15.7.2026
டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* சோனம் வாங்சுக் உடல்நிலை கவலைக்கிடம்: 17 நாள் உண்ணாநிலைப் போராட்டத்தைக் கைவிட வலுக்கும் கோரிக்கை. நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி லடாக்கைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் மேற்கொண்டுள்ள உண்ணாநிலைப் போராட்டம் 17ஆவது நாளை எட்டியுள்ளது. உடல்நிலை மோசமடைந்துள்ள சூழலில், அவர் தனது காலவரையற்ற உண்ணாநிலைப் போராட்டத்தை கைவிட வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்துள்ளன.
* கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்) என்பது குடியுரிமைச் சான்று அல்ல; வெளிநாடு பயணத்திற்காக இந்திய அரசு வழங்கும் பயண ஆவணம் மட்டுமே என்று ஒன்றிய வெளியுறவுத்துறை (MEA) தெரிவித்துள்ளது. மேலும், இந்தியர்களில் சுமார் 8% பேர் மட்டுமே கடவுச்சீட்டு வைத்துள்ளனர் என்றும் கூறியுள்ளது.
* சிபிஎஸ்இ: 9, 10ஆம் வகுப்புகளில் மூன்றாம் மொழி தேர்ச்சி கட்டாயம்! 3ஆவது மொழிப் பாடத்தில் தேர்ச்சி பெறாத மாணவர்களும் 10ஆம் வகுப்புக்கு முன்னேற்றம் செய்யப்படுவார்கள். ஆனால், அதே மாணவர்கள் 10ஆம் வகுப்பு படிக்கும் போது மூன்றாவது மொழிப் பாடத்திலும் தேர்ச்சி பெற வேண்டியது அவசியமாகும்.
தி இந்து:
* 77 ஜாதிகளுக்கான இதர பிற்படுத்தப்பட்டோர் (OBC) தகுதியை உயர்நீதிமன்றம் நீக்கியதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை வங்காளம் திரும்பப் பெற்றது.
* ஆங்கிலத்தை ஒரு இந்திய மொழியாகக் கருத முடியாதா என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. 300 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவில் பேசப்பட்டு, குறைந்தது அய்ந்து மாநிலங்களில் அலுவல் ரீதியான தகவல் தொடர்புக்கு பயன்படுத்தப்படும் ஆங்கிலத்தை, ஜெர்மன், ஸ்பானிஷ், அரபு மற்றும் பிரெஞ்சு போன்ற மொழிகளுடன் இணைத்து, மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) தனது மும்மொழித் திட்டத்தில் ஆங்கிலத்தை ‘தாய் மொழி அல்லாத மொழி’ என வகைப்படுத்தியதை உச்ச நீதிமன்றம் செவ்வாயன்று கேள்வி எழுப்பியது.
தி டெலிகிராப்:
* ‘சுய-பிரகடன விஸ்வகுரு மீது கேள்விக்குறி’: பாகிஸ்தான் அமைச்சருக்கு அமெரிக்க உளவுத்துறை தலைவர் விருந்தளித்ததை அடுத்து பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் கண்டனம். பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் மொஹ்சின் நக்வி, அமெரிக்காவின் புலனாய்வு அமைப்பான எப்.பி.அய். (FBI)-யின் தலைமையகத்திற்கு சென்று அதன் இயக்குநர் காஷ் படேலால் வரவேற்கப்பட்டதைத் தொடர்ந்து, வாஷிங்டனுக்கும் இஸ்லாமாபாத்துக்கும் இடையே வளர்ந்து வரும் “நெருக்கமான உறவு” இந்தியாவுக்கு ஒரு பின்னடைவு என்று கூறி, மோடி அரசின் வெளியுறவுக் கொள்கை மீது காங்கிரஸ் விமர்சனம்.
– குடந்தை கருணா
