
தமிழ்நாட்டிலிருந்து பல ஆண்டுகளுக்கு முன்பே அமெரிக்காவிற்குப் புலம்பெயர்ந்து சென்று, நல்ல வாழ்க்கை அமைத்துக் கொண்டதோடு, ‘தானுண்டு – தன் சம்பாத்தியம், தன் குடும்பம் என்ற சின்னதோர் கடுகு உள்ளத்தவர்கள்’ பலர் இருந்தாலும், மனித சமூகத்திற்கும் – அதன் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் நாம் ஒரு சிறிய அளவாவது நமது தொண்டறப் பங்கை ஆற்றிட வேண்டும் என்ற சமூக உணர்வு நாளும் பலரிடையே, பாலின வேறுபாடு இன்றி இருப்பதை, நேரிலும், பல தோழர்கள், அமைப்புகள் மூலமும் அறிந்தும் – அறிமுகமாகியும் உள்ள வாய்ப்பு, நமது பணிக்கு உரமூட்டுவதாக அமைகிறது என்பதைவிட வேறு மகிழ்ச்சி உண்டா?
அப்படிப்பட்ட ஒருவர்தான் முற்போக்குப் பகுத்தறிவுச் சுதந்திரச் சிந்தனையாளர் பொறியாளர் ‘தமிழ்க்காரி’ அவர்கள்.
‘தமிழ்க்காரி’ என்பது அவரது எழுத்துப் பணிக்கான புனைபெயர்தான்.
அவர் (தமிழ்க்காரி) சில நாட்களுக்கு முன் அவரைப் போலவே தன்னம்பிக்கை, துணிவு, தெளிவுடன் சிந்திக்கும் எழுத்தாளர் தோழர் அகிலா செல்வராஜ் என்ற சீரிய பகுத்தறிவுச் செம்மல் மூலம் ‘என்னைச் சந்தித்து, தான் இரு மொழிகளிலும் எழுதிய சில நூல்களைத் தந்தார்!
பணிச்சுமைக்கு இடையே கோடையில் கிடைத்த ‘குளிர் தருவாக’ச் சற்று இளைப்பாற்றிக் கொள்ள இப்புத்தகம் கிடைத்தது.
‘சூர்ப்பணகை: பெண் – உடல் – அரசியல்’ என்ற தலைப்பிலான இப்புத்தகம் ‘கேப்சூல்’ (Capsule) போன்ற – ஒரு சிறு குளிகை மாத்திரை போன்றது! 63 பக்கங்களைக் கொண்டது!
கம்பராமாயணத்தில் உள்ள கம்பன் பாட்டு அடிகளையே ஆதாரமாகக் கொண்டு இந்நூல் எழுதப்பட்டுள்ளது. தவறாக ‘தார்பூசிக் காட்டுபவர் காலங்களில் – மனுமாந்தா காலத்து ‘ஸ்திரி தர்ம நியாயங்களை’ கற்பித்து வந்து, பெண்களை அடிமைகளிலும் அடிமைகளாகவே வைக்கப்பட்டு, படிக்கட்டு வர்ணமுறையால் ‘நமோ சூத்திரர்களானவர்களுக்கு ஆணினம் வாதாட வராமலிருப்பதே – அவர்களது ஆதிக்கம் சரியாமலிருக்க ஒரு பாதுகாப்பு ஏற்பாடுதான். அடிமைகளாகவும், நல்ல வேலைக்காரியாகவும் – எதிர்த்துப் பேசக் கூடாதவர்களாகவும், இருப்பதுதான் பெண்ணின் பெருமை என்ற தவறான நியாயவாதங்களால் பாதிக்கப்பட்ட காவிய கதாபாத்திரங்களான பாரத காலத்துப் பாஞ்சாலிகள் முதல் இராமாயண காலத்துச் சீதைகள், அகலிகைகள், சூர்ப்பணகைகள், தாடகைகள் போன்ற எண்ணற்றோர் வாயில் குமுறல் இருக்க… பேச முடியாத, பேசக் கூடாத நிலை உள்ள ஆமைகளாய் ஊமைகளாய் அடங்கி ஒடுங்கும் ‘புதை குழிப் பொருள்களாய்’ ஆக்கப்பட்ட பெண்ணை மானுடத்தின் சரி பகுதி என்று நீதி பெற்ற நெடுங்கால அடிமைகள், குரலற்றவர்கள்தாம் பெண்கள். அப்படி ஒரு பாத்திரப் படைப்புதான் சூர்ப்பணகை(கள்)!
ஆண்கள் எது செய்தாலும் நியாயம். The king can do no wrong’,
மன்னவன் ஆண் என்ன செய்தாலும், ‘அவன் தண்டனைக் குரியவன் அல்ல’ என்பது மநுகாலத்தி லிருந்து இன்றுவரை உள்ள உலகியல் யதார்த்தம்!
‘‘விபச்சாரக் குற்றத்தில் ‘விபச்சாரிகள்’ தானே உண்டு; ஏன் ‘விபச்சாரகன்’ இல்லை?’’ என்று சொடுக்கினார் தமது சிந்தனைச் சாட்டையைத் தந்தை பெரியார் என்ற மானுடப் பற்றாளர். அதற்குப் பதில் அவர் ஒழிக’ என்பதுதானா?
பாரத – இராமாயணப் பாத்திரங்களில், குறிப்பாக அசுரர்கள், அரக்கர்கள், அரக்கிகள் பற்றிய புதிய பார்வையும், வாதங்களும், நியாயங்களும் காலத்தை வெல்லும் பகுத்தறிவு ஏவுகணைகளாக இன்று பெரியார் யுகத்தில் பாய்ந்தோடி வருகின்றன.
அதன் விளைச்சலே ‘தமிழ்க்காரி’யின் (சித்ரா என்பது அவர் பெயர்) நூல்! அவரது உருவமே நூலின் கடைசி அட்டைப் பகுதியில் வந்ததால் அதனை வெளியிடுவது தவறாகாது!
சூர்ப்பணகையின் அழகை ஏன் யாரும் இல்லாத நேரத்தில் அவதார இராமன் ஆராதிக்கிறான்? கம்பன் கூற்றுப்படியே கூட!
‘‘தோள்கண்டார் தோளே கண்டார்’ என்று பெண்கள் மயங்கிய இராமனின் தோளழகில் சென்று தங்கிய அவளது (சூர்ப்பணகை) கண்களை மீட்டு வரும் மன உறுதியில்லாதவளாய் ஏங்கிக் கிடக்கிறாள் சூர்ப்பணகை.
உருவத்தை மாற்றிக் கொள்ளுகிறாள் இந்தக் காமவல்லி! இராமன் திட்டவட்டமாக அவளது காதலை மறுக்க, புறந்தள்ளி ஏதோ ‘சால்ஜாப்புகளை’ப் பேசி அவனும் தடுமாறுவதையே கம்பன் சிந்தனைகளாக இன்னொரு தனிச் செய்தியில் கூறுகிறார் (படித்தால் புரியும்).
அதை விரிவாக எழுதியுள்ளார்.
என்றாலும் மறுத்துவிட்ட இராமன் ‘‘சூர்ப்பணகை இங்கிருந்து போய் விடு’’ என்று சொல்வதோடு விரட்டியிருக்கலாம். ஆனால் பிடிக்காத காரணத்தால் அவளது மூக்கையும், கொங்கைகளையும் அறுத்து அனுப்புவது எவ்வகையில் நியாயமாகும்? என்ற கேள்வியை நியாயத்தின், நீதியின் அடிப்படையில் கேட்க இதற்குமுன் பலரும் வரவில்லையே! பெரியாரின் பகுத்தறிவு யுகத்தில் தானே மூளை விலங்கை உடைத்த சிந்தனைகள், முந்திக் கொண்டு, துணிவுடன் புதிய விடியல் கருத்துகள் – மீள் பார்வை மூலம் கிடைக்கிறது!
ஒருவரை விரும்புவது மனித இயல்பு; ஆனால் காதலை ஏற்க மறுத்து, அவரே தண்டனை தரும் நீதிபதியாகி, மூக்கையும், மார்பகத்தையும் அறுத்து அவமானப்படுத்தும் நோக்கத்தோடு செய்யப்படுவது இயற்கை நீதிப்படி ஏற்கத்தக்கதா?
இதே இராமன் இதுபோல தொடர்ந்து, சீதையை மீட்ட பிறகு தீக்குள் இறங்கச் சொல்வது, பிறகு நிறைமாதக் கருவுற்ற சீதையை காட்டிற்கு அனுப்புவது இவையெல்லாம் எவ்வகையில் நியாயம்? என்று துணிவுடன் சுதந்திர சிந்தனைகள் இன்று தமிழ்க்காரிகள் மூலம் எழுகின்றன. தர்க்க ரீதியாக – நியாயத்தின் பீடத்தில் நின்று சொடுக்கிச் சொடுக்கிச் சிந்தனைச் சாட்டையைச் சுழற்றுகிறார்.
நூலாசிரியரின் கேள்வி புதிய சிந்தனை அம்புகளாக எப்படி இருக்கின்றன என்பது அறிய நூலைப் படியுங்கள், அதில் உள்ள நியாயங்களைப் புரிந்துகொள்ள முயலுங்கள்.
(வளரும்)
