சென்னை, ஆக. 5- தமிழ்நாட்டில் கடந்த 2008-ஆம் ஆண்டு முதல் 2026 ஜூலை மாதம் வரையிலான காலக்கட்டத்தில், மொத்தம் 2,490 கொடையாளர்களிடமிருந்து 14,532 உடல் உறுப்புகள் மற்றும் திசுக்கள் கொடையாகப் பெறப்பட்டு ஆயிரக்கணக்கான நோயாளிகளுக்கு மறுவாழ்வு அளிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
உடல் உறுப்புக் கொடையில் நாட்டிலேயே முன்னோடி மாநில மாகத் திகழும் தமிழ்நாட்டில், கொடையாகப் பெறப்பட்ட உறுப்புகளில் 8,797 முக்கிய உறுப்புகள் அடங்கும். பெறப்பட்ட முக்கிய உறுப்புகளின் விவரம்:
சிறுநீரகம்: 4,394 கல்லீரல்: 2,204 நுரையீரல்: 1,071 இதயம்: 1,027 கணையம்: 49 சிறுகுடல்: 39 கைகள்: 9 வயிறு: 4 முக்கிய உடல் உறுப்புகள் மட்டுமன்றி, கண்கள் மற்றும் தோல்கள் உள்ளிட்ட பிற திசுக்களையும் சேர்த்து மொத்தம் 14,532 உறுப்புகள் வெற்றிகரமாகப் பெறப்பட்டுப் பயன்பாட்டிற்கு வந்துள்ளன.
உடல் உறுப்புக் கொடை குறித்த விழிப்புணர்வு மக்களிடையே தொடர்ந்து அதிகரித்து வருவதன் காரணமாகவே, மூளைச்சாவு அடைந்தவர்களின் குடும்பத்தினர் முன்வந்து இந்தத் தொண்டைச் செய்து உயிரிழப்புகளின் எண்ணிக் கையைக் குறைத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
