வெப்ப அலையால் தகிக்கும் அய்ரோப்பா!

அறிவியல் அரங்கம்

ஜெர்மனியில் தார் சாலைகள் வெப்பத்தால் உருகி, போக்குவரத்து பாதிப்பு. பிரான்சின் ரோன் நதியில் வெப்பம் தாங்க முடியாமல் குளிக்கச் சென்ற 21 வயது கால்பந்து வீரர் கென்ஸொ கீஸ்சும், நண்பர்களுமாக 40 பேர் மூழ்கி உயிரிழப்பு.

பெர்லினில் காவல்துறையினர் கூட்டத்தினரைக் குளிர்விக்க தண்ணீர் பீரங்கிகளைப் பயன்படுத்த வேண்டிய நிலை. இவையெல்லாம் ஏதோ சில தொடர்பற்ற தனித்தனி நிகழ்வுகள் அல்ல. அய்ரோப்பாவில் நிலவும் தீவிர வெப்ப அலையின் நிகழ்ந்த மாற்றங்களின் சிறிய முன்னொட்டமே.

இந்தியாவின் உச்ச கோடைக்காலம் ஓய்ந்துள்ள நிலையில், அய்ரோப்பாவில் இப்போதுதான் கோடைக்காலம் உச்சத்தைத் தொட்டுள்ளது. ஆனால், வழக்கத்துக்கு மாறாக, பல்வேறு அய்ரோப்பிய நாடுகளில் வெப்ப அலையின் தாக்கம் தீவிர நிலையை அடைந்துள்ளது.

வெப்ப அலைக்கு காரணம் என்ன?

ஹீட் டோம் (Heat Dome) என்பது வெப்பமான காற்றின் திரள், ஒரு பாத்திரத்தின் மூடி போல ஒரு குறிப்பிட்ட பகுதியின் மேல் நிலைத்து, வெப்பத்தை வெளியேற விடாமல் தடுக்கும் அமைப்பு ஆகும். ஒமேகா அடைப்பு (Omega Block) என்பது இந்த வெப்பக் காற்றுத் திரளை உருவாக்கி, நீண்ட நாட்களுக்கு அப்படியே நிலைநிறுத்தும் காற்றழுத்த அமைப்பு. இரு தாழ்வழுத்த மண்டலங்களுக்கு இடையே சிக்கிக்கொள்ளும் உயர் அழுத்த வெப்பப் பகுதி, கிரேக்க எழுத்தான ‘Ω’ வடிவத்தை ஒத்திருப்பதால் இப்பெயர் பெற்றது. சாதாரணமாக மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி வீசும் காற்றோட்டம், இந்த அடைப்பால் தடைபட்டு, வெப்பமான, அசைவற்ற காற்றாக ஒரே இடத்தில் 3 முதல் 10 நாட்கள் வரையும், சில நேரங்களில் வாரக்கணக்கிலும் தேங்கி நிற்கிறது.

அய்ரோப்பாவில் இதுவரை வரலாற்றில் இல்லாத அளவிலான இந்த வெப்ப அலைக்கு மனிதத் தவறால் உருவான காலநிலை மாறுபாடே காரணம்” என உலக வானிலை கண்காணிப்பக (World Weather Attribution) நிறுவன அறிவியலாளர்கள் எச்சரித்துள்ளனர்.

பூமியின் சராசரி வெப்பநிலை, தொழில்துறை காலத்திற்கு முந்தையதை விட 1.30C உயர்ந்துவிட்டதன் காரணமாக, இதுபோன்ற தீவிர வெப்ப அலைகள் ஏற்படும் வாய்ப்பு கணிசமாக அதிகரித்துள்ளது. சில வானிலை நிபுணர்கள் ‘எல் நினோ’வை, ஒரு துணைக் காரணியாகக் குறிப்பிட்டாலும், பல வானிலை வல்லுநர்கள் இந்த வெப்ப அலைக்கு எல் நினோ நேரடிக் காரணம் அல்ல என தெளிவுபடுத்தியுள்ளனர். முதன்மைக் காரணி ஒமேகா அடைப்பும், அதற்கு அடிப்படையான காலநிலை மாற்றமும் தான் என்கின்றனர்.

பகல் நேர வெப்பநிலை மட்டுமல்ல, இரவு நேர வெப்பமும் இந்த அலையை மேலும் ஆபத்தானதாக்குகிறது. ஜெர்மனி, பிரான்ஸ் போன்ற நாடுகளில் இரவிலும் வெப்பநிலை 25–300C என்ற அளவில் நீடிப்பதால், உடல் இரவில் குளிர்ந்து ‘மீட்சி’ பெறும் வாய்ப்பே இல்லாமல் போகிறது. பிரான்ஸ் தனது வரலாற்றிலேயே வெப்பமான இரவை (தேசிய சராசரி 21.60C). இவ்வாண்டு ஜூன் 23 அன்று பதிவு செய்தது. தொடர்ச்சியான நாட்களில் உடல் குளிரும் வாய்ப்பின்றி வெப்ப அழுத்தம் குவிவதே, மரண எண்ணிக்கை இத்தனை அதிகமாக இருப்பதற்கு முக்கியக் காரணமாகக் கருதப்படுகிறது.

காலநிலை மாற்றத்தின் தீவிரம்

அய்ரோப்பாவில் கோடை காலம் பொதுவாக ஜூன் முதல் ஆகஸ்ட் வரை தீவிரமாகவும் (18-250C) செப்டம்பரில் மிதமாகவும் (15-200C) இருக்கும். ஆனால் இவ்வாண்டு, முதல் வெப்ப அலை மே 24இல் பதிவானது. அதன்பின் மெதுவாக இல்லாமல் திடீரென ஒரே வாரத்தில் 10 முதல் 130C வரை உயர்ந்தது. ஜூன் 2023-2024இல்  அய்ரோப்பாவின் பல நகரங்களில் அதிகபட்சமாக 40 முதல் 420C வரை உயர்ந்தது. இதுவரை இயல்பை விட அதிதீவிர வெப்ப அலை (10 – 180C) உயர்வால் 15 கோடி மக்களும், தீவிர வெப்ப அலை(5-100C) உயர்வால் 27 கோடி மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதற்குமுன் வெப்ப அலையானது 1950-1999 காலத்தில் 5 முறையும் 2000-2025 காலத்தில் 20 முறைக்கு மேலும் ஏற்பட்டுள்ளது. கடந்த  2026 ஜூன் மாதத்தில் அடித்த 2ஆம் வெப்ப அலையால் அதிகபட்சமாக பிரான்சில் 43.80 செல்சியசும், ஜெர்மனியில் 41.70 செல்சியசும், போலந்தில் 40.50 செல்சியசும், அங்கேரியில் 40.70 செல்சியசும், செக் குடியரசில் 41.90 செல்சியசும், இங்கிலாந்தில் 37.30 செல்சியசும் பதிவானது. இப்போது மூன்றாம் அலை வரப்போவதாக உலக சுகாதார அமைப்பு (WHO)  எச்சரித்துள்ளது.

பனிப்பொழிவும், தீவிர குளிரும் நிலவும் அய்ரோப்பாவில் இந்தத் திடீர் வெப்பத்தை தாங்க முடியாமல் மக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இதற்கு அங்கு வீடு மற்றும் பொது இடங்களின் கட்டுமானத் தன்மையும் காரணமாகும்.

வீடுகள் ஏன் தயாராக இல்லை?

அய்ரோப்பாவின் மேற்குப் பகுதி நாடுகள் பாரம்பரியமாக குளிர் காலநிலைக்கே பழக்கப்பட்டவை. கோடை காலத்திலும் வெப்பம் பொதுவாக உடலுக்கு இதமான அளவிலேயே இருக்கும். இதன் காரணமாக, இந்நாடுகளின் வீடுகள், அலுவலகங்கள், பள்ளிகள் அனைத்துமே வெப்பத்தைத் தக்கவைக்கும் வகையில் கட்டப்பட்டவை, வெப்பத்தை வெளியேற்றும் வகையில் அல்ல. இதுவே அய்ரோப்பாவில் வெறும் 20% வீடுகளில் மட்டுமே குளிரூட்டும் அமைப்பு இருப்பதற்கான முக்கியக் காரணம். ஆனால் பெரும்பாலான வீடுகள் வெப்பப்படுத்தும் அமைப்பை (heaters) கொண்டுள்ளன. திடீரென வந்த இந்த வெப்ப அலையை எதிர்கொள்ள, பலரும் அவசரமாக ஏசி பொருத்திக்கொள்ள வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

தாக்கங்கள்

ஜெர்மனியில் ட்ராம் தண்டவாளங்கள் உருகி சேவை நிறுத்தப்பட்டுள்ளது; சுவீடனில் வெப்பத்தால் வளைந்த தண்டவாளங்களால் ஒரு சரக்கு ரயில் தடம் புரண்டுள்ளது.  பிரான்சில் நதி நீர் அதிக வெப்பமடைந்ததால் அணு உலைகளின் குளிர்விப்பு பாதிக்கப்பட்டு, அணுமின்  உற்பத்தியைப் பாதித்துள்ளது. இதன் தொடர்ச்சியாக அயர்லாந்தில் மின் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பிரிட்டனில் ஒரு மருத்துவமனையில் குவிந்த மருத்துவப் பயனாளிகளைக் கட்டுப்படுத்த தீவிர சிகிச்சை தேவைப்படுவோரை மட்டும் கையாளும் நிலை உருவாகியுள்ளது.

இறப்புகள் 

அய்ரோப்பியப் பகுதிகளில் உள்ள 35 நாடுகளில் 2022இல் 60,000 பேரும், 2023இல் 47,500 பேரும்  இறந்துள்ளனர். 2024 உலகச் சுகாதார நிறுவனத்தின் ஆண்டறிக்கையின்படி, வெப்ப அலை தொடர்பான காரணிகளால் 1,75,000 இறப்புகள் பதிவாகியுள்ளன. நேரடித் தாக்கத்தால் 60,000-70,000 மக்கள் இறந்துள்ளனர். கடந்த ஆண்டுகளில் 30% இறப்பு அதிகரித்துள்ளது. இது சராசரிக்கு மிக அதிகம் என்பதால் அபாயமாகப் பார்க்கப்படுகிறது. இதே நிலை தொடர்ந்தால் 2050இல் இந்த எண்ணிக்கை வெப்ப அலையால் மட்டுமே 1,20,000 வரை செல்லும் அஞ்சப்படுகிறது. இந்தாண்டு இதுவரை அய்ரோப்பாவில் 20,000க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர்.

வெப்ப அலையே அதிக மரணங்களுக்கு காரணம்

வெப்ப அலை போன்ற மோசமான வானிலையை எதிர்கொள்ளும் திறன் ஒவ்வொருவரின் ஆரோக்கியத்தையும் உடல் தன்மையையும் சார்ந்தது. வயதில் தளர்ந்த நீண்ட கால நோயினால் படுக்கையில் இருப்போர் இந்த வானிலையை எதிர்கொள்வது கடினமாக உள்ளது. வெப்ப அலையின் போது நிலவும் ஈரப்பதம் (humidity) குறைவால் உடலில் நீரிழப்பு ஏற்படுகிறது. இதனால் உடல் வெப்பம் அதிகரித்தல், தலைவலி, எரிச்சல், உடற்சோர்வு, வயிற்றுப்போக்கு ஆகியன உண்டாகின்றன. இதன் தொடர்ச்சியாக மயக்கம், வெக்கை வாதம் (heat stroke) உண்டாகி இறப்பிற்கு வழி வகுக்கிறது

நடவடிக்கைகள்

பிரான்ஸில் 2003-ஆம் ஆண்டு பேரழிவுக்குப் பிறகு உருவாக்கப்பட்ட நான்கு-நிலை வெப்ப எச்சரிக்கை அமைப்பு (heat alert system) இப்போது செயல்படுத்தப் பட்டுள்ளது. டென்மார்க்கில் முதியோர் நலனைக் கண் காணிக்கும் திட்டங்கள் விரிவுபடுத்தப்பட்டுள்ளன. உலக சுகாதார நிறுவனம் குளுமையைக் காப்போம் (KeepCool) எனும் விழிப்புணர்வுப் பிரச்சாரத்தை முன்னெடுத்துள்ளது. 2023-ஆம் ஆண்டு இதுபோன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளே, வெப்ப மரணங்களை சுமார் 80% வரை குறைத்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது.

நீண்ட கால நடவடிக்கைகள்: நகர்ப்புற பசுமையாக்கல், பசுமை இல்ல வாயு வெளியேற்றக் குறைப்பு, மற்றும் அய்ரோப்பிய யூனியன் மட்டத்தில் பணியிட வெப்ப வரம்புச் சட்டம் கொண்டுவர வேண்டும் என தொழிற்சங்கங்கள் கோரிக்கை வைத்துள்ளன. மக்களும் மாறிய வானிலைக்கு ஏற்றவாறு நூலாடைகள், ஈரத்துணிகளை உடலின் மேல் போட்டு உடலின் வெப்பச் சமநிலைப்படுத்தல், வீடுகள் அதிக வெப்பமடைவதைத் தடுக்கத் திரைகளைப் பயன்படுத்தல் போன்ற முயற்சிகள் மூலம் வெப்ப அலையை எதிர்கொள்ள தயாராகி வருகின்றனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *