ஜெய்ப்பூர், மே 17- நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் சிக்கனம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. ஆனால், சமீபகாலமாக அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் செய்யும் சில செயல்கள் விழிப்புணர்வை ஏற்படுத்துவதை விட, பொதுமக்களிடையே பெரும் நகைச்சுவையாகவும் விவாதப் பொருளாகவும் மாறி வருகின்றன.
கான்வாய் பின் தொடர
பேருந்து பயணம்!
பேருந்து பயணம்!
சில நாட்களுக்கு முன்பு, ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி “நான் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காகப் பொதுப் பேருந்தில் அலுவலகம் செல்கிறேன்” என்று கூறி பேருந்தில் பயணம் செய்தார். ஆனால், அவர் பயணித்த அந்த அரசுப் பேருந்திற்குப் பின்னால் அவருடைய 12 பாதுகாப்பு கான்வாய் வாகனங்கள் அணிவகுத்துச் சென்றது பெரும் வேடிக்கையாகப் பார்க்கப்பட்டது. “இதற்குப் பேசாமல் அவர் தனது காரிலேயே சென்றிருக்கலாம், இன்னும் பெட்ரோல் மிச்ச மாகியிருக்கும்” என சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் விமர்சித்தனர்.
திருடனைப் பிடிக்க சைக்கிளா? ராஜஸ்தான் காவல் துறையினரின் விநோத ரோந்து!
இதன் தொடர்ச்சியாக, தற்போது ராஜஸ்தான் மாநிலத்தில் உயர் அதிகாரிகள் முதல் சாதாரண காவலர்கள் வரை கார், ஜீப் மற்றும் பைக்குகளைத் தவிர்த்துவிட்டு சைக்கிளில் செல்ல வேண்டும் என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, இரவு நேர ரோந்துப் பணிகளுக்குக் காவலர்கள் சைக்கிளில் செல்லும் ஒளிப்படங்களும் காட்சிப் பதிவுகளும் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
இந்தப் படம் பொதுமக்கள் மத்தியில் கடுமையான கேள்விகளை எழுப்பியுள்ளது: சமூக விரோதிகளோ அல்லது திருடர்களோ ஒரு குற்றத்தைச் செய்துவிட்டு அதிவேக காரிலோ அல்லது பைக்கிலோ தப்பிச் செல்லும்போது, காவலர்கள் சைக்கிளில் மிதித்துக் கொண்டு அவர்களை எப்படிப் பிடிக்க முடியும்? அவசரக் காலங்களில் குற்றக் களத்திற்கு விரைவாகச் செல்ல வேண்டிய காவல்துறை, இப்படிச் சைக்கிளில் செல்வது பொதுமக்களின் பாதுகாப்பைப் பலவீனப்படுத்தாதா?
பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் கண்டனம்
பெட்ரோல் டீசல் சிக்கனமாக பயன்படுத்துங்கள் என்று மோடி கூறியதும் அதை விளம்பரத்திற்காகச் செயல்படுத்தும்போது, அதில் உள்ள நடைமுறைச் சாத்தியக்கூறுகளை அதிகாரிகள் யோசிக்க வேண்டாமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
“காவல்துறை என்பது மக்களின் பாதுகாப்பிற்கான ஒரு முக்கியப் பிரிவு. வெற்று விளம்பரத்திற்காகவும், அரசியல்வாதிகளின் பாராட்டுகளைப் பெறுவதற்காகவும் தங்களின் முதன்மைக் கடமையை மறந்துவிட்டு, இது போன்ற கூத்துகளில் ஈடுபடுவது நியாயமா?” என்று சமூக ஆர்வலர்கள் பலரும் தங்களது கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.
நிர்வாகத்தினற்ற அரசு “கைதட்டு!” என்றால் மறுபேச்சு கேட்காமல் கைதட்டுவதும், “விளக்கு ஏற்று!” என்றால் விளக்கேற்றுவதும் நடைமுறைக்கானதாகிவிட்டது.
தேர்தலுக்காக பொருளாதார நெருக்கடியை மறைத்து தேர்தல் முடிந்த பிறகு ஊருக்கு உபதேசம் கூறிய மோடி அதனை அப்படியே செயல்படுத்தும் பாஜக ஆளும் அரசுகள் அடிக்கும் கூத்துகள் பெரும் நகைப்பை உருவாக்கி வருகிறது.
