெயர்களை நீக்குவது அவசியம் என்பது அப்பொழுதே வந்துவிட்டது என்பதை இந்த நூலிலேயே பார்க்க முடிகிறது.
தமிழர் தலைவர்: பெரிய வெற்றி அது. சுருக்கமாகச் சொல்கிறேன், நேரம் இல்லாததினால்.
தமிழ்நாட்டில் மீண்டும் இந்த ஜாதியை வைத்துக்கொண்டு பதவிக்குப் போகலாமா? என்பதற்கு ஒரு வாக்கு வங்கி அரசியல் நடந்து கொண்டிருக்கிறது. வெளிப்படையாக ஜாதிச் சங்கத்தை நடத்துகிறார்கள். அதற்கு அரசியல் வர்ணத்தைப் பூசி விட்டிருக்கிறார்கள் என்று சொன்னாலும், அந்தத் தலைவர்கள் கூட எந்த ஜாதியைப் பற்றி அவர்கள் வெறியோடு இருக்கி றார்களோ, அந்த ஜாதித் தலைவர்கள் பெயருக்குப் பின்னாலே பின்னோட்டில் ஜாதி இல்லை. அவர்களே வெட்கப்படுகிறார்கள்.
ஜாதி ஒழிப்பு என்பதில் இரண்டு வகை உண்டு!
எனவேதான், இந்த ஜாதி ஒழிப்பு என்பதில் இரண்டு வகை உண்டு. ஒன்று, கொசுவை அழித்தால்தான் மலேரியா காய்ச்சல் போகும் என்று அந்த எண்ணத்தை நினைக்கிறோம். ஆனால், கொசு உற்பத்தியாகக் கூடிய இடத்துக்கே போய் அங்கே மருந்தடிக்க வேண்டும் என்பது பெரியாருடைய முறை.
சில பேர், கொசுவத்தி விற்பனை செய்கிறார்கள், ‘‘இதைக் கொளுத்தி வையுங்கள், கொசு போய்விடும்’’ என்று சொல்வார்கள். ஆனால், உண்மையாகக் கொசுவை விரட்டும் நோக்கில் அவர்கள் செய்யவில்லை; வியா பாரத்திற்காகச் செய்கிறார்கள். ஏனென்று கேட்டால், கொசு ஒழிந்துவிட்டால், அவர்களுக்கு வியாபாரம் கிடையாது. அதனால், எவ்வளவுக்கு கொசு பெருகிறதோ அவ்வளவுக்கு கொசுவத்தி வியாபாரம் இருக்கும். அது மாதிரி, ஜாதி ஒழிப்பில் இரண்டு வகையானவர்கள் இருக்கிறார்கள். அதையும் தாண்டித்தான், இன்றைக்கு அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் உள்பட, ‘எந்த இடத்தில் உள்ளே நுழைய முடியாது இருந்ததோ அந்த இடத்தில்’ பெரியார் தொடங்கினார்; அது மிகப்பெரிய அளவுக்கு வெற்றியாக பெற்றது ‘திராவிட மாடல்’ ஆட்சியில்.
மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆட்சிக்கு வந்தவுடனே நிறைவேற்றினார்!
எங்களுக்கெல்லாம் உள்ளபடியே கவலை இருந்தது. பெரியார் தொடங்கிய கடைசிப் போராட்டம்; நாம் அதை செய்யவில்லையானால், என்னாவது என்று நினைத்த நேரத்திலே, கலைஞர் அதற்காகச் சட்டப் போராட்டத்தினை 50 ஆண்டுகள் நடத்தி வெற்றி பெற்றார். மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆட்சிக்கு வந்த உடனே அதை நிறைவேற்றினார்.
கருவறையில் நுழைந்த ஜாதிப் பாம்பு கூட இன்றைக்குக் கொல்லப்பட்டுவிட்டது!
சாதாரணமாக அது பதவி உற்சாகம், அப்பாயின்ட் மெண்ட் அல்ல; மாறாக முழுக்க முழுக்க அதனுடைய அடிப்படை டிரான்ஸ்பர்மேஷன் – சமுதாய மாற்றம். பெண்கள் உள்ளே போகக்கூடாது என்று சொன்னார்கள். பெண்கள் ஓதுவார்களாக உள்ளே போயிருக்கிறார்கள். அதே மாதிரி ஆண்களில் ஒடுக்கப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்தவர்கள் போயிருக்கிறார்கள். அங்கே தமிழ் உள்ளே போகக்கூடாது, சூத்திர ஜாதி போகக்கூடாது என்று உயர்ஜாதிக்காரர்கள் சொன்ன நேரத்தில், அத்தனையையும் இன்றைக்கு மாற்றி, அனைத்து ஜாதி யினரும் அர்ச்சகர் என்று சொல்லும்போது, கருவறையில் நுழைந்த அந்த ஜாதிப் பாம்பு கூட இன்றைக்குக் கொல்லப்பட்டுவிட்டது என்று சொல்லக்கூடிய நிலை. இது நாளைக்கு வளரும். நடுநடுவிலே அந்தச் சோதனைகள் எல்லாம் வரும். ஏனென்று கேட்டால், உடம்பு என்று இருந்தால், நோய் வரத்தான் செய்யும். அந்த நோய்களுக்கு அவ்வப்பொழுது புதிய மருந்துகளைக் கண்டுபிடிக்கத்தான் வேண்டும். அந்த வகையில் வெற்றி!
(தொடரும்)
