சென்னை, ஜூலை 20– மருத்துவர்கள் அங்கீகாரம் இன்றி சமூக வலைதளங்களில் அதிகாரப்பூர்வமற்ற மருத்துவ குறிப்புகள் வேகமாக பரவி வருகின்றன. அவற்றை பதிடுபவர்கள் மீது சுகாதாரத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
மருத்துவ ஆலோசனை
யூ-டியூப் போன்ற சமூக வலை தளங்களை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக் கிறது. இதன் மூலம் பல பயனுள்ள தகவல்கள் கிடைத்தாலும், பலர் தங்களுக்கு தெரியாத சில விசயங்களை தெரிந்தது போல தவறான விசயங்களை யும் பரப்புகிறார்கள்.
வீட்டில் வைத்து பிரசவம் பார்ப்பது எப்படி என்பது போன்ற சட்டவிரோத காட்சிப் பதிவுகளை வெளியிடுகிறார்கள். அதைப்பார்த்து சுயமாக பிரசவம் பார்க்கிறேன் என்ற சிலர் முயன்று தங்களது வாழ்க்கைத் துணையின் உயிரை பறிக்கொடுத்துள்ளனர்.
இதேபோல் சில நோய்களை குறிவைத்து மருத்துவ ஆலோசனைகள் மற்றும் சிகிச்சைகள் தொடர்பான காட்சிப் பதிவுகள் ‘வாட்ஸ்அப், யூடியூப், முகநூல், இன்ஸ்டாகிராம்’ உள்ளிட்ட சமூக வலைதளங்களில் அதிகளவில் பகிரப்பட்டு வருகின்றன.
“ஒரே நாளில் சர்க்கரை நோய் குணமாகும்”, “வீட்டு வைத்தியத்தில் புற்று நோயை குணப்படுத்தலாம்”, “இந்த மூலிகை எல்லா நோய்களுக்கும் தீர்வு”, “இதை செய்யுங்கள் மாரடைப்பில் இருந்து உடனடியாக விடுபடலாம்” போன்ற கண்ணை கவரும் தலைப்புகளில் போடப்படும் தகவல்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன. உடலில் ஏற்படும் இயல்பான மாற்றங்களையும் நோய்களுக்கு அறிகுறியாக சொல்லி, இணையவாசிகளை பதற்றத்திலேயே சிலர் உறைய வைக்கின்றனர்.
உயிருக்கு ஆபத்து
சமூக வலைதளங்களில் உலா வரும் இத்தகைய பதிவுகளை நம்பி பலர் மருத்துவரை அணுகாமல் தாங்களாகவே மருந்துகள் மற்றும் மூலிகைகளை எடுத்துக்கொள்கின்றனர். இதனால் நோயின் தன்மை மோசம் அடைவதுடன், சிகிச்சை தாமதமாகி உயிருக்கே ஆபத்தான நிலையையும் ஏற்படுகிறது. ஒவ்வொரு நபரின் உடல்நிலை, மருந்தை உடல் ஏற்றுக்கொள்வதன்மை, வயது, நோயின் தீவிரம், நோய் எதிர்ப்பாற்றல் ஆகியவை மாறுபடும்.
இதனைப் பொறுத்தே நோய் குண மாகிறது. எனவே ஒருவருக்கு பொருந்தும் சிகிச்சை மற்றோருவருக்கு பொருந்தும் என்று கருதுவது தவறானது. தங்களுடைய காட்சிப் பதிவுகள் அதிக பார்வைகளைப் பெறவேண்டும் என்பதற்காக சிலர் பரிந்துரைக்கும் மருந்துகளை அதிகளவில் உட்கொள்வதால் உடல் உறுப்புகள் பாதிக்கப்படுவதற்கும் வாய்ப்பு இருப் பதாக மருத்துவர்கள் எச்சரிக்கை தெரிவிக்கின்றனர்.
சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒவ்வொரு மருத்துவ குறிப்பையும் உண்மை என நம்பாமல், அதன் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்திய பிறகே ஏற்றுக்கொள்ள் வேண்டும்.
சுயமாக சிகிச்சை செய்யக்கூடாது
அதிக பார்வைகள் கிடைக்க வேண்டும் என்ற தங்களது சுய லாபத் திற்காக, சமூக வலைதளங்களில் மருத்துவர்களால் அங்கீகரிக்கப்படாத மருத்துவ குறிப்புகளை போடுபவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, “மருத்துவ சிகிச்சை தொடர்பாக அரசு வெளியிடும் அதிகாரப்பூர்வ தகவல்களை மட்டுமே பொதுமக்கள் நம்ப வேண்டும். உடல்நலக்குறைவு ஏற்பட்டால் மருத்துவரை நேரில் அணுகி பரிசோதனை மற்றும் ஆலோசனை பெறுவதே பாதுகாப்பான வழியாகும். சமூக வலைதளங்களில் பரவும் பதிவுகளை நம்பி சுயமாக நோய்களுக்கு சிகிச்சை செய்யக்கூடாது. தவறான மருத்துவ தகவல்கள், உடல்நலத்திற்கு மட்டுமல்ல, உயிருக்கும் பெரும் அச்சுறுத்தலாக மாறும்” என்றனர்.
