தமிழர் தலைவர் அறிவுரை
தமிழ்நாடு முழுவதும் 50 இடங்களில் ‘நூல் அறிமுக விழா’ – அரங்கக் கூட்டங்கள் 2026 ஜூலை 18 மற்றும் 19ஆம் தேதிகளில் நடைபெறவிருக்கின்றன.

நாம் எழுதிய, ‘ஆர். எஸ். எஸ். என்னும் டிரோஜன் குதிரை’ புத்தகத்தைப் பற்றி இயக்கப் பேச்சாளர்கள், வழக்குரைஞர்கள், பேராசிரியர்கள் நூல் அறிமுக உரையினை ஆற்ற இருக்கின்றார்கள்.
அய்ந்து ஆண்டுகளுக்கு முன்னால் 2021ஆம் ஆண்டு வெளிவந்த இந்நூல் பரவலாக வாசகர்களால் பேசப்பட்டது.
புத்தக அறிமுக விழாக் கூட்டத்தில் பேச்சாளர்கள் கருத்துக்களைத் தெளிவாக எடுத்துரைக்க வேண்டும்.

* நூலினை முழுமையாகப் படித்து, கருத்துகளை உள்வாங்கிக் கொண்டு, தங்களுக்குத் தாங்களே தெளிவுபடுத்திக் கொண்டு, பார்வையாளர்கள் எழுப்புகின்ற வினாக்களுக்கு விடை நல்கும் வண்ணம் திறன் பெற்றிருக்க வேண்டும்.
* நூலின் நோக்கத்தை – உருவகமான தலைப்பு வெளிப்படுத்துவதைப் பார்வையாளர்களுக்குப் புரியவைக்க வேண்டும்.
* ஒவ்வொரு அத்தியாயமும் நூலின் மய்யக் கருத்துக்கு வலுச் சேர்ப்பதை எடுத்துரைக்க வேண்டும்.
* இந்து மகாசபை 1915ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது; மதவெறி வெளிப்படையாகத் தெரியாத வண்ணம், மதவாதத்தை, விஷத்தினை மறைத்து, ‘தொண்டு’ என்கின்ற சர்க்கரைப் பூச்சினைத் தடவி 1925ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட அமைப்புதான் ஆர்.எஸ்.எஸ். (ராஷ்டிரிய ஸ்வயம் சேவக்) என்பதை மக்களுக்குத் தெளிவாக விளக்க வேண்டும்.
* ஆரிய சமாஜம், ஹிந்து மகா சபா, ஆர்.எஸ்.எஸ். இயக்கங்களை ஏற்படுத்த வேண்டிய அவசியம் பார்ப்பனர்களுக்கு ஏற்பட்டதன் பின்புலத்தை எடுத்துரைக்க வேண்டும்.
* மகாராஷ்டிரா மாநிலத்தில் 1827ஆம் ஆண்டு பிறந்த ஜோதிராவ் புலே, சமூகத்தில் ஏற்படுத்திய மகத்தான விழிப்புணர்வும், ஜாதி ஒழிப்புச் சிந்தனைகளும்,
* ‘சத்திய சோதக் சமாஜ்’ என்ற அந்நாளைய சுயமரியாதை இயக்க முன்னோடி – இயக்கத்தின் புரட்சிகரமான செயல்பாடுகளும்,
* பார்ப்பனர்களின் ஆதிக்கத்தை எதிர்த்து நடத்தப்பட்டப் போராட்டங்களும்,
* போராட்டங்களில் பங்கேற்க ஒடுக்கப்பட்ட மக்கள், குன்பிகள், (மராத்திய மக்களின் ஒரு பகுதியினர்).
* கைவினைஞர்கள், மராட்டியப் போர் வீரர்கள், விவசாயிகள் என அனைத்துத் தரப்பு மக்களையும் பார்ப்பனர் அல்லாதவர்களின் ஒற்றுமை என்ற நோக்கத்தோடு பரந்த கூட்டணி போல உருவாக்கியத் திறமும்,
* கல்வியின் அவசியத்தை ஒடுக்கப்பட்டோரின் உள்ளத்தில் பதிய வைத்ததும், கல்வி வாய்ப்பை உருவாக்கியதும், பெண் உரிமையை வலியுறுத்தியதும்,
* ‘பிராமண’ மத அதிகாரத்தின் சட்ட பூர்வத் தன்மையை மறுத்ததும்,
* பிரிட்டிஷ் ஆட்சியைப் பார்ப்பனர் அல்லாதவர்களின் நலனுக்காகப் பயன்படுத்தியதும், இவையாவும் இணைந்து மக்கள் இயக்கமாக எழுச்சி பெற்றதும், பார்ப்பனர்களுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தியது. பார்ப்பன ஆதிக்கம் தகர்ந்து போகும் நிலை ஏற்பட்டது. அதனைத் தடுப்பதற்காக ஹிந்து மகாசபா போன்ற அமைப்புகளை ஏற்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டது என்ற பின்புலத்தையும் எடுத்துரைக்க வேண்டும்.
* பார்ப்பனர்களின் நலனை இந்துக்களின் நலன்போல காட்டி நடிப்பதுதான் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் அடிப்படை என்பதை மக்களுக்குப் புரிய வைக்க வேண்டும்.
* சமூக நீதியில் ஆர்.எஸ்.எஸ்.இன் இரட்டை வேடத்தை அம்பலப்படுத்த வேண்டும்.
* புத்தகத்தில் பல்வேறு அத்தியாயங்களில் காணப்படுகின்ற முக்கியக் கருத்துகளை மக்களுக்குப் புரிகின்ற வகையில் எளிய நடையில் மனதில் பதியுமாறு எடுத்துரைக்க வேண்டும்.
* “ஆர்.எஸ்.எஸ். பற்றி…’ என்ற தலைப்பில் 32 பக்கங்களைக் கொண்ட ஒரு சிறு நூலும் அரங்கக் கூட்டங்களில் விற்பனை செய்யப்பட வேண்டும். ஆர்.எஸ்.எஸ். பற்றி விளக்குவதற்காக 45 ஆண்டுகளுக்கு முன்பே கேள்வி-பதில் வடிவத்தில் உருவாக்கப்பட்ட இந்தப் புத்தகம் பார்வையாளர்கள் மனதில் எளிதில் பதியும் தன்மை கொண்டது.
* உணர்ச்சிகளுக்கு இடம் அளிக்காமல் அறிவுப்பூர்வமாகப் பேச வேண்டும்.
* தனிநபர் விமர்சனமோ தாக்குதலோ அறவே கூடாது.
* தமக்குத் தெரிந்தது அனைத்தையும் சொல்ல வேண்டும் என்று நினைக்காமல், தலைப்பை விட்டு விலகாமல், நாற்பது நிமிடம் சொற்பொழிவை அமைத்துக் கொள்ளவும்.
