புதுடில்லி, ஜூலை 14 மகாராட்டிராவில் நந்திகிராம் விரைவு ரயிலின் குளிர்சாதனப் பெட்டி ஒன்று சொகுசு விடுதியின் ‘ஹனிமூன் சூட்’ போல அலங்கரிக்கப்பட்டு, பயணச்சீட்டுப் பரி சோதகர் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட விவகாரம் அண்மையில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இந்தப் பரபரப்பு அடங்குவதற்குள், தற்போது ஓடும் ரயிலில் ஹோமம் வளர்த்துப் பூஜை செய்யப்பட்ட மற்றொரு காட்சிப் பதிவு இணையத்தில் வெளியாகி புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது.
ஓடும் ரயிலி்ல பூஜையாம்!
சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வரும் இந்தக் காணொலி காட்சிப் பதிவில், ஓடும் ரயில் பெட்டியின் தரை யில் அமர்ந்து பூசாரி ஒருவர் ஹோமம் வளர்த்து, தீ மூட்டி மதச் சடங்குகளைச் செய்யும் காட்சிகள் பதிவாகியுள்ளன. ரயில் பாதுகாப்பு விதிகளை மீறி, பெட்டிக்குள் தீ மூட்டி பூஜை செய்யப்பட்ட தற்கு இணையவாசிகள் பலரும் தங்களது கண்டனங்களையும், பாதுகாப்புக் கவலைகளையும் பதிவு செய்து வந்தனர்.
ரயில்வே நிர்வாகத்தின் விளக்கம்
இந்த காட்சிப் பதிவு இணையத்தில் பெரும் விவாதப் பொருளாக மாறியதை அடுத்து, வடக்கு ரயில்வே தனது அதிகாரப்பூர்வ ‘எக்ஸ்’ (ட்விட்டர்) பக்கத்தில் இதுதொடர்பான விளக்கத்தை அளித்துள்ளது.
சாதாரண பெட்டி அல்ல; இந்த மதச் சடங்கு மற்றும் பூஜை சாதாரண பயணிகள் பயணிக்கும் பொதுப் பெட்டி யிலோ அல்லது வழக்கமான ஏசி பெட்டியிலோ நடைபெறவில்லை.
தனியார் சலூன் கார்: இது அய்ஆர்சிடிசி (IRCTC) மூலம் தனிநபர் ஒருவரால் முன்பதிவு செய்யப்பட்ட ‘சலூன் கார்’ (Saloon Car) எனப்படும் அதிநவீன சொகுசு ரயில் பெட்டியாகும்.
பயண விபரம்: கடந்த ஜூலை 10 அன்று புதுடில்லியில் இருந்து மும்பைக்கு இயக்கப்பட்ட ‘பஸ்சிம் எக்ஸ்பிரஸ்’ ரயிலுடன் இந்த சிறப்பு சலூன் கார் பெட்டி இணைக்கப்பட்டிருந்தது.
என்னென்ன வசதிகள்?
பொதுவாக ரயில்வே உயர் அதி காரிகள் மற்றும் விஅய்பிக்கள் (VIP) பயணத்திற்காகப் பயன்படுத்தப்படும் இந்த ‘சலூன் கார்’ பெட்டிகள், தற்போது பொதுமக்களும் கட்டணம் செலுத்தி முன்பதிவு செய்யும் வகையில் அய்ஆர்சிடிசி மூலம் வாடகைக்கு விடப்படுகின்றன.
இந்த குறிப்பிட்ட பயணத்திற்காக ஜூலை 8 அன்றே முன்பணமாக
ரூ. 3,08,580 செலுத்தப்பட்டுள்ளது.
இந்த சொகுசுப் பெட்டியில் குளிரூட்டப்பட்ட படுக்கையறைகள், சிறிய சமையலறை, சொகுசு வர வேற்பறை, உணவருந்தும் அறை மற்றும் இணைக்கப்பட்ட குளியலறைகள் என ஒரு நடமாடும் வீட்டைப் போன்ற அனைத்து வசதிகளும் உள்ளன.
தனிநபர் ஒருவர் லட்சக்கணக்கில் கட்டணம் செலுத்தி, முழுமையாகத் தங்களுக்குச் சொந்தமாகப் பதிவு செய்த தனிப்பட்ட சொகுசுப் பெட்டியிலேயே இந்தப் பூஜை நடத்தப்பட்டுள்ளது என்று ரயில்வே நிர்வாகம் தெளிவு படுத்தியுள்ளது.
இது எவ்வளவுப் பெரிய ஆபத்தான காரியம்!
