மேட்டூர் அருகே 3,600 ஆண்டுகளுக்கு முந்தைய
மேட்டூர், ஜூலை 15- சேலம் மாவட்டம், மேட்டூர் அருகே உள்ள தெலுங்கனூர் காவிரிக் கரையில், தமிழ்நாடு தொல்லியல் துறை சார்பில் கடந்த 90 நாட்களாக அகழாய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இங்கு தோண்டப்பட்ட 30-க்கும் மேற்பட்ட குழிகளில் 3,600 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மனிதர்களின் எலும்புக்கூடுகள் மற்றும் அவர்கள் பயன்படுத்திய இரும்பிலான கத்திகள், ஈட்டிகள், பானைகள், கல்மணிகள், கோடாரி, முதுமக்கள் தாழிகள் உள்ளிட்டவை கண்டெடுக்கப்பட்டுள்ளன.
முக்கியத்துவம்
இந்த எலும்புக்கூடுகளுக்கு அருகே கண்டெடுக்கப்பட்ட எஃகு வாள், இதுவரை இந்தியாவில் கிடைத்துள்ள எஃகு வாள்களின் காலத்தை விட முற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
துருக்கியில் உள்ள டிடிமா என்ற இடத்தில் கண்டெடுக்கப்பட்ட வாளின் வயது 2,500 ஆண்டுகள் என்று கூறப்படும் நிலையில், மேட்டூர் அருகே தெலுங்கனூரில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த வாளின் வயது 3,600 முதல் 5,000 ஆண்டுகள் வரை இருக்கலாம் எனத் தெரியவந்துள்ளது.
சுமார் 60 ஏக்கர் பரப்பளவில் மயானம் மட்டுமே தற்போது கண்டறியப்பட்டுள்ள நிலையில், அந்த மக்கள் வாழ்ந்த நகரப் பகுதி இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.
இந்த அகழாய்வு மூலம் அப்பகுதியில் புதிய கற்கால மனிதர்கள் மற்றும் இரும்பு கால மனிதர்கள் வாழ்ந்ததும், அவர்கள் பயன்படுத்திய உயர் தொழில்நுட்பக் கருவிகளும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.
