தர்மேந்திர பிரதான் தாமாக முன்வந்து ஏன் பதவி விலகக் கூடாது?
ப.சிதம்பரம் கேள்வி
புதுடில்லி, ஜூலை 23 தர்மேந்திர பிரதான் தாமாக முன்வந்து ஏன் பதவி விலகக் கூடாது? என்று மேனாள் ஒன்றிய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் பேச்சுவார்த்தைக்கு இட மில்லாத கோரிக்கையாக முன்வைத்துள்ளதாக காங்கி ரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்ட பதிவில், ‘‘ஆயிரக்கணக்கான மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் சாலைகளில் போராட்டத்தில் ஈடு பட்டுள்ளனர். மாணவர்களுக்கும் போராட்டக்காரர்க ளுக்கும் பெற்றோர்களும் பொதுமக்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர். பலர் துன்பங்களையும் காயங்க ளையும் தாங்கத் தயாராக உள்ளனர்; மேலும் பலரும் தயாராக இருக்கின்றனர்.
இந்த விவகாரத்தை முன்வைத்து எதிர்க்கட்சிகள் நாடாளுமன்ற நடவடிக்கைகளையும் முடக்கியுள்ளன. பிரதமர் நரேந்திர மோடி, கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானை பதவி விலகுமாறு கேட்கத் தயாராக இல்லை. இத்தகைய கடினமான சூழ்நிலையில், நிலைமையை சுமுகப்படுத்தும் வகையில் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தாமாக முன்வந்து தன்னார்வமாக பதவி விலகக் கூடாதா?’’ என்று ப. சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.
இரண்டில் ஒன்று நாடு எதிர்பார்க்கிறது!
டில்லி போராட்டம் குறித்து கவிப்பேரரசு வைரமுத்து கருத்து
சென்னை, ஜூலை 23 ‘நீட்’ வினாத்தாள் கசிவு விவ காரம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாகவும், ‘நீட்’ தேர்வு தோல்வி காரண மாக மாணவர்கள் தற்கொலை செய்தது போன்றவற்றுக்கு பொறுப்பேற்று ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை வலி யுறுத்தியும் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் டில்லி ஜந்தர் மந்தரில் கடந்த மாதம் 20 ஆம்தேதி முதல் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
டில்லி இளைஞர்கள் போராட்டம் குறித்து கவிஞர் வைரமுத்து வெளியிட்டுள்ள ‘எக்ஸ்’ தளப்பதிவில் கூறப்பட்டிருப்பதாவது:-
சிறுதுளிகள் சேர்ந்துவிட்டன; டில்லியிலே சிறு துளியின் அடுத்த நிலை என்ன என்பதைப் பழமொழி அறிந்தவர்கள் அறிவார்கள். மழை வெள்ளத்திலும் வலியது மனித வெள்ளம். வங்கதேசமும், நேபாள மும், இலங்கையும் அந்த வெள்ளத்தில் மூழ்கிய கதை மூத்தவர்கள் அறியாததில்லை.
ஆர்ப்பாட்டம் அடங்கவும், அமைச்சர் பதவி நிலைக்கவும் ஒரே தீர்வு நீட் தேர்வின் நிரந்தர நீக்கம்தான். அரசுக்கு அது பின்னடைவாகிவிடும் என்று பேசப்பட்டால் சமரசத் தீர்வு ஒன்றும் இருக்கிறது. அதுதான் ‘நீட்’ தேர்வை மாநிலப் பட்டியலுக்கு மாற்றுவது. இரண்டில் ஒன்று நாடு எதிர்பார்க்கிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
