ஆசிரியர் விடையளிக்கிறார்

4 Min Read

கேள்வி: பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய அரசு, விண்வெளித் துறையை தனியார் நிறுவனங்களுக்கு திறந்து விட்டதால், அந்த நிறுவனங்கள் அளிக்கும் பெரும் ஊதியத் தொகையை குறிவைத்து அண்மைக்காலமாக இஸ்ரோ அறிவியலாளர்கள் 100க்கும் மேற்பட்டவர்கள் பதவி விலகி இருப்பதும், அதில் சிலர் தனியார் விண்வெளித் துறையில் பணியில் சேர்ந்து இருப்பதும் குறித்து…?

– மன்னை சித்து, மன்னார்குடி- 1

ஆசிரியர் விடையளிக்கிறார், ஞாயிறு மலர்

பதில்: தவறான கொள்கை – பாதுகாப்புக் (இராணுவ) கண்ணோட்டத்தில் நாட்டின் இறையாண்மைக் கொள்கை பாதிப்புக் கண்டு நாட்டின் மிக மிக முக்கியமான விண்வெளித் துறையைத் தனியாருக்குத் திறந்து விட்டதன் மிக மோசமான விளைவு இது;  முன் யோசனையற்ற முடிவின் தீய விளைவு! அரசுத் துறையாக இனி பொதுத் துறையே இருக்காது. பன்னாட்டு முதலாளிகள் கொழுப்பதோடு, தன்னாடு பற்றிய கவலையற்ற தன்மையைத் தவிர்க்க இயலாத விளைவே!

“குதிரை போன பிறகு இலாயத்தை இழுத்து மூடச் சொல்வது போல்”, அதிகாரிகளின் விலகலைத் தடுப்பதும் மற்றொரு உரிமைப் பிரச்சினையில் அவர்களின் வாய்ப்பைப் பறிப்பதும் ஆகும்.

 

கேள்வி: 2006ஆம் ஆண்டு முத்தமிழறிஞர் கலைஞர் தலைமையிலான தனித்த திமுக அரசை, ‘மைனாரிட்டி அரசு’ என்று கூப்பாடு போட்டவர்கள், தற்போது த.வெ.க., காங்கிரஸ், கம்யூனிஸ்ட், வி.சி‌.க. இணைந்து நடத்தும் ஆட்சியை ‘மைனாரிட்டி’ அரசு அல்லது ‘கூட்டணி ஆட்சி’ என்று சொல்ல முன் வராதது ஏன்?

ஆசிரியர் விடையளிக்கிறார், ஞாயிறு மலர்

– அன்புமணி சுந்தரராசன். மதுரை 625020

பதில்: “மாமியார் உடைத்தால் மண்குடம் – மருமகள் உடைத்தால் பொன்குடம்” – புரியவில்லையா உங்களுக்கு!

 

கேள்வி: வாய்ப்பு வசதி உள்ளவர்கள் பயணிக்கும் குளிர் சாதன வசதியுள்ள பெட்டிகளிலிருந்து கடந்த 5 ஆண்டுகளில்
ரூ.1.26 கோடி மதிப்புள்ள போர்வைகள், தலை யணைகள், துண்டுகள், படுக்கை விரிப்புகள் உள்ளிட்டவை திருடு போயிருப்பதாகவும், இந்த ஆண்டு மே மாதம் வரை மட்டும், ரூ.2.31 லட்சம் அளவிற்குத் திருட்டு நடைபெற்று இருப்பதாகவும் ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளதே?

– மன்னை சித்து, மன்னார்குடி-1.

ஆசிரியர் விடையளிக்கிறார், ஞாயிறு மலர்

பதில்: ரயில்வே – லாலு பிரசாத் அமைச்சராக இருந்தபோது எப்படி நடந்தது!

இப்போது இப்படி ஒரு பொதுச் சொத்துக்கு ஆபத்து, Ist AC – கழிப்பறைகளில் கூட தகரக் குவளைக்குச் சங்கிலி கட்டியுள்ளது. இந்தப் பொருள்களுக்கு… தகுதி, திறமையோடு ‘புல்லட்’ ரயில் விடும் வந்தே பாரத்து’கள்தான் பதில் அளிக்க வேண்டும் இக்கேள்விக்கு!

 

கேள்வி: ஈரான் – அமெரிக்க, இஸ்ரேல் போர் எப்பொழுது முடிவுக்கு வரும்?

– நந்தினி, வில்லிவாக்கம்

பதில்: மதவெறி மாய்ந்து, டிரம்பின் தொடர் மவுனமும் கலைந்தால் முடிவுக்கு வரலாம்!

 

கேள்வி: ‘நீட்’ தேர்வுக்கு எதிர்ப்பு, ஒன்றிய கல்வி அமைச்சர் பதவி விலகக் கோரி டில்லியில் போராட்டம் நடத்திவரும் சிஜேபி நடவடிக்கை சரியானதா?

– கோ.திலீபன், காஞ்சிபுரம்

பதில்: ‘நீட்’ தேர்வே ஒழிக்கப்பட வேண்டும். தேர்வு நடத்தும் உரிமையை அரசியலமைப்புச் சட்டப்படி பெற்றில்லாதபோது, உச்ச நீதிமன்றத்தின் ‘ஆசி’யோடு தேர்வு நடைபெறுவது – ஆளை மாற்றினால் மட்டும் தீர்வாகாது. ஆட்சியின் முடிவே மாற வேண்டும். அதுதான் சரியான பரிகாரம்.

 

கேள்வி: ‘நீட்’ எதிர்ப்பை இந்தியாவில் முதன்முதலில் தொடங்கியது திராவிடர் கழகம்தான். ஆனாலும், இன்னும் வடமாநிலங்களில் நீட் எதிர்ப்பு பெரிய அளவில் புரிந்து கொள்ளப்படவில்லை. ஏன் தமிழ்நாட்டிலேயே கூட இன்றும் ஆதரவாகத்தான் பேசிக் கொண்டிருக்கிறார்கள். இந்த நிலை மாறுமா?

– இரா.தமிழ்ச்செல்வன், முகப்பேர், சென்னை

பதில்: இந்தியாவின் பல மாநிலங்களிலும் குறிப்பாகக் காஷ்மீர் முதல் பல வடக்கு, கிழக்கு மாநிலங்களில் புரிதல் ஏற்பட்டு வருகிறது. முன்பை விட இப்போது அது அதிகரித்தால் நல்லது. முந்தைய மண்டல் கமிஷன் பரிந்துரையில் கூட இதே நிலைதான். பிறகுதான், தமிழ்நாடு வழியில் உ.பி., பீகார் கூட வரிசையாய் வந்து ஆதரவளித்த நிலையில் வென்றோம். நம்பிக்கையோடு இருப்போம். அதற்கிடையில் எத்தனைத் தற்கொலைகள், எங்கள் இளந்தளிர்களை நினைத்தால் இரத்தக் கண்ணீர் வருகிறதே!

 

கேள்வி: டில்லியில் இப்போது சி.ஜே.பி. கட்சியினர் நடத்தும் போராட்டங்களினால், நீட் தேர்வு முற்றிலும் ஒழிக்கப்படுமா?

– மணி, பெரம்பூர்

பதில்: நல்ல தொடக்கம். நிச்சயம் பலன் உண்டு. முன்பு 1 ஆண்டு விவசாயிகள் போராட்டத்தால் மூன்று சட்டங்களை திரும்பப் பெற வைத்தது மறந்து விட்டதா? நியாயங்கள் காலதாமதமானாலும் வெற்றி பெற்றே தீரும்!

 

கேள்வி: “திராவிட இயக்கமான தி.மு.க. – அ.தி.மு.க.வை அடியோடு விஜய் சாய்த்து விட்டார்” என்று தங்களால் ‘திராவிட இயக்கப் போர்வாள்’ என்று புகழப்பட்ட வைகோவின் கருத்துப் பற்றி உங்கள் பதில்?

– மாவீரன், மதுரை – 625010.

பதில்: ‘போர்வாள்’ நிலை இப்படியா? என்ற வேதனையும் வெட்கமும் நம்மைத் தலைக்கவிழ வைக்கிறது!

 

கேள்வி: ‘நீட்’ தேர்விற்கு எதிர்ப்புத் தெரிவித்து, மதுரை சோழவந்தானில் ரயில் நிலையத்தில் ஹிந்தி எழுத்துகள் அழிக்கப்பட்டுள்ளன. மீண்டும் ஹிந்தி எதிர்ப்புப் போராட்டம் வெடிக்குமா?

– சங்கத்தமிழன், காஞ்சி

பதில்: ‘ஹிந்தித் திணிப்பை என்றும் எதிர்ப்போம்’ என்பதே நமது நிரந்தர நிலைப்பாடு. அதன் வெளிப்பாடுதான் இது. தார் சட்டி, பிரஷ் – நிரந்தரமாக இருக்கும் தமிழ்நாட்டில்! ஹிந்தி வெறியர்கள் உணர வேண்டும்.

 

கேள்வி: “அமைச்சர்களை விமர்சிப்பது குற்றமாகாது” என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது குறித்துத் தங்களின் கருத்து?

– மணி, செங்கல்பட்டு

பதில்: ஜனநாயகத்தில் அது ஒரு கூறு! ‘சர்வசக்தி’ உள்ளதாகக் கூறப்படும் ‘கடவுள்’கள் கூட விமர்சனத்திற்கு உள்ளாக்கப்படுகிற நிலையில் அமைச்சர்களை விமர்சிப்பது தவறா? – அவதூறு என்றால் அதற்குரிய தக்க ஆதாரங்கள் – முறையான விசாரணைகள் என்பதற்கும் பிறகு சட்ட நடவடிக்கைகள் தொடரப்படவும் சட்டத்தில் இடம் உள்ளதே! திடீர் சிறை  – கைது தேவையற்றவை!

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *