திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் கடந்த 2025 அக்டோபர் முதலே, ”இதுதான் ஆர்.எஸ்.எஸ் – பாஜக அரசு! இதுதான் திராவிடம் – திராவிட மாடல் அரசு!” என்ற பெயரில் முதல் கட்டப் பிரச்சாரத்தைத் தமிழ்நாடு முழுவதும் தொடங்கி முடித்துவிட்டார். கூட்டணிக் கணக்குகள் முடியவோ – சீட்டு பங்கீடு முடியவோ அவர் காத்திருக்கவில்லை! காரணம், திராவிட முன்னேற்றக் கழகத்தையும், அதன் தலைவர் முதலமைச்சர் சமூகநீதிக்கான சரித்திர நாயகர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினையும் ஆட்சியில் அமர்த்த வேண்டும் – தமிழ்நாடு தப்பிக்க, தழைக்க! எனவே, வேறெதற்காகக் காத்திருக்க வேண்டும்? தமிழ்நாட்டின் எல்லா மாவட்டங்களுக்கும் சுற்றி வந்துவிட்டார்.
அடுத்த கட்டத்தை, ஏப்ரல் 6 ஆம் தேதி திருநெல்வேலியில் தொடங்கி, ஒவ்வொரு நாளும் இரண்டு, மூன்று கூட்டங்களில் தொடர்ந்து உரையாற்றுகிறார். ஆயிரக்கணக்கில் மக்கள் கூடுகிறார்கள். வேட்பாளர்கள் வந்து வரவேற்று, “ஆசிரியரின் மாணவர்கள் நாங்கள்; அவர் எங்களுக்கு வந்து பிரச்சாரம் செய்வது எங்களுக்குப் பெருமை” என்று புளகாங்கிதம் அடைகிறார்கள். செல்லும் வழியெங்கும் மக்கள் கூடி நின்று கையசைத்தும், வணக்கம் தெரிவித்தும் மகிழ்கிறார்கள்.
கூட்டத்திற்குச் சென்று சேர்ந்ததும், உரையை முடித்துத் திரும்பும்போதும், திராவிட முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட கூட்டணியில் உள்ள அனைத்துக் கட்சித் தலைவர்களும் பொறுப்பாளர்களும் ஆசிரியருக்குப் பொன்னாடை, பயனாடைகள் அணிவித்தும், புத்தகங்கள் வழங்கியும், “அய்யா, நீங்க நெடுநாள் வாழ்ந்து எங்களுக்கு வழிகாட்ட வேண்டும்” என்று வாழ்த்துகிறார்கள். பொதுமக்களும், குறிப்பாகப் பெண்களும் கைகுலுக்கியும், ஒளிப்படம் எடுத்துக் கொண்டும் குதூகலிக்கிறார்கள். ஒவ்வொரு கூட்டத்திலும் உள் நுழைந்து, வெளிவருவதே பெரும்பாடு என்னும் நிலையில் தான் அடுத்த கூட்டங்களுக்கு விரைகிறது வாகனம்!

93 வயதில் ஒருவர் நேரில் வந்து முக்கால் மணிநேரம் பல்வேறு செய்திகளை முன்வைத்து நின்று கொண்டே உரையாற்றுகிறாரே என்று வியக்கிறார்கள். “எங்களுக்கென ஓட்டுக் கேட்காத கட்சி நாங்கள்; கூட்டணியில் ஓர் இடம் ஒதுக்குங்கள் என்று ஒரு துளியும் கேட்காதவர்கள் நாங்கள்! எங்கள் தோழர்கள் தேர்தலில் நிற்க வேண்டும் என்று விரும்பினால், அவர்களைக் கட்சியை விட்டு நீக்கக் கூடிய இயக்கம், ஆனால், நாங்கள் ஏன் உங்களைத் தேடி வருகிறோம்? எங்களுக்காக அல்ல; முதலமைச்சருக்காக அல்ல; இந்த வேட்பாளருக்காக அல்ல! உங்கள் வாழ்க்கைக்காக, உங்கள் வருங்காலத் தலைமுறையின் எதிர்காலத்துக்காக! மகளிர் முன்னேற்றத்துக்காக!” என்று அவர் சொல்லும்போது, வரலாற்றின் வழிநின்று மக்கள் அதன் உண்மைத் தன்மையை உறுதி செய்து கொள்கிறார்கள்.
மகளிரின் உற்சாகம் அவர்களின் கைதட்டலில், சிரிப்பொலியில், ஆமோதிப்பில், ஆரவாரத்தில் எதிரொலிக்கிறது. ஜாதி, மத வேறுபாடற்று எல்லா இடங்களிலும் மகளிர் திரள்கிறார்கள். திராவிட முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட அனைத்துக் கட்சித் தோழர்களும், கூட்டணிக் கட்சிகளுக்காக தங்கள் இடங்களை விட்டுக் கொடுத்தவர்களும், தாங்கள் கடும் உழைப்பைச் செலுத்தி எதிர்பார்த்திருந்த இடங்களை அடுத்தடுத்த தலைமுறை வேட்பாளர் களுக்காக விட்டுக்கொடுத்தவர்களும் தமிழர் தலைவரின் உரை கேட்டும், அவரது உழைப்பைப் பார்த்தும் நெக்குருகி, “புதிய ஊக்கத்தோடு நாங்கள் இப்போது களத்தில் நிற்கிறோம்” என்று கொள்கை இயக்கத்தவர் என்றால் எப்படி இருக்க வேண்டும் என்னும் உணர்வு பெறுகிறார்கள். ஒவ்வொரு நாளும் பரப்புரைப் பயணத்தின் மெருகு கூடிக் கொண்டேயிருக்கிறது.
இப்படி வெற்றிகரமான பரப்புரையை, திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு ஆதரவாகச் செய்பவர் களையெல்லாம் கண்டு, பாராட்டி, ‘இவரது பிரச்சாரம் சிறப்பாக இருக்கிறது, இவரை எல்லா இடங்களுக்கும் பயன்படுத்தி இன்னும் அதிகமாகப் பிரச்சாரம் செய்யுங்கள்’ என்றா பார்ப்பன ’இனமலர்’கள் எழுதும்?
‘அய்யய்யோ… இவரா என்று கேட்கிறார்கள் திமுகவினர். இவர் வேண்டாம் என்று மறுக்கின்றனர். ஓட்டு விழாதோ என்று அஞ்சுகின்றனர், வீரமணி வரக்கூடாதென்று வேட்பாளர்கள் தலைமைக்குத் தூது விடுகிறார்கள்” என்று வழியிலேயே தூதுப்புறாவை மறித்து வறுத்துத் தின்றவர்கள் போல கதையளந்தது ‘இனமலர்’! பல்வேறு முக்கியத் தலைவர்களின் பிரச்சாரங்களையும் இப்படி முடக்குவதற்குத் தான் பல முயற்சிகளைத் தொடர்ந்து எடுத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதையும் நாம் பார்த்துக் கொண்டு தானே இருக்கிறோம்.
எப்படியாவது இவரது பிரச்சாரத்தைக் கொச்சைப் படுத்த வேண்டும் என்று, திரிநூல் புத்தியுடன் திரிக்கப் பார்த்தது! ‘அவர்கள் இல்லை; இவர்கள் இல்லை; அய்யய்யோ பார்த்தீர்களா?’ என்று நமக்காகவே பிறந்தது போல், ‘மித்ரபேதம்’ செய்ய முனைந்தது. ஒவ்வொரு நாளும் புதிது புதிதாக கூடிக் கொண்டேயிருக்கும் பிரச்சாரக் களங்கள் அவர்களின் வியூகங்களைத் தகர்த்துக் கொண்டேயிருக்கின்றன.
முக்கியத் தொகுதிகளில் ஆசிரியர் பிரச்சாரம் செய்யவில்லையாம்! அமைச்சர்கள் தொகுதி உள்பட பல்வேறு கட்சியினரின் தொகுதிகளிலும் பரவலாகத் தமிழ்நாடு முழுவதும் இந்த 16 நாட்களில் 37 கூட்டங்களில் பங்கேற்கத் திட்டமிடப்பட்டுள்ளது. வேட்பாளர்களின் வேண்டுகோளுக்கேற்ப சில தொகுதிகள் கூடியிருக்கின்றன. 234 தொகுதிகளுக்கும் எல்லோரும் செல்ல முடியாதென்பதால் தான் தலைவர்கள், பிரித்துப் பிரித்துப் பல திசைகளிலும் சென்று கொண்டிருக்கிறார்கள். அந்த அளவுக்கு யோசிப்பதற்கெல்லாம் அவாளுக்கு புத்தியிருக்குமா? வசதிக்கேற்பத் திரிக்க வேண்டியது தானே!
இரட்டை நாக்கு
திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் பிரச்சாரக் கூட்டங்களைத் தி.மு.க. வேண்டாம் என்று சொல்வதாகச் சொன்ன இதே இனமலர் ஏடுதான், ‘கருணாநிதி, ஸ்டாலின், உதயநிதி, பொன்முடி, ஆ.ராசா, கனிமொழி, திமுக அரசு என்று பட்டியலிட்டு எல்லோரையும் குறிப்பிட்டுவிட்டு “இந்தக் கூட்டத்தின் தலைமை வழிகாட்டி தி.க. வீரமணி” என்றும் யாரோ ஒருவரைப் பிடித்து விளம்பரம் வெளியிட்டது
என்னே இரட்டை நாக்கு! கொஞ்சமும் அவர்களுக்கு உறுத்தாதா? நாம் தானே , தி.க. தலைவர் வீரமணி பிரச்சாரத்தைத் திமுக வேண்டாம் என்று சொன்னதாகவும் புனைந்து எழுதுகிறோம், பிறகு ‘அவர் தான் தலைமை வழிகாட்டி’ என்றும் எழுதுகிறோமே… என்றெல்லாம் லஜ்ஜை இருக்காதா? ம்ம்ஹூம், முதுகுப் பூணூலும் முன்னுக்கு வருமே – எப்படியும் புரட்டிக் கொள்ளலாமே!
உண்மை என்ன?
தி.மு.க.விடமிருந்து கொள்கை உணர்வைப் பறித்துவிட வேண்டும், திராவிடர் கழகத்தைப் பிரித்துவிட வேண்டும் என்று எத்தனை பேர் முயற்சித்திருக்கிறார்கள். சூனாசாமி என்றொருவர் “கருணாநிதி வரை மட்டும் தான் கொள்கை பேசுவார்கள். ஸ்டாலின் அப்படியில்லை” என்று ‘பாராட்டி’ப் பேசிப் பார்த்தார்.
கோயங்கா வீட்டுக் கணக்குப் பிள்ளை ஒருவர், “கருப்புச் சட்டைகளைத் தள்ளி வைத்துவிட்டால், வீரமணியை விட்டு வந்துவிட்டால், ஸ்டாலின் வளர்ச்சி சிறப்பாக இருக்கும்” என்று ‘யோசனை’ சொல்லிப் பார்த்தார்.
இவர்களுக்குப் புரிய வேண்டும் என்பதற்காகவே, கலைஞர் மறைவுக்குப் பிறகு (2.12.2018) திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிலைப்பாடு என்ன என்பதை அழுத்தந் திருத்தமாக ”பொதுவாக எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் திராவிடர் கழகம் என்ன சொல்கிறது ஆசிரியர் என்ன அறிக்கை கொடுக்கிறார் என்று தான் கலைஞர் அவர்கள் உற்றுக் கவனிப்பார்கள். அப்படித்தான் நாங்களும் கவனிக்கிறோம். நாங்கள் செல்லும் பாதையை பெரியார் திடல் தான் தீர்மானிக்கிறது. மதவாத ஆபத்தும் ஜாதிவெறியும் தலைதூக்கும் இந்தக் காலக்கட்டத்தில் ஆசிரியரின் வழிகாட்டுதல்கள் அதிகம் தேவை” என்று பதிவு செய்தாரே!
ஒரு முறை மட்டுமா… எத்தனை எத்தனை முறை! ஆசிரியர் கி.வீரமணியின் வழிகாட்டுதல் எப்படி தங்களை நெறிப்படுத்துகிறது என்பதை எண்ணற்ற முறை பொது மேடைகளில், எழுத்தில் வெளிப்படுத்திக் கொண்டேதான் இருக்கிறார்.
ஆசிரியரின் பேச்சைத் தி.மு.க. வேண்டாம் என்று சொல்வதாகப் புளுகும் ‘இனமலர்’ கூட்டத்துக்கு இன்னொரு முறை வயிற்றெரிச்சல் வரட்டுமே என்று இதோ நேற்று ஒரு பதிவு வெளியிட்டுள்ளார்.
“92 வயது நிறைந்த திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் அய்யா கி.வீரமணி அவர்கள் கடும் வெயிலிலும் பரப்புரை செய்கிறார். அகவை 80அய் தாண்டிய அண்ணன் சிதம்பரமும், அண்ணன் வைகோவும் மூலைமுடுக்கெல்லாம் திராவிட மாடல் ஆட்சி மீண்டும் அமைய வேண்டும் என்பதன் அருமையை விளக்கி வருகின்றனர். 87 வயதான நம் கழகப் பொதுச் செயலாளர் அன்பு அண்ணன் துரைமுருகன் அவர்களும், 28 வயதே ஆன அவிநாசி கழக வேட்பாளர் டாக்டர் கோகிலாமணியும் பம்பரமாகக் களத்தில் சுழன்று கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு உறுதுணையாக கழகத்தினரும் தோழமைக் கட்சியினரும் பணியாற்றி வருகிறார்கள்” என்று எழுதியிருக்கிறாரே!
’உண்மையின் உரைகல்’ என்று மனதறியப் பொய் சொல்லும் இனமலரே, உன் பொய் அம்பலப்பட்டுப் போனதை ஒப்புக் கொள்ளும் நேர்மை உண்டா உன்னிடம்?
“முற்றிய நெற்கதிரை கவனமாக… தொண்டர் களுக்கு ஸ்டாலின் வேண்டுகோள்!” என்ற தலைப்பில் சேலம் பதிப்பில் செய்தி வெளியிட்டிருக் கிறாயே… எல்லோர் பெயரையும் அப்படியே போட்டுவிட்டு, அதில் தமிழர் தலை வர் ஆசிரியர் அவர்களின் பெயரை மட்டும் விட்டு விட்டுச் செய்தி வெளியிடுகிற உம் உண்மையின் ‘யோக்கியதை’ பளிச்சென்று பல்லிளிக்கிறதே!
சொல்ல வெட்கமாக இருக்கிறதா? முகத்தைக் காட்டை அசிங்கமாக இருக்கிறதா? அய்யய்யோ… முகத்தில் அறைந்தது போல் இப்படி முதலமைச்சர் எழுதியிருக்கிறாரே என்று வெட்கமாக இருக்கிறதா?
‘கமலத்து அன்ன ஆனன’த்தை எங்கே வைப்பாய்?
புரியவில்லையா? தாமரை போன்ற முகமாமே…
எங்கே வைப்பாய் உன் முகத்தை?
– கருஞ்சிறுத்தை

