புதுடில்லி, ஜூலை 24 ‘நீட்’ தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பாக தற்போது உயர் கல்வித்துறை செயலாளர் வினீத் ஜோஷி பணியிட மாற்றம் செய்யப்பட்டு நரேஷ் பால் கங்வார் புதிய செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
‘நீட்’ வினாத்தாள் கசிவு
‘நீட்’ வினாத்தாள் முறைகேடுகளுக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் தீவிரமடைந்து வரும் சூழலில், பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் காட்சிப் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், வினாத்தாள் கசிவு என்பது ஒரு சாதாரணப் பிரச்னை அல்ல, அது லட்சக்கணக்கான மாணவர்களுக்கு வேதனையளிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். வினாத்தாள் கசிவுகளுக்கு எதிராகப் பல முக்கிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, குற்ற வாளிகள் சிறையில் அடைக்கப்பட் டுள்ளதாகவும், தேர்வர்கள் ஒரு ஆண்டை வீணாக்காமல் இருப்பதை உறுதி செய்வதே அரசின் மிக முக்கிய மான நோக்கமாக இருந்ததாகவும் விளக்கமளித்துள்ளார்.
வினாத்தாள் கசிவு வழக்குகளுக்கான விரைவு நீதிமன்றம் மற்றும் கடுமையான தண்டனை வழங்க வகைசெய்யும் விதிகள் பற்றி இன்று அமைச்சரவையில் விவாதித்து இறுதி முடிவெடுக்கப்படும் என்றும் நடப்பு கூட்டத்தொடரிலேயே இதுதொடர்பான மசோதா தாக்கல் செய்யப்படும் என்றும் பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார். 22 லட்சம் மாணவர்கள் மிகக் குறுகிய காலத்தில் நீட் மறு தேர்வு எழுதுவதை உறுதிசெய்ய ஒன்றிய அரசு தன்னால் இயன்ற அனைத்தையும் செய்ததாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, இளைஞர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதைக் கண்டித்தும், ஒன்றிய கல்வி அமைச்சரின் பதவிவிலகலை வலியுறுத்தியும் இன்று நாடு தழுவிய போராட்டத்துக்கு கரப்பான் பூச்சி ஜனதா கட்சி அமைப்பு அழைப்பு விடுத்துள்ள நிலையில், அந்த அமைப்பின் பிரதிநிதிகளுடன் ஒன்றிய அரசு இன்று உயர் மட்ட பேச்சுவார்த்தை நடத்த உள்ளது.
இந்நிலையில், பிரதமர் மோடி உறுதியளித்தபடி, பொதுத் தேர்வுகளில் வினாத்தாள் கசிவு உள்ளிட்ட முறைகேடுகளை விசாரிப்பதற்காக, டில்லி உயர் நீதிமன்றம் விரைவு நீதி மன்றத்தை நியமித்து உத்தரவிட் டுள்ளது. இந்த நீதிமன்றத்தின் நீதிபதியாக அனு குரோவர் பாலிகா நியமிக்கப் பட்டுள்ளார். மேலும், வினாத்தாள் கசிவு விவகாரத்தில் ஒன்றிய உயர் கல்வித்துறை செயலாளராக இருந்த வினீத் ஜோசியை பணியிட மாற்றம் செய்து ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது. புதிய உயர் கல்வித்துறை செயலாளராக நரேஷ் பால் கங்வார் நியமிக்கப்பட்டுள்ளார்.
