‘நீட்’ பிரச்சினை பிரதமர் வாய்மூடி இருப்பது ஏன்? 20ஆம் தேதி போராட்டம் வெறும் முன்னோட்டமே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி எச்சரிக்கை

புதுடில்லி, ஜூலை 23 ‘பிரதமர் மோடி மவுனம் காப்பது ஏன்? 20-ஆம் தேதி போராட்டம் வெறும் முன்னோட்டம் மட்டுமே’ என ஒன்றிய அரசுக்கு கரப்பான் பூச்சி ஜனதா கட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.

கரப்பான் பூச்சி ஜனதா கட்சி போராட்டம்

‘நீட்’ வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தி டில்லியில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் நடத்தி வரும் போராட்டம் நேற்று 33-ஆவது நாளை எட்டியது. காவல்துறையினர் தடியடி நடத்தியபிறகும் போராட்டம் நடைபெறும் ஜந்தர் மந்த ரில் கூட்டம் குறையவில்லை. பல்வேறு அரசியல் கட்சியினர் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.இந்த போராட்டத்திற்கு ஆதரவாக சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் கடந்த 25 நாட்களாக தொடர் பட்டினிப் போராட்டத்தில்  இருந்து வருகிறார். டில்லி சப்தர்ஜங் மருத்துவமனையில் இருந்து மேதாந்தா மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட நிலையிலும் அவர் போராட்டத்தை தொடர்ந்து வருகிறார்.

இந்நிலையில், வாங்சுக்கிற்கு கரப்பான் பூச்சி ஜனதா கட்சி ஒரு கடிதம் எழுதியுள்ளது. அந்த கடிதத்தில், “உங்களின் தியாகம் ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு பெரும் உத்வேகத்தை அளித்துள்ளது. போராட்டத்தை விட உங்கள் உடல்நலன்தான் எங்களுக்கு முக்கியம். எனவே பட்டினிப் போராட்டத்தை கைவிட வேண்டும்” என்று அக்கட்சியினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.இதுகுறித்து அக்கட்சியின் நிறுவன தலைவர் அபிஜித் தீப்கே தனது ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “சோனம் வாங்சுக் தனது பட்டினிப் போராட்டத்தை கைவிட வேண்டும். இந்த நாட்டிற்கு அவர் தேவை. அவரது உயிர் மிகவும் மதிப்புமிக்கது. ஜந்தர் மந்தரில் அமைதியான முறையில் போராட்டம் தொடரும்” என்று தெரிவித்துள்ளார்.

அபிஜித் தீப்கே தனது மற்றொரு பதிவில், “வாங்சுக்கின் பட்டினிப் போராட்டம் 25-வது நாளை எட்டியுள்ள நிலையிலும் பிரதமர் நரேந்திர மோடி இன்னும் மவுனம் கலைக்காதது ஏன்? அரசியல் என்பது தேர்தல் பேரணிகளை நடத்துவதும், தேர்தலில் வெற்றி பெறுவதும் மட்டுமே அல்ல. மக்களுக்கு பதில் சொல்லும் கடமை அரசாங்கத்திற்கு இருக்கிறது. போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது காவல்துறையினர் எதற்காக இவ்வளவு கொடூரமான முறையில் நடந்து கொண்டனர்” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

இதற்கிடையே கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் அசுதோஷ் ரங்கா பத்திரிகையாளர்களிடம் கூறியதாவது:-

இது இந்தியாவின் சுதந்திரத்துக்கு பிந்தைய வரலாற்றில் மிகப்பெரிய இயக்கம். இதை நாங்கள் மிகத் தெளிவாக தெரிவித்துள்ளோம். கடந்த 20-ஆம் தேதி நடந்த போராட்டம் ஒரு முன்னோட்டம் மட்டுமே. அரசு எங்கள் கோரிக்கைக்கு ஒப்புக்கொள்ளவில்லை என்றால், இன்னும் லட்சக்கணக்கானோர் டில்லிக்கு வருவார்கள், அப்போது நாங்கள் பின்வாங்கி அமைதியாக இருக்க மாட்டோம். அரசு உண்மையிலேயே சுதாரித்துக் கொள்ள வேண்டும். இல்லையெனில் இந்த நாட்டின் இளைஞர்கள் அவர்களை மிக மோசமாக வீழ்த்திவிடுவார்கள்.எங்கள் போராட்டத்துக்கு சிறைவாசம் என்பது ஒரு சிறிய விலையே. இவ்வாறு அவர் கூறினார்.

பிரதமர் மோடி

வினாத்தாள் கசிவு விவகாரத்தை விசாரிக்க விரைவு நீதிமன்றம் அமைக்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள ‘எக்ஸ்’ தள பதிவில்,

* இளைஞர் நலன் மற்றும் எதிர்காலத்தைவிட முக்கியமானது எதுவும் இல்லை.

* மாணவர்களின் நலனை பாதுகாக்க தொடர் நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் விரைவு நீதிமன்றம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

* தேர்வுத்தாள் கசிவில் தொடர்புடையோருக்கு கடும் தண்டனை கிடைப்பதை உறுதி செய்ய விரைவு நீதிமன்றம் அமைக்கப்படும்.

* வினாத்தாள் கசிவு விவகாரத்தில் தேவையான அனைத்து நடவடிக்கை மேற்கொள்ளவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

* வினாத்தாள் கசிவு விவகாரத்தில் குற்றமிழைத்த அனைவரும் தண்டிக்கப்படுவர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கண்டிப்பாக பதவி விலக வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *