தந்தை பெரியாரால் ‘திராவிட லெனின்’ என்று புகழாரம் சூட்டப்பட்ட
டி.எம்.நாயரின் நினைவு நாள் இன்று (17.7.1919)
டி.எம்.நாயரின் நினைவு நாள் இன்று (17.7.1919)
கல்வியிலும், உத்தியோகத்திலும் மனுதர்மமே ஆண்டு, மூன்று சதவீத பார்ப்பன ‘உயர் ஜாதி’ வகுப்பினர், 100க்கு 97 பேருக்குக் கல்வி, அரசு உத்தியோகம் தரவொட்டாமல், தாங்களே ஏக போகமாக அவற்றை அனுபவிக்க, அப்போது ஆண்ட வெள்ளைக்கார அதிகாரிகள் சிலரையும் தம் வயப்படுத்திக் கொண்டதை எதிர்த்து எழுந்த உரிமைப்போர்க் குரலில் வெடிப்புதான் பார்ப்பனரல்லாதார் இயக்கம் ‘ஜஸ்டீஸ் கட்சி ’ என்று வெகு மக்களால் அறியப்பட்ட தென்னிந்திய நல உரிமை சங்கமான திராவிடர் இயக்கம்!
அதன் நிறுவனத் தலைவர்களில் மூவர் முக்கியமானவர்கள்.
- சர். பிட்டி தியாகராயர்
- டாக்டர் டி.எம். நாயர்
- டாக்டர் சி. நடேசனார்.
லண்டனில் காது, மூக்கு, தொண்டை மருத்துவராகப் படித்து, சென்னைக்கு வந்து மருத்துவப் பணியும், சமூகப் பணியும் செய்து வந்த டாக்டர் டி.எம்.நாயருக்கு முதலில் சர். பிட்டி தியாகராயருடன் உரசலில் ஈடுபட்டு, பிறகு உயிர் நண்பர்களாகி, சிறந்ததோர் இயக்கம் கண்டனர் – 110 ஆண்டுகளுக்கு முன்பு!
திராவிடர் இயக்கத்தின் மூல வேர் அது!
அவ் வியக்கத்தில் சேராமல், தொடக்கத்தில் காங்கிரஸில் இணைந்து, பார்ப்பனர்களின் போலி நடிப்பைப் புரியாமல் சமூகநீதியைத் ‘தேசியம்’ பெற்றுத் தரும் என்று எதிர்பார்த்து, பிறகு சில ஆண்டுகளில் புரிந்து கொண்டவுடன், காங்கிரஸ் என்ற பார்ப்பனப் புற்றிலிருந்து வெளியே வந்து சுயமரியாதை இயக்கம் கண்டார் தந்தை பெரியார்!
அப்போதே தந்தை பெரியாரின் கடும் ‘‘உழைப்பையும், கொள்கை ஈடுபாட்டையும் புரிந்த டாக்டர் டி.எம். நாயர் அவர்கள் , தந்தை பெரியார் போன்றோர், எங்களை (நீதிக்கட்சியை) எதிர்ப்பவர்கள் எங்கள் பக்கம் உள்ள நியாயத்தை உணர்ந்து வருவார்கள்’’ என்று முன்னோட்டச் சிந்தனையுடன் கூறினார்.
பார்ப்பனரல்லாதார் இயக்கத்தினை நல்ல கொள்கை வடிவமாக்கினார் டாக்டர் நாயர் அவர்கள். பின்னாளில் டாக்டர் டி.எம்.நாயரைத் ‘திராவிட லெனின்’ என்று புகழாரம் சூட்டிப் பெருமைப்படுத்தினார் தந்தை பெரியார்.
‘ஜஸ்டிஸ்’ என்ற ஆங்கில நாளேட்டைத் துவக்க அக் கட்சி ஏற்பாடுகளைச் செய்து, கருணாகரமேனன் என்ற ஆங்கில இதழியல் அனுபவம் மிக்க ஒருவரை ஏற்பாடு செய்த நிலையில், அவரைத் தடுத்துச் சூழ்ச்சி செய்தது ஆரியம்.
உடனடியாகத் தாமே முன் வந்து அந்த நாளேட்டின் ஆசிரியராகி, திட்டமிட்டபடி அதனை வெளி வரச் செய்த ஆற்றல்மிகு ஆளுமைதான் டி.எம்.நாயர்.
தமிழ் நாளேட்டிற்குப் பெயர் என்ன வைப்பது என்ற ஆலோசனையில் ‘திராவிடன்’ என்பதே சரியாக இருக்கும் என்று சரியான யோசனையைக் கூறி அதனை செயல்படுத்த வைத்த பெருமைக்குரியவர் டாக்டர் நாயர்.
அவர் போன்ற தலைவர்கள் தமது குறைந்த வயதில் மரணம் அடைந்தது– அதுவும் கொள்கை உரிமைபற்றி பிரிட்டிஷ் அதிகாரிகளிடம் பேச முயன்று லண்டன் சென்ற நிலையில் அங்கே கடும் நோயினால் பாதிக்கப்பட்டு, இயற்கையெய்திய கொடுமை அந்தக் கால கட்டத்தில் நீதிக்கட்சிக்குப் பெரும் சோதனையானது.
என்றாலும் அது வளர்ந்து, சாதித்துச் சரித்திரம் படைத்ததோடு, அந்த ஆலம் விதை பலமுள்ள மரமாகி, விழுதுகளாகி தனி எழுச்சிச் சரித்திரம் படைத்துள்ளது.
திராவிடர் டி.எம். நாயர் மறையவில்லை –
கொள்கையால் நிறைந்துள்ளார்!
அவரது உரைகள் பெருமைமிக்க, திராவிட உரிமைச் சாசன இலக்கியங்கள் ஆகும்!
வாழ்க டி.எம். நாயர்!
வருக அவர் விரும்பிய புதிய சமூகம்!
– கி.வீரமணி

தமிழ்நாட்டு மகுடத்தின் ஒளிமுத்து
சர்.ஏ. இராமசாமி (முதலியார்) நினைவு நாள் இன்று (17.7.1976)
சர்.ஏ. இராமசாமி (முதலியார்) நினைவு நாள் இன்று (17.7.1976)
‘ஆற்காடு இரட்டையர்கள்’ என்று அகிலம் அறிந்தவர்கள் பெருமைக்குரிய சர்.ஏ. இராமசாமி, இலட்சுமணசாமி (முதலியார்) ஆகியோராவர்.
இவர்களில் சர்.ஏ. இராமசாமி (முதலியார்) அவர்களின் நினைவு நாள் இன்று (17.7.1976).
நீதிக்கட்சியை வளர்த்ததில் அவரது பங்களிப்பு மிகவும் முக்கியமானதாகும்!
அவர் வகித்த பதவிகள், அவரால் புகழ் பெறும் அளவுக்கு அவர் ஒரு சிறந்த ஆளுமையாவார்!
‘ஜஸ்டிஸ்’ நாளேட்டில் அவரது தலையங்கம் ஆங்கில இலக்கிய வரலாற்றுப் பெட்டகம் ஆகும்!
பின்னாளில் காங்கிரஸ் அரசும் கூட பல சிக்கல் நிறைந்த பணிகளைத் திறம்பட நடத்தி வெற்றி பெற, அவரைப் பயன்படுத்தி, வெற்றி கண்டது என்பதற்கு ஆதாரம் தான் அய்.நா. சபையில் காஷ்மீர் பிரச்சினைபற்றி முதலில் கோபால்சாமி அய்யங்காரை அனுப்பி, தோல்வி முகம் காணும் நிலை இருந்தபோது, சர். ஏ. இராமசாமி (முதலியார்) அவர்களை அழைத்து பேச வைத்து வெற்றி கண்டது.
அதுகுறித்தும் அன்றைய முதலமைச்சரான அறிஞர் அண்ணா பேசும்போது, ‘‘அய்.நா. சென்றும் வந்தார்; வென்றும் வந்தார்’’ என்றார்.
தந்தை பெரியாரைத் ‘தமிழ்நாட்டின் ரூசோ’ என்று அழைத்து அவர்தம் தொண்டினை உணர்ந்து மற்றவர் களை உணரச் செய்தார் சர் இராமசாமி (முதலியார்).
தலைசிறந்த நிர்வாகியாகத் திகழ்ந்த, தமிழ்நாட்டு மகுடத்தின் ஒளிமுத்து அவர்.
அவரது புகழ், நமது தலைமுறை களுக்குப் பயன்பட வேண்டிய அரிய பாடம்!
வாழ்க சர்.ஏ. இராமசாமியார்!
– கி.வீரமணி
