சென்னை, ஜூலை 14- பொறியியல் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டில் சிறப்பு பிரிவினருக்கான இணையதள கலந்தாய்வு நேற்று (13.7.2026) தொடங்கியது.
இப்பிரிவில் மாற்றுத் திறனாளி களுக்கான 750 இடங்களுக்கு 159 பேரும், விளையாட்டு வீரர்களுக்கான 38 இடங்களுக்கு 525 பேரும், முன்னாள் ராணுவத்தினரின் குழந்தைகளுக்கான 11 இடங்களுக்கு 14 பேரும் தரவரிசையில் இடம்பெற்றுள்ளனர்.
மாணவர்கள் தாங்கள் விரும்பும் கல்லூரி மற்றும் பாடப் பிரிவை தேர்வு செய்ய நேற்று (13.7.2026) காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை அவகாசம் அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, அவர்களுக்கு தற்காலிக ஒதுக்கீடு வழங்கப்படும். அதை அவர்கள் இன்று (14ஆம் தேதி) மாலை 5 மணிக்குள் உறுதிசெய்ய வேண்டும்.
அவர்களுக்கான கல்லூரி ஒதுக்கீட்டு ஆணை நாளை (15ஆம் தேதி) காலை 7 மணிக்கு வெளியிடப்படும். அந்த ஆணையை மாணவர்கள் இணைய தளத்திலேயே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இதைத் தொடர்ந்து, சிறப்பு பிரிவினருக்கான பொதுக் கலந்தாய்வு ஜூலை 15 (நாளை) முதல் 18ஆம் தேதி வரை இணையவழியில் நடைபெறும். அதன்பிறகு, பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு இணைய வழியில் ஜூலை 20ஆம் தேதி தொடங்கி ஆக.30ஆம் தேதி வரை தொடர்ந்து 40 நாட்கள் நடைபெற உள்ளது.
துணை கலந்தாய்வு உள்ளிட்ட அனைத்து நடைமுறைகளும் செப்.10ஆம் தேதிக்குள் முடிக்கப்படும் என்று தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.
