சென்னை, ஜூலை 22- போக்சோ வழக்கில், பாதிக்கப்பட்ட சிறுமியை மீண்டும், மீண்டும் அழைத்து தனக்கு நேர்ந்ததைச் சொல்லும்படி வற்புறுத்தக் கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் ஆடு மேய்க்க சென்ற 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, ரமேஷ் என்பவருக்கு எதிராக போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது.
இந்த வழக்கு விழுப்புரம் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள நிலையில், சாட்சியம் அளித்த பாதிக்கப்பட்ட சிறுமியை குறுக்கு விசாரணை செய்வதற்காக மீண்டும் ஆஜர்படுத்த கோரி ரமேஷ் தரப்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விழுப்புரம் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தது.
இந்த உத்தரவை எதிர்த்து ரமேஷ் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப் பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி பரத சக்கரவர்த்தி, “பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கவே போக்சோ சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.
கடுமையான தண்டனைகள் விதிக்க வழி வகை செய்யும் இந்த சட்டத்தை அமல்படுத்தும்போது, பாதிக்கப்பட்ட குழந்தைகள் மீண்டும் மனஅழுத்தத்திற்கு ஆளாகாமல் இருக்கும் வகையில் அமல்படுத்த வேண்டும்” என அறிவுறுத்தியுள்ளார்.
மேலும், “மீண்டும், மீண்டும் நீதிமன்றத்திற்கு அழைத்து தனக்கு நேர்ந்தததை சொல்லும்படி குழந்தை களை வற்புறுத்த முடியாது” என கூறி அந்த மனுவை அவர் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
தொடர்ந்து, “தனக்கு நேர்ந்த துயரத்தை பெற்றோர், குழந்தைகள் நல குழு, மருத்துவர்கள், காவல் துறையினர் மற்றும் நீதிபதி யிடம் தெரிவிப்பதன் மூலம் அவர்கள் மேலும் தாங்க முடியாத மனஅழுத்தத்துக்கு ஆளாகுவ தாகவும், சிறுமிகளை மீண்டும், மீண்டும் நீதிமன்றத்திற்கு வர வழைப்பதன் மூலம் அந்த சிறுமி இரண்டாவது முறையாகவும் துன்புறுத்தப்படுகிறார்” என்றும் நீதிபதி கருத்து தெரிவித்திருந்தார்.
அத்துடன், “பாலியல் துன்புறுத் தல்களுக்கு ஆளாக்கப்படும்போது, குழந்தைகள் அனுபவிக்கும் மன அழுத்தங்களை, நம் சமூகத்தில் பலர் புரிந்து கொள்ளவில்லை எனத் தெரிவித்த நீதிபதி, நியாயமான விசாரணை என்ற பெயரில் குழந்தை களின் உரிமைகளை மீற அனுமதிக்க முடியாது” எனவும் கூறினார்.
