அயோத்தி, ஜூலை 19 உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள ராமன் கோயிலுக்கு பக்தர்கள் வழங்கிய நன்கொடை நிதியில் முறைகேடு மற்றும் திருட்டு நடந்துள்ளதாக எழுந்த புகார்கள் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
இதுதொடர்பான புகார்களை விசாரிக்க உத்தரப்பிரதேச அரசு அமைத்துள்ள சிறப்பு புலனாய்வுக் குழு (SIT), தற்போது தனது விசாரணை வளையத்தை அரசு மற்றும் வங்கி அதிகாரிகள் வரை விரிவுபடுத்தியுள்ளது.
கைது நடவடிக்கை
கோயிலின் காணிக்கைகளை எண்ணும் பணியில் ஈடுபட்டிருந்த 8 பேரை காவல்துறையினர் ஏற்ெகனவே கைது செய்திருந்தனர்.
காணிக்கை எண்ணும் பணியில் அறக்கட்டளை நிர்வாகிகளின் பரிந்துரையின் பேரில் சுமார் 50 பேர் நியமிக்கப்பட்டிருந்தனர். இவர்கள் பணியில் சேர்ந்த பிறகு, தங்களின் வருமானத்திற்கு அதிகமாக ஏதேனும் சொத்து சேர்த்துள்ளனரா என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
அதிகாரிகளுக்கு வலை
அறக்கட்டளையின் மூத்த நிர்வாகிகள், அதன் செயல்பாடுகளில் தொடர்புடைய சில அரசு அதிகாரிகள் மற்றும் கட்டுமானப் பணிகள், நிலம் வாங்குதல் தொடர்பான பணப்பரிவர்த்தனைகள் குறித்தும் விசாரணை நடத்தப்பட உள்ளது.
எஸ்பிஅய் வங்கியின் முன்னாள் ஊழியர்களான சுபாஷ் சிறீவஸ்தவா மற்றும் ராமசங்கர் மிஸ்ரா ஆகியோரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில், தற்போது பணியில் இருக்கும் சில எஸ்பிஅய் ஊழியர்களிடமும் விசாரணையை நீட்டிக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
இவ்வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ராம் சங்கர் (என்ற தின்னு) மற்றும் மனிஷ் குமார் ஆகிய இருவரையும் 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறை அனுமதி கோரியிருந்தது. ஆனால், ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் அதற்கு மறுப்பு தெரிவித்து, அவர்களை 39 மணி நேரம் மட்டும் காவல்துறை காவலில் வைத்து விசாரிக்க அனுமதி வழங்கியுள்ளது.
