மதுரை, ஜூலை 26- பழனி கோயில் ரூ.100 கோடி நில மோசடி விவகாரம் தொடர் பான விசாரணையை ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி கண்காணிக்கும்படி உத்தரவிடக் கோரி மதுரை உயர்நீதி மன்றத்தில் புதிய வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வருகிறது.
ரூ.100 கோடி நிலமோசடி
திண்டுக்கல் மாவட்டம் பழநி பகுதியைச் சேர்ந்த அ.தி.மு.க. முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வேணுகோபால் சேனாதிபதி, மதுரை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அவசர மனுவில் கூறியிருந்ததாவது:-
2004ஆம் ஆண்டில் இருந்து 2006 வரையிலான காலக்கட்டத்தில் பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் அறங்காவலராக பொறுப்பு வகித்தேன். 2011ஆம் ஆண்டு முதல் 2016 வரை பழநி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றி உள்ளேன்.
பழநி மலை அடிவாரத்தில் உள்ள 1.40 ஏக்கர் நிலத்தை வெள்ளத்துரை, சேதுபதி ஆகியோர் மோசடியாக பத்திரப்பதிவு செய்து இருக்கின்றனர். பழனி முருகன் கோயில் கட்டுப்பாட்டில் உள்ள இந்த நிலத்தின் மதிப்பு ரூ.100 கோடி என கூறப்படுகிறது. அவ்வாறு இருக்கும்போது நிலத்தின் மதிப்பை பல மடங்கு குறைத்து காட்டி ரூ.2 கோடிக்கு கிரையம் செய்து மோசடி நடந்துள்ளது.
ஓய்வு பெற்ற நீதிபதி
அதேபோல பத்திரப்பதிவு செய்த நாளில் சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டனை பொறுப்பு அதிகாரியாக நியமித்த மாவட்ட பதிவாளரை இந்த நிலமோசடி வழக்கில் இதுவரை சேர்க்கவில்லை.
இந்த விவகாரம் தொடர்பாக பழநி மலை அடிவாரம் காவல் துறையினர் பதிவு செய்த வழக்கும், சி.பி.சி.அய்.டி. காவல் துறையினர் பதிவு செய்த வழக்கையும் சி.பி.அய். விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும். அதுமல்லாமல் இந்த விசாரணையை கண்காணிக்க ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதியை நியமிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறி இருந்தார்.
விரைவில் விசாரணை
இந்த வழக்கை அவசர வழக்காக எடுத்து விசாரிக்க வேண்டும் என்று நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன், சக்திவேல் ஆகியோர் முன்பு வக்கீல் மாரீஸ்குமார் 24.7.2026 அன்று முறையிட்டார்.
அதற்கு நீதிபதிகள், இந்த வழக்கை முறையாக தாக்கல் செய்யுங்கள். வழக்கமான விசாரணை பட்டியலில் வரும் போது விசாரிக்கப்படும் என அறிவுறுத்தினர். எனவே இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என தெரிகிறது.
