பழனி மடத்துக்கு சொந்தமான ரூ.100 கோடி நிலம் சட்ட விரோத பத்திரப்பதிவு தொடர்பாக சி.பி.சி.அய்.டி. விசாரணை தொடக்கம்

பழனி, ஜூலை 17-  பழனி தண்டபாணி சுவாமிகள் மடத்துக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்பிலான நிலம் சட்ட விரோதமாக பத்திரப் பதிவு செய்யப்பட்டது தொடர்பாக சிபிசிஅய்டி காவல்துறையினர் விசாரணையைத் தொடங்கினர்.

திண்டுக்கல் மாவட்டம் பழனி மலை அடிவாரத்தில் தண்டபாணி சுவாமிகள் மடத்துக்குச் சொந்தமான 1.40 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலம் கடந்த ஜூலை 6-ஆம் தேதி சட்ட விரோதமாக இரு தனிநபர்களுக்கு பத்திரப் பதிவு செய்யப் பட்டது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

சட்ட விதிகளை மீறி பத்திரப் பதிவு செய்து கொடுத்ததாக பழனி சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் மீதும், நிலத்தை விற்பனை செய்த தண்டபாணி சுவாமிகள் அறக்கட்டளையை சேர்ந்த திருப்புகழ் சுவாமிகள், முருகதாஸ் சுவாமிகள், நிலத்தை வாங்கிய உடுமலை அடுத்த பாப்பாகுளத்தை சேர்ந்த வெள்ளைத்துரை மற்றும் பழனி அடுத்த டி.கே.என்.புதூரைச் சேர்ந்த சேதுபதி ஆகிய 4 பேர் மீதும் தேவஸ்தானம் சார்பில் பழனி அடிவாரம் காவல்துறையில் புகார் கொடுக்கப்பட்டது.

இதுதொடர்பாக சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன், மாவட்டப் பதிவாளர் சசிகலா ஆகியோர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர். முறைகேடாக நடைபெற்ற இந்த பத்திரப் பதிவை ரத்து செய்து உயர் நீதிமன்ற மதுரை அமர்வும் உத்தரவிட்டது. இந்த வழக்கு விசாரணையை சிபிசிஅய்டிக்கு மாற்றி காவல்துறை தலைமை இயக்குநர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவிட்டார்.

இதையடுத்து, சிபிசிஅய்டி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். திண்டுக்கல் சிபிசிஅய்டி மாவட்ட கண்காணிப்பாளர் அஜய் தங்கம் தலைமையில் நேற்று (16.7.2026) விசாரணைக் குழு அமைக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, மடத்துக்குச் சொந்தமான நிலத்தின் பத்திரப் பதிவு தொடர்பான முதல் தகவல் அறிக்கை (FIR) உள்ளிட்ட வழக்கு மற்றும் பத்திரப் பதிவு ஆவணங்களை சிபிசிஅய்டி காவல்துறையினரிடம் பழநி அடிவாரம் காவல்துறையினர் ஒப்படைத்தனர். சிபிசிஅய்டியினர் நேற்று மாலையே விசாரணையைத் தொடங்கினர்.

பழனி பூங்கா சாலையில் உள்ள தண்டபாணி சுவாமிகள் மடத்துக்குச் சொந்தமான 1.40 ஏக்கர் நிலத்தைப் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். பழனி தேவஸ்தான அலுவலகம், பழனி பத்திரப் பதிவு அலுவலகத்திலும் விசாரணை நடத்தினர். இன்னும் 2 நாட்களுக்கு பழனியிலேயே முகாமிட்டு, ஆவணங்கள் அடிப்படையிலும், வழக்கு தொடர்பாக சம்பந்தப்பட்டவர்களை நேரில் அழைத்தும் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர்.

பதிவுத் துறை சார்பில் உயர்நிலைக் குழு

நில பத்திரப் பதிவு விவகாரத்தில் முழுமையாக ஆய்வு செய்து உண்மை நிலையை அறிய, பதிவுத் துறை சார்பில் 3 பேர் கொண்ட உயர்நிலை விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவில் கூடுதல் பதிவுத் துறைத் தலைவர், உதவி பதிவுத் துறைத் தலைவர், மாவட்டப் பதிவாளர் ஒருவர் இடம்பெற்றுள்ளனர். பத்திரப் பதிவு நடந்த நாளில் பணியில் இருந்த சார் பதிவாளர், விடுப்பில் சென்ற சார் பதிவாளர், மாவட்டப் பதிவாளர், அலுவலக உதவியாளர் உள்ளிட்டோரிடம் இந்த குழுவினர் விரிவான விசாரணை நடத்துவார்கள். பத்திரப் பதிவு நடந்த நாளில் சார் பதிவாளர்அலுவலகத்தில் பதிவான கண்காணிப்பு படக் கருவியின் காட்சிகளையும் தீவிரமாக ஆய்வு செய்ய உள்ளனர். இக்குழுவினர் அளிக்கும் அறிக்கை அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று பதிவுத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *