பண்டைய இந்திய தீபகற்பம் அறிவு, வணிகம் மற்றும் நாகரிகத்தில் உலகிற்கே வழிகாட்டியாகத் திகழ்ந்தது. சிந்துவெளி நாகரிகக் காலத்தில் திராவிட மக்கள் பாரசீகம் போன்ற நாடுகளுடன் பரந்த அளவிலான வணிகத் தொடர்பைக் கொண்டிருந்தனர்.
இங்குள்ள வணிகர்களும் மக்களும் பயன்படுத்திய நுணுக்க மான எழுத்து முறைகளும், முத்திரைகளும், அன்றைய காலத் திலேயே உயர்மட்டக் கல்வியும் எழுத்தறிவும் பரவலாக இருந்ததை உணர்த்துகின்றன.
இதற்கு மேலும் வலுச்சேர்க்கும் விதமாக, தமிழ்நாட்டின் கீழடி அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட பானை ஓடுகளில் சாமானிய மக்களின் பெயர்களும், பொருட்கள் சார்ந்த குறிப்புகளும் தமிழ் பிராமி (தமிழி) எழுத்துகளில் பொறிக்கப்பட்டுள்ளன. இது, கல்வி என்பது சில குறிப்பிட்ட பிரிவினருக்கு மட்டும் உரியதாக இராமல், சமூகத்தின் கடைக்கோடி சாமானிய மக்களுக்கும் சென்று சேர்ந்திருந்தது என்பதற்கான மிகப்பெரிய வரலாற்றுச் சான்றாகும்.
அலெக்சாண்டரைத் தயங்க வைத்த அறிவுச் செறிவு
ஆசியக் கண்டத்தின் பெரும் பகுதியைக் கைப்பற்றிய மாவீரன் அலெக்சாண்டரால் கூட சிந்து நதியைக் கடந்து இந்திய தீபகற்பத்திற்குள் எளிதில் நுழைய முடியவில்லை. இதற்குப் பிரதான காரணம், அன்றைய காலகட்டத்தில் மக்கள் கல்வியிலும் அறிவுத் திறனிலும், போர்க்கலைகளிலும் சிறந்து விளங்கியமையே ஆகும். மக்களின் ஒட்டுமொத்த அறிவுத் திறனும், ஒற்றுமையுமே எதிரிகளை எல்லைக்கு அப்பால் நிறுத்தி வைத்திருந்தது.
குப்தர் காலம்: வர்ணாசிரமத்தின் ஆட்சியும், கல்வியின் வீழ்ச்சியும்!
கி.பி. 4-ஆம் நூற்றாண்டு முதல் 6-ஆம் நூற்றாண்டு வரையிலான குப்தப் பேரரசின் ஆட்சிக்காலம் வரை கல்விக்கட்டமைப்பு சிறப்பாகவே இருந்தது. ஆனால், குப்தர்கள் வர்ணாசிரம தர்மத்தை முழுமையாக அரசமைப்பாக மாற்றி நடைமுறைப்படுத்தியபோது நிலைமை தலைகீழானது.
சமூகம் நான்கு வர்ணங்களாகப் பிரிக்கப்பட்டு, கல்வி என்பது சாமானிய மக்களுக்கு “எட்டாக்கனி” ஆக்கப்பட்டது. குறிப்பிட்ட சில பிரிவினர் மட்டுமே வாள் ஏந்த வேண்டும், குறிப்பிட்ட வகுப்பினர் மட்டுமே கல்வி கற்க வேண்டும் என்ற சட்டங்கள் இறுக்கப்பட்டன.
பயணியரின் குறிப்புகள் உணர்த்தும் உண்மை!
சீனப் பயணி யுவான் சுவாங் (Xuen Zang) இந்தியாவிற்கு வந்த காலத்திற்கும், பிற்காலத்தில் வந்த அல்-பரூனி (Al-Biruni) காலத்திற்கும் இடைப்பட்ட காலத்தில், சாமானிய மக்கள் தங்கள் கல்வியறிவை முழுமையாக இழந்து நிற்கும் அவலநிலைக்குத் தள்ளப்பட்டனர்.
வடக்கில் ஏற்பட்ட இந்த வர்ணாசிரமத் தாக்கம் தெற்கிலும் பரவியது. பல்லவர்களும் பிற்காலச் சோழர்களும் வர்ணாசிரம முறையை ஆதரித்து நடைமுறைப்படுத்தியதால், தென்னிந்தியாவிலும் சாமானிய மக்களுக்கான கல்விப் பரவல் படிப்படியாக மறைந்துபோனது.
இதன் விளைவாக, அய்ரோப்பியர்களின் வருகை வரை — அதாவது சுமார் 1500 ஆண்டுகள் — இந்திய தீபகற்பம் அறிவொளி மங்கி, ஓர் இருண்ட கண்டமாகவே திகழும் சூழல் உருவானது.
படையெடுப்புகளும், பேரரசுகளின் வீழ்ச்சியும்!
கல்வி மறுக்கப்பட்டு, “குறிப்பிட்ட வர்ணத்தினர் மட்டுமே போர் புரிய வேண்டும்” என்ற விதியால், மக்களிடையே இயல்பாக இருந்த பொதுவான போர்க்குணமும், தற்காப்பு உணர்வும் வீழ்ச்சியடைந்தன.
சமூகத்தில் நிலவிய இந்த பிளவைப் பயன்படுத்தி ஹூணர்கள், சுல்தான்கள், முகலாயர்கள் என அடுத்தடுத்து வெளியாட்கள் இந்தியாவிற்குள் எளிதாகப் புகுந்து ஆட்சியைக் கைப்பற்ற முடிந்தது.
சிந்துவெளி, கீழடி நாகரிகங்கள் உணர்த்தும் பண்டைய இந்தியா, கல்வியிலும் சமத்துவத்திலும் சிறந்து விளங்கியது. ஆனால், இடைக்காலத்தில் புகுத்தப்பட்ட வர்ணாசிரமக் கோட்பாடு, சமூகத்தின் பெரும்பான்மை மக்களுக்குக் கல்வியை மறுத்து, அவர்களைப் பலவீனப்படுத்தியது. ஒரு நாட்டின் உண்மையான வலிமை என்பது அந்நாட்டின் அனைத்து மக்களுக்கும் கிடைக்கும் கல்வியிலும், அதன் மூலம் விளையும் ஒற்றுமையிலுமே அடங்கியுள்ளது.
